பசு வதைத் தடை நல்லது தான். தர்ம சம்பிரதாயம், கலாச்சார விஷயமாக மட்டும் இல்லாமல் புவி வெப்ப மயமாதலையும் தடுக்க உதவும் என்பது வரை சரியான ஒரு முடிவாகவே நான் நினைக்கிறேன்.
ஆனால், பசு வதை மட்டும் தடை என்பது என்ன தர்மம் ? ஆடு, கோழி முதலானவற்றை வதை செய்வது நல்லதா ? அவையும் ஜீவராசிகள் தானே ? அவற்றின் வதையும் தடுக்கப்பட வேண்டியது அல்லவா ?
இப்படித்தான் ஜெயலலிதா ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிடத் தடை விதித்தார். ஜாதி அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு வந்தவுடன் அதைத் தொடர்ந்து சில தேர்தல் தோல்விகளும் வந்ததால் அதைக் கைவிட்டார்.
ஒட்டகம் பலியிடப்பட வேண்டும் என்று சில மதத்தினர் கேட்கின்றனர். ஒட்டகப் பலியை ராஜஸ்தான் அரசு நிறுத்தியதைத் தொடர்ந்து சிலர் தடையை நீக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
நாம் உட்கொள்ளும் உணவை இறைவனுக்குப் படைப்பது நமது பண்பாடு. அவரவர் உட்கொள்ளும் உணவை அவரவர் இறைவருக்குப் படைப்பது என்று நமது பாரதப் பண்பாட்டில் உள்ளது.
“அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் ” என்று நம்மாழ்வார் கூறுகிறார்.
மக்களின் மன நிலைக்கு ஏற்ப அவரவரது இறைவர்கள் அமைகிறார்கள் என்கிறார் அவர். மக்களின் அறிவு, அவரது பழக்க வழக்கங்கள் இவற்றிற்கு ஏற்ப அவர்களது இறைவர்களும் அமைகின்றனர். மக்களின் இயல்புகளுக்கு ஏற்ப அவர்களது இறைவர்களின் இயல்புகளும் அமைகின்றன. மாமிச உணவு உட்கொள்பவர்களின் இறைவர்களும் மாமிசம் உண்கின்றனர். அவ்வளவே.
இந்த நாட்டில் இறை வழிபாடோ, இறைத் தன்மையோ, ஆன்மீக உணர்வோ, ஆன்மீகப் புரிதல்களோ இல்லாத, இவை எதுவுமே தேவை இல்லை என்று பிதற்றுகிற அரசியல் கூட்டங்கள் மலிந்து வருகின்றன. இவை முற்போக்கு என்னும் பெயரில் வாதிடுகின்றன. இவற்றிற்கு ஆங்கில நாளேடுகள் ஆதரவளிக்கின்றன.
ஒட்டக பலி தேவையா அல்லது பசு வதைத தடை நீக்கம் தேவையா என்பது அல்ல இந்தப் பதிவின் வாதம். போலி மதச்சார்பின்மையின் பெயரில் நடைபெறும் ஊடக வெறியாட்டங்களின் மீது ஒரு வெளிச்சப் பார்வை ஏற்படுத்துவதே இப்பதிவின் நோக்கம்.
புலால் உண்ணாமையை வற்புறுத்திய வள்ளுவரைத் தெய்வமாக வழிபடும் நமது நாட்டில் மாடு அறுக்கும் போராட்டம், கோழி அறுக்கும் போராட்டம் என்று பெரியவர்கள் என்று தங்களை அறிவித்துக்கொள்பவர்கள் தெரிவிக்கிறார்கள். பெரியவர்களின் அழகு பல் இளிக்கிறது.
இந்த அறிவிப்புகள் போதாது என்று தாலி அறுக்கும் போராட்டம் என்று ஒன்றை அவர்கள் சொல்கிறார்கள். பகுத்தறிவைப் பறை சாற்றுகிறார்களாம். மொத்த அபத்தங்களின் பேருருவம் அது.
அறுப்பது, கழற்றுவது, கொளுத்துவது என்பதெல்லாம் போக ஏதாவது உருவாக்கியுள்ளார்களா என்று பார்த்தால் னாங்கு வரிகளுக்கு மேல் தமிழ் படிக்க முடியாத இரு தலைமுறைகளை உருவாக்கியுள்ளார்கள். இலக்கியம் என்பது இன்று ஒன்றரை அடி நக்கல் சொற்றொடர்களாகவும், முகநூலில் வடிவேலுவின் பல விதமான படங்களாகவும் பரிமளிக்கிறது என்பதே நமது தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியாக உள்ளது.
கவிதை என்ற பெயரில் இப்படி எழுதினால் புதுக்கவிதை என்று பாராட்டி விருது வழங்கும் ஒரு கூட்டமாக தமிழச் சமுதாயத்தை உருவாக்கியதை விட இப்பெரியவர்கள் என்ன செய்தார்கள் என்று புரியவில்லை.
‘கூவம் நதிக்கரையினிலே’ நூலில் சோ புதுக்கவிதையைக் கேலி செய்து ஒரு கவிதை எழுதினார்:
‘கரப்பான் பூச்சி
பக்கெட்டில் விழுந்தது.
பக்கெட் என்ன செய்யும் ?
யோசிக்கிறேன். கரப்பான்
பூச்சிதான் என்ன செய்யும் ?’
இப்படி எழுதிவிட்டு இதில் சமுதாயப் பார்வை உள்ளது, சமூகக் கோபம் உள்ளது என்றெல்லாம் பிதற்றுவதை கவிதை அறிதல் என்று சில குழுக்கள் கொண்டாடுகின்றன. நமது தரத்தை இவ்வளவு கீழே கொண்டு சென்றதைத் தவிர முற்போக்கு முன்னணி என்ன செய்தது ?
இதைப்பற்றி எல்லாம் எழுதினால் சனாதனி என்று சொல்வார்கள் என்பதால் பலரும் இதை எல்லாம் எழுதுவதில்லை. எனக்கு இந்த பயம் இல்லை. நான் சனாதனியாகவே இருந்துகொள்கிறேன். ஊருக்கு நல்லதும் உண்மையும் சொல்வது மட்டுமே ‘ஆ..பக்கங்களின்’ தர்மம்.
Leave a reply to parthasarathy krishnasamy Cancel reply