மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று நினைத்திருந்தேன். அது இல்லை என்று ஆனது இந்த முறை. ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது தேரழுந்தூர். கம்பர் கோட்டத்தில் தனியாகக் கம்பர் நின்றிருந்தார். துணைக்கு ஒரு சில ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தத்ன.
1982ல் பெரும் பொருட்செலவில் கட்டப்பட்ட கம்பர் கோட்டம் இன்று திருமண மண்டபமாக மாறியுள்ளது. ‘கேளடி கண்மணி’யில் இருந்து பாடல் ஒலிக்க அதைக் கேட்டுக்கொண்டு நின்றிருந்தார் கம்பர். எம்.ஜி.ஆர். அரசு கம்பருக்குக் கோட்டம் அமைக்க வேண்டி உண்ணாவிரதம் இருந்த பழைய தமிழாசிரியர்களை நினைவு கூர்ந்தேன்.
1982-ல் இந்த இடம் இருந்த நிலை என்ன? என்ன படாடோபம், என்ன மேளச் சத்தம் ? கம்பருக்கு விழா எடுத்துப் பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கவிதை வாசிப்புகள் என்று புலவர் கீரன், கி.வா.ஜ, செல்வகணபதி, புலவர்.இராமபத்திரன், மு.மு.இஸ்மாயில் என்று அன்று அணிவகுத்து கம்பரமுதம் அளித்த நிலை என் நினைவில் மீண்டும் தோன்றியது. அமர இடம் இல்லாமல் மக்கள் வீதிகளில் கூட நின்றிருந்தனர். இன்று நான் மட்டும், தனி ஒருவனாக வீதியில் நின்றவாறு கம்பன் சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை அன்று மேடையில் பேசியவர்களும் அரூபமாக என்னுடன் நின்று கொண்டிருந்தார்களோ! இருக்கலாம். ஒரு முறை வந்தால் மீண்டும் வரச் செய்யும் ஈர்ப்பு கொண்டது தேரழுந்தூர்.

கம்பர் கோட்டத்தில் நிற்க மனமில்லாமல் ‘கம்பர் மேடு’ என்று அழைக்கப்பட்ட கம்பர் வாழ்ந்த இடம் நோக்கிப் பயணித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்றது. ஏதாவது மாறி இருக்காதா என்கிற ஏக்கம். செல்லும் போதே மனம் ‘செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தியது. கம்பர் மேட்டுக்கு எப்போது போனாலும் மனதில் ஒரு பெருத்த சோகம் ஏற்படும். இம்முறையாவது அப்படி இல்லாமல் இருக்க வேண்டுமே என்று மனம் விரும்பியது.
நுழைய வேண்டிய சந்தை விட்டு விலகி அடுத்த சந்தில் நுழைய முற்பட்டேன். அங்கிருந்த அம்மாளிடம் கம்பர் மேடு போகும் வழி பற்றி விசாரித்தேன். என்னை மேலும் கீழும் பார்த்தவர் முகவாயைத் தோளில் இடித்துச் சென்றார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
கம்பர் மேடு என்று அழைக்கப்பட்ட இந்த இடம் இனி கம்பர் காடு என்று அழைக்கப்படலாம் என்று தோன்றியது. கட்டணம் வசூலிக்காத கழிப்பறையாக, பரிதாபமாக நின்றிருந்தது கம்பர் மேடு.

மாபெரும் இலக்கியமான கம்ப இராமாயணத்தை நமக்கு அளித்து, இராமனின் புகழ் பாட இன்றும் நமக்கு வாய்ப்பளித்த கம்பன் வாழ்ந்த இடம் இதுவே. மூன்று வருடங்களுக்கு முன்பு சென்ற போது இருந்ததை விட இப்போது ஒரே ஒரு முன்னேற்றம் – கம்பர் மேட்டைச் சுற்றி இரண்டடி அளவு சுவர் எழுப்பியுள்ளார்கள். அதனால் என்ன பயன் என்று தெரியவில்லை.
மூன்று வருடங்கள் முன்பு இருந்தது போலவே ஆடுகளும் நாய்களும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அப்பகுதி மக்களின் காலைக் கடன்கள் கழிப்பிடமாகக் கம்பர் மேடு இன்றும் பயன்பாட்டில் உள்ளது. ‘கம்பன் என்னும் மானுடன் வாழ்ந்ததும்..’ என்று இறுமாந்து சொன்ன பாரதி இன்று இருந்திருந்தால் ரயிலில் தலையை விட்டிருப்பான்.

காயத்தில் அவமதிப்பும் சேர்வது போல ‘இந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது- பாதுகாக்கப்பட்ட பகுதி’ என்று உடைந்து போன பதாகை உள்ளது. இங்கே என்ன கட்டுப்பாடு செய்கிறார்கள், எதைப் பாதுகாக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை மனித மிருகக் கழிவுகளைப் பாதுகாக்கிறார்களோ!

நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை அரசு பல பெரிய வண்டிகளைக் கொண்டு வந்து இந்த மேட்டை அகழ்வாராய்ச்சி செய்துள்ளார்கள். இங்கிருந்து பல பழைய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்று சில ஆண்டுகளுக்கு முன் காலமான 86 வயதான என் பாட்டி சொல்லியுள்ளார். அவரது சிறு வயதில் இவை நடந்தனவாம்.
கம்பர் மேடு பகுதிக்குள் நுழைய முற்பட்ட போது அங்கிருந்த நாய்கள் என்னை விரட்டி அடித்தன. கம்பன் வாழ்ந்த இடத்திற்குக் காவல் நாய்கள் தான் போல. ‘ஓ மனிதனே, நீ பாதுகாக்கிற அழகை விட நாங்கள் நன்றாகப் பாதுகாப்போம்,’ என்று அந்த நாய் கூறுவது போல் தோன்றியது.
வால்மீகியின் இராமாயணத்தை அப்படியே எழுதாமல் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒட்டி நாமெல்லாம் நெஞ்சு நிமிர்த்தி நிற்கும்படி இராம காதை எழுதிய கம்பன் வாழ்ந்த இடத்தை கழிப்பிட மேடாக வைத்துள்ளது தமிழரசுகள் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசுகளின் தலையில் குப்பைக் கிரீடம் வைத்தது போல் என்று எனக்குத் தோன்றியது.
மதுபானம் விற்கும் அரசும் சாதீயம் பேசும் எதிர்க்கட்சிகளும் உள்ள வரை கம்பர் மேடு இப்படி இருப்பதில் வியப்பில்லை தான். ‘மு.க’வில் முடியும் எந்தக் கட்சியும் இதனைச் சரி செய்யப் போவதில்லை. திருக்குறளை வளர்க்கப் பாடுபடும் பா.ஜ.க.வின் தருண் விஜய்யின் பார்வையாவது தேரழுந்தூரின் கம்பர் மேட்டின் மீது பட வேண்டுமே என்று ஆமருவியப்பனை வேண்டிக்கொண்டேன். கம்பர் மேட்டைப் பார்த்து அழுதுவிட்டு வெளியேறினேன். ஆமருவியப்பனின் தேர் வந்துகொண்டிருந்தது. நல்ல சகுனம் என்று தோன்றியது.
ஆமருவியப்பன் கோவிலுக்குச் செல்லலாம் என்று அதனை நோக்கி நடந்தேன். முதலில் ‘தர்ச புஷ்கரணி’ என்னும் குளம் நீர் நிரம்பிய நிலையில் பார்க்கவே பரவசமாக இருந்தது. இந்தக் குளம் இருந்த நிலை என்ன ? ஆடுகளும், சிறுவர்களும் விளையாடும் இடமாக, பாழ்பட்டு இருந்த இந்தக் குளம் இன்று நீர் நிரம்பி வழிவது காணக் கண் கோடி வேண்டும். இந்தக் குளம் இப்படி மாறுவதற்குக் காரணமான மூன்று முதியவர்களுக்கு நம் தலைமுறை பெரும் கடன் பட்டிருக்கிறது.
இந்து சமய அற நிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் இன்று கோவில் நல்ல நிலையில் உள்ளது. 2010-ம் ஆண்டு நடைபெற்ற குட முழுக்கு நிகழ்விற்குப் பின் பக்தர்கள் வரவு அதிகரித்துள்ளது.
குளம் முன்னர் இருந்த நிலையும் இப்போது உள்ள நிலையும்.


குளம் மட்டுமா? கோவிலும் தான். பாழ்பட்டுப் போன கோவிலைத் தூக்கி நிறுத்திய அதே மூவர் நம் வணக்கத்துக்குரியவர்கள். கோவில் முன்னம் இருந்த நிலையும் தற்போது உள்ள நிலையும்.

பெருமாள் கோவில் முடித்து மாலை வேதபுரீசுவரர் கோவிலுக்குச் சென்றேன். எந்த மாற்றமும் இல்லாமல், வரலாற்று நிகழ்வுகளுக்குச் சான்றாக அதே அமைதியுடன் நின்றுகொண்டிருந்தது முதற்சோழர் காலக் கோவில். ‘கொஞ்சம் வரலாறு கொஞ்சம் சுவாசம்‘ என்னும் முந்தைய பதிவு இக்கோவில் பற்றி எழுதப்பட்டதே.

பல ஆயிரங்கள் செலவிட்டு பாலி, ஹாங்காங் என்று விடுமுறை சுற்றுப் பயணம் செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. சில நூறுகளிலேயே நமது வரலாற்றை அறிய முடியும். ஒரு முறை சென்று வாருங்கள்.
கம்பன் வானிலிருந்து வாழ்த்துவான்.
Leave a reply to T P Sampath Cancel reply