The side that is not spoken about, generally.

10 வருஷங்களுக்கு முன் தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவிலில் தாயார சன்னிதியில் பூமியில் புதைக்கப்பட்ட உண்டியலில் பல ஆயிரம் வருஷ வைர வைடூரியங்கள் இருப்பதாக யாரோ ஒரு புண்ணியவான் புரளி கிளப்பி விட, அது வரை அப்படி ஒரு கோவில் இருப்பதையே அறியாத இந்து அற நிலையாத்துறை உயிர்த்தெழுந்து ஆ.டி.ஓ, ரெவென்யூ இன்ஸ்பெக்டர், போலீஸ் மற்றும் அவர்கள் பரிவாரங்கள் புடைசூழ மத்தளம் கொட்ட, விரிசங்கம் நின்றூத, ‘பொக்கிஷத்தை’ கைத்தலம் பற்றக் கனாக்கண்டு ஜீப், கார் முதலிய ரத கஜ வாஹனங்களின் வந்து சேர்ந்தார்கள். ஊர் மக்களைக் காட்டிலும் இவர்கள் கூட்டம் அதிகமாக இருக்க, நான்கு பேருக்கு மேல் பார்த்தறியாத ஊரின் பைரவர்கள் ( நாய்கள் ) அரண்டு அடித்துக்கொண்டு கோவிலுக்குப் பின்னால் நந்தவனத்தில் ஓடி ஒளிந்து கொண்ட நல்ல நாளில் ஆர்.டி.ஓ. தலைமையில் உண்டியல் உடைக்கலாம் என்று முடிவானது..

எதற்கும் இருக்கட்டுமே என்று பாம்பாட்டிகளையும் உடன் அழைத்து வரச் செய்தார்கள்.

உண்டியல் லேசில் அசையவில்லை. பெரிய கடப்பாரைகள் கொண்டுவந்து ஆறு பேர் சேர்ந்து பூமியில் இருந்து பெயர்த்து எடுத்தார்கள். அது ஒரு மிகப்பெரிய கருங்கல் பத்தாயம் போல் இருந்தது. அதன் உள் என்ன இருக்குமோ என்ற கவலையில் மக்களை நகர்ந்து நிற்கச் செய்து அதனுள் மெதுவாக ஒரு கம்பியை இறக்கினார்கள். ‘ணங்’ என்ற ஒலி கேட்டதும் ஆர்.டி.ஓ. குதூகலமடைந்தார். சோழ ரத்தினங்கள் அவர் கண் முன் தோன்றின.

கிணறு இறங்குபவர்கள் இருவரை அழைத்து உள்ளே இறங்கிப் பார்க்கச் சொல்லலாம் என்று முடிவானது. அதற்குள் ஏன் அதை ஒரு பக்கமாக சாய்த்துப் பார்க்க்லாமே என்று பெரியவர் ஒருவர் சொன்னார். 4 பேர்  அந்தக் கருங்கல் பேழையை நகர்த்தி ஒரு பக்கமாக சாய்க்க முயற்சித்தனர்.

ஊரே ஒரு முறை மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டிருந்தது.

‘படீர்’ என்று என்று ஒரு சப்தம். மக்கள் அலறி அடித்து ஓடினர். பேழையை நகர்த்தியவன் ஒருவன் கை தவறி விட்டுவிட்டான்.

ஆயிரம் காலப் பேழை என்று நம்பப்பட்ட அந்தக்கருங்கல் பத்தாயம் உடைந்து விழுந்தது. உள்ளேயிருந்து ‘கல கல’ என்று பல நாணயங்கள் தெறித்து விழுந்தன. சில சங்கிலிகள், சில கொலுசுகள், வளையல்கள், உடைந்த பென்சில், சில ரப்பர், சிலேட்டுக் குச்சி. மஞ்சள் கலர் ரிப்பன், மூக்குக்கண்ணாடியில் ஒரு பக்க கம்பு முதலியன அவற்றுள் சில.

அப்படியே அள்ளிக்கொண்டு சென்றது துறை. பொக்கிஷங்களாம்.

அரைமணி நேரம் கழித்து சன்னிதி வாசலில் நானும் செங்கமலவல்லித் தாயரும் உடைந்த அந்தக் கருங்கல் பேழையைப் பார்த்தபடி நின்றிருந்தோம்.

3 responses

  1. திண்டுக்கல் தனபாலன் Avatar

    அந்தப் புண்ணியவானுக்கு புண்ணியமாவது கிடைக்குமா…? ம்…

    Like

  2. SASIKUMAR Avatar
    SASIKUMAR

    நீங்கள் விவரித்திருப்பதைப் பார்த்தால் தேரழுந்தூர் இன்னும் நல்ல கிராமம் போல தோன்றுகிறது.. மர்மதேசம் சித்தேஸ்வரர் கோயில் கிராமம் போல… வந்து தரிசிக்க வேண்டும்..

    அறநிலையத்துறையின் அந்தாதி பற்றிய வீடியோ..

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      அவசியம் வாருங்கள்

      Like

Leave a reply to Amaruvi Devanathan Cancel reply