The side that is not spoken about, generally.

‘கோமளாஸுக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜியே சரியிலப்பா ‘ 15 வயது ஹரி சொன்னான்.

கோமளாஸ் என்று அவன் சொன்னது சிங்கப்பூரில் உள்ள ஒரு உணவகம். ஆனால் நாங்கள் அமர்ந்திருந்தது ‘கோமள விலாஸ்’ என்னும் உணவகத்தில்.கோமள விலாஸ் 1947ல் துவக்கப்பட்டது. ஆனாலும் அதற்கு என்னவோ விடிந்துவிட்டது.

அது போகட்டும் .விஷயத்திற்கு வருகிறேன்.

கோமள விலாஸ் நல்ல உணவகம். வயிறு நிறைய சாதம் போடுவார்கள். பிடுங்கிக்கொண்டு செல்ல மாட்டார்கள். அன்லிமிடெட் ரைஸ் மட்டும் அல்ல, குழம்பு, ரசம், அப்பளம் என்று எல்லாமே அன்லிமிடெட் தான். அவசரம் இல்லாமல் சாப்பிடலாம். ‘மெதுவா சாப்பிடு தம்பி’ – 10 வயது பரத்தைப் பார்த்து அங்கிருக்கும் வயதான ஊழியர் பரிவோடு சொன்னார். அது கோமள விலாஸ்.

ஹரி ஏன் கோமளாஸின் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜி பற்றிச் சொன்னான் ?

‘ஏன் அப்படி சொல்றே?’ அவனிடம் கேட்டேன்.

‘கோமளாஸ்ல உள்ள வந்த உடனேயே மொதல்லயே பணம் பே பண்ணணும். உள்ள வரும் போது நமக்குக் கோவமா கூட இருக்கும். எடுத்தொடனேயே பணம் கேட்கறானேன்னு கொஞ்சமா ஆர்டர் பண்ணுவோம்.

ஆனா கோமள விலாஸ் அப்படி இல்ல பாருங்கோ. வேண மட்டும் சாப்பிடலாம். அப்பறம் பசி ஆறினப்பறம் இன்னும் கூட வேற ஏதாவது ஆர்டர் பண்ணலாம். இப்போ பாருங்கோ அம்மா ரோஸ்மில்க் ஆர்டர் பண்றா. இதே கோமளாஸா இருந்தா மொதல்லயே பே பண்ணிட்டு, அவசர அவசரமா சாப்டுட்டு ஓடிடுவோம். அவாளுக்கும் நிறைய சேல்ஸ் ஆகாது. அதான் சொன்னேன் கோமளாஸ் மார்க்கெட்டிங் தப்புன்னு’.

அசந்தே போனேன்.

பதினொன்றாவது படிக்கிறான் – வணிகவியல் பிரிவு. இப்பவே மார்க்கெட்டிங் பற்றியெல்லாம் பேசுகிறான். சரி தான். நம்மள மாதிரி அசடு இல்லை. பிழைத்துக்கொள்வான் என்று தோன்றியது.

அப்போதுதான் சொன்னான். ‘ நீங்க கூட சாப்பிடறதுக்கு முன்ன்னாடி கோவமா இருந்தேள். இப்போ பாருங்கோ எப்படி சாந்தமா இருக்கேள்?’

தேவை தான்.

அப்போது ஒரு பணியாளர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். ஹரி சொன்னது அவருக்கும் புரிந்துவிட்டதோ என்று வியப்புடன் நோக்கி, ஒரு அசட்டுப் புன்னகை செய்தேன்.

‘ஸார், உங்கள எனக்குத் தெரியும் சார். ஃபேஸ்புக்ல நிறைய எழுதறீங்களே. நல்லாவே எழுதறீங்க. நான் படிக்கறதுண்டு’, என்றார்.

வெந்த மனத்தில் கொஞ்சம் ரோஸ்மில்க் விட்ட மாதிரி இருந்தது. ஹரி கவனிக்கிறானா என்று அவனைப் பார்த்தேன் – ‘ நாங்கள்ளாம் யார் தெரியும்ல?’ என்று ஒரு பந்தா காட்டலாம் என்று ஒரு நம்பிக்கை. அவனைக் காணவில்லை. கை அலம்பச் சென்றிருக்கிறான்.

‘இங்கேயே வேலை பார்க்கறீங்களா ?’ அவரைக் கேட்டேன்.

‘பார்ட் டைம், லீவு நாட்கள்ல இங்கே. மெயின் வேலை ஒரு ஜப்பானியக் கம்பெனியில் சூப்பர்வைசர்.’

மக்கள் காலத்தை விரயமாக்காமல் உழைப்பது பெருமையாக இருந்தது.

ஒரு வாசகர் அடையாளம் கண்டு கொண்டார் என்பது மன நிறைவு தந்தது.

2 responses

  1. durgakarthik Avatar

    நல்ல பதிவு.ஏறக்குறைய இதே போல சிறிது நாட்களுக்கு முன் நானும் என்னுடைய வலைப்பக்கத்தில் பதிவு செய்திருந்தேன்.உட்கார்ந்து சாப்பிடும் போது பரிமாற யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்காகவே இது போல உணவகத்தை தான் என் கணவரும் விரும்புவார்.உணவை முன்பே பணம் செலுத்தி வேண்டியது வேண்டாதது என்றும் ஆர்டர் செய்ய வேண்டாம்.உலகை நன்றாக உற்றுப் பார்க்கிறார் உங்கள் மகன்.

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்

      Like

Leave a comment