The side that is not spoken about, generally.

கமலஹாசனின் முற்போக்கு மேதாவிலாசத்தைப் புகழுங்கள். ஆனால் அதற்கு முன் இதைப் படியுங்கள்.

அந்தணரையும் ஆவினங்களையும் ஒன்றாகவே நமது சமூகம் கண்டு வந்துள்ளது.

இறைவனுக்கு ‘ஆவுடையப்பன்’, ‘ஆமருவியப்பன்’ என்று பெயரிட்டுள்ளார்கள். கோசகன், கோபாலன் என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கிறார்கள்.

சம்பந்தர் தேவாரம் கூறுகிறது :

“வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”

அந்தணர் வாழ்க, தேவர் வாழ்க, பசுக்கூட்டங்கள் வாழ்க, மழை பொழிக, அதனால் வேந்தன் வாழ்க, தீயவை எல்லாம் அழிக …இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக என்று வாழ்த்துகிறது.

இதில் காணவேண்டியது, அந்தணர்களைப் பற்றிக்கூறும் போது பசுக்களைப் பற்றியும் கூறப்படுகிறது. அந்தணர் வேள்வி செய்வதால், ஆநிரைகள் வளரும், மழை பெய்யும், மக்களும் மன்னனும் வாழ்வார்கள் என்று அந்நாளில் நம்பினர்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரிக்கும்போது அக்கினி தேவனிடம் சொல்கிறாள் :

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும்..”

ஆகிய இவர்களை விடுத்து மற்றதை எரிப்பாயாக என்று ஆணை இடுகிறாள். இங்கும் அந்தணரும் பசுக்களும் ஒருங்கே கூறப்பட்டுள்ளனர்.

“கோ-ப்ராம்மணஸ்ய..” என்ற சமஸ்கிருத பதமும் பசுவையும் அந்தணர்களையும் ஒருசேரக் கூறுகிறது. ஒரு வேளை பசு மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யைக் கொண்டு வேள்வி செய்வதால் பசுமாடுகளையும் அந்தணர்களையும் ஒருங்கே கருதியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..

வள்ளுவர், ஒரு மன்னன் நல்லாட்சி செய்யவில்லை என்பதை அறிய இரண்டு சகுனங்களைச் சொல்கிறார்.

  1. நாட்டில் பால் வளம் குறையும்.
  2. அந்தணர் வேதம் ஓதுவதை மறந்துவிடுவர்.

‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்’

நாயக்க மன்னர்களின் கல்வெட்டுச் சாசனங்கள் கூட இறுதியில் ‘இந்த தருமத்தை அழிப்பவன் காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவான்’ என்றே சொல்கின்றன ( ‘தஞ்சை நாயக்கர் வரலாறு’ – குடவாயில் பாலசுப்பிரமணியம் )

நிலைமை இப்படி இருக்க, ‘பிராமணர் மாட்டிறைச்சி உண்ணும்படி புனித நூல்களில் கூறப்பட்டுள்ளது’ என்று சொல்வது என்ன பகுத்தறிவு என்று புரியவில்லை.

ஒருவேளை எல்லா அறிவிற்கும் அப்பாற்பட்ட கமலஹாசனுக்குத் தெரிந்திருக்கலாம்.

ஐயா கமலஹாசரே,

தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நியூக்ளியர் சயின்ஸிலிருந்து, ஜீனோம் வரை எல்லாவற்றிலும் கரை கண்டவர் நீங்கள். ஆனால் ‘இந்துக்களின் புனித நூல்’  என்று கூறியுள்ளீர்கள். கீதை, உபநிஷதங்கள், பாசுரங்கள், திருமுறைகள், வேதங்கள், அதிலும் பூர்வ மீமாம்ஸை, உத்தர மீமாம்ஸை என்னும் பிரிவுகள், இவற்றீற்கான பாஷ்யங்கள் என்று சில நூறு நூல்கள் உள்ளன. அதிலும் சங்கர பாஷ்யம், இராமானுஜ பாஷ்யம், மத்வ பாஷ்யம் என்று வேறு பல வகைகள்.

இவை அனைத்துமே உங்களுக்குத் தண்ணீர் பட்ட பாடு என்பது எனக்குத் தெரியும். ஆகவே, இவற்றில் எந்த நூலில் இப்படி மாடு தின்னலாம் என்று சொல்லியுள்ளார்கள், எந்த சுலோகம் என்று தேவரீர் தயை கூர்ந்து கடாட்சித்து அருள வேண்டுகிறேன்.

அசட்டு அம்மாஞ்சி ஆமருவி

4 responses

  1. Pandian Avatar

    தூயகாடுகளில் வேள்விகளைச் செய்யும்போது இறுதிநாள் ஆகுதியை எட்டுவகை அணியியல்புகள் கொண்ட இளம்பசுவை பலிகொடுத்து அதன் குருதியை எரியளித்து முழுமையாக்கும் தொல்மரபு இருந்தது. வேள்விப்பசுவின் உடல் நூற்றெட்டு தேவர்கள் வந்து குடியேறியமையால் அவர்களின் உடலேயாகும் என்றது வேதமுறைமை. அதன் கருநிறக் கால்களில் வாயுவும் வெண்ணிற வயிற்றில் வருணனும் அதன் செந்நிற நாவில் அனலோனும் கொம்புகளில் யமனும் அமுதூறும் மடியில் சோமனும் ஒளிவிடும் விழியில் இந்திரனும் நெற்றியில் சூரியனும் வாழ்கிறார்கள். அதன் முகம் பிரம்மன். இதயம் சிவன். பின்பக்கம் விஷ்ணு. அதன் யோனியில் திரு வாழ்கிறாள். அப்பசுவை உண்பவர்கள் இப்புடவியை உண்கிறார்கள்.

    Like

    1. Pandian Avatar

      புடவியை உண்ண வழி சொல்லியிருப்பார்

      Like

  2. சரவணன் Avatar
    சரவணன்

    வசிஷ்டர் போன்ற முனிவர்களுக்கு மாட்டுக்கறி விருந்தளிப்பது அதி உயர் விருந்தோம்பலாகக் கருதப்பட்டது மிக விரிவாக மிகப்பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அத்தனை புராண, இதிகாச, பாஷ்யங்களையும் கரைத்துக் குடித்த உங்களுக்கு இது தெரியாதது ஆச்சரியமில்லை (பெயர்களை மட்டும் கேள்விப்பட்வருக்கு எப்படித் தெரியும்). சுவாமிநாதன் அங்கலேஷரிய ஐயர் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதும் தொடர் கட்டுரைகளில் பீஃப் என்று அடித்துத் தேடிப் பார்க்கவும். இது பற்றி விரிவாக, ஆதாரபூர்வமாக எழுதியிருக்கிறார். இதில் எந்த இழிவும் இல்லை, மூடி மறைக்க எதுவும் இல்லை என்று புரிந்த சுவாமிநாதன் ஐயருக்கு இருப்பதே பகுத்தறிவு. அது உங்களுக்குப் புரியாது, விட்டுவிடுங்கள்.

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      கருத்துக்கு நன்றி நண்பரே

      Like

Leave a reply to Amaruvi Devanathan Cancel reply