தமிழ் மாமி நமஸ்காரம்

தமிழ் மாமி நமஸ்காரம்… இல்ல .. வந்து வணக்கம்.. ஸாரி நமஸ்காரம்.

எப்பிடி ஆரம்பிக்கறதுன்னே தெரியல.. வணக்கம்னா போலியா தெரியறது.. நமஸ்காரம்னா ஏதோ கொலை குத்தம் மாதிரி பாக்கறா.

சின்ன விஷயம் ‘நமஸ்காரம்’ங்கறது மனுஷாள எப்பிடி அன்னியப்படுத்தறது பாருங்கோ. ‘பாருங்கோ’ன்னு சொல்லலாமான்னும் தெரியல.

இதே கன்ஃப்யூஷன் தான் மாமி. இப்போ ஒரு தமிழ் அமைப்புக்குப் போறேன்னு வெச்சுக்கோங்கோ. போன உடனே கொஞ்சம் தள்ளியே உக்காந்துக்கறா. அதுவும் நெத்தியில ஸ்ரீசூர்ணம் வேற இருக்கா, உடனேயே அன்னியமாயிடறேன். இதே விபூதி இருந்தா ஒத்துக்கறா.

பல அமைப்புக்களும் பல பத்திரிக்கைகள் நடத்தறது. எதுலயும் ‘எழுதுங்கோ’ன்னு நேரடியா சொல்ல மாட்டேங்கறா. வேற எழுதறதுக்கு யாருமே இல்லேன்னா ‘சரி எழுதறீங்களா’ன்னு கேக்கறா. எழுதித் தந்தாலும் போடறதில்லேங்கறது வேற விஷயம்.

இப்படித்தான் ‘பாரதி’ பத்தி எழுதித்தான்னு கேட்டா. இந்த ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே…’ இதப்பத்தியெல்லாம் எழுத வேண்டாம், புதிய பார்வையா இருக்கணும்னு சொன்னா. சரின்னு நானும் ‘பாரதியின் தத்துவ வெளி’ன்னு கர்ம சிரத்தையா எழுதிக் கொடுத்தேன். ஒரு வருஷம் ஆறது இன்னும் வெளியிடல. இந்த ‘தத்துவம்’, ‘விசாரம்’ இதெல்லாம் பத்தி எழுதினா யாரும் படிக்கறதில்ல, போடறதும் இல்ல.

இப்படித்தான் ஒரு பேச்சுப் போட்டியில பேசினேன். ‘இதுல ஒரு சமயம் சார்ந்த பாடல்கள் இருந்தது’ன்னு சொல்லி முதல் பரிசு கிடைக்கல. இதுக்கெல்லாம் ஆழ்வார்களச் சொல்லணும். அவாள்ளாம் தமிழ்ல பாடாமலாவது இருந்திருக்கலாம்.

இதுல ஒருத்தர் சொன்னார், ‘நீங்க கம்பன், ஆழ்வார்கள்னு போகாதீங்க. கண்ணதாசன், வைரமுத்து, மேக்ஸிமம் பாரதி, இதோடயே நிறுத்திக்கோங்க. அதுதான் எடுபடும்’ அப்படீங்கறார். நெஜமாவே புரியல.

இன்னொண்ணு பாருங்கோ. மேடைல பேசறச்சே ‘பொதுத் தமிழ்ல பேசுங்க’ அப்படீங்கறா. அதாவது ‘ப்ராமின் லிங்கோ’ இருக்கப்படாதுன்னு சூசகமா சொல்றாளாம். ‘ஏன் இது பொதுத் தமிழ்ல இல்லே?’ன்னு கேக்கறா ? நெல்லை கண்ணன், சாலமன் பாப்பையா இவங்கள்ளாம் பொதுத்தமிழ்ல தான் பேசறாங்களா? திருநெல்வேலி, மதுரைன்னு வட்டார மொழி பயன் படுத்தலையா ?

போன மாசம் ‘சாஸனம்’னு ஒரு கதை எழுதியிருந்தேன். ஐயங்கார் பத்தின கதை. அதையும் பொதுத் தமிழ்ல தான் எழுதணுமாம். 90 வயசான அக்ரஹாரப் பாட்டியோ தாத்தாவோ ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’னு கேப்பாளா இல்ல ‘நீங்க எங்கேந்து வரேள்?’னு கேப்பாளா ? ஜோ டி குரூஸ், சு.சமுத்திரம் இவாள்ளாம் அவா அவா சமூகம் சார்ந்து எழுதலாம், நான் மட்டும் கூடாதா ? என்ன பகுத்தறிவு மாமி இது ?

ஒரு சமூகத்தோட கதைகள அவாளோட வழக்குல பதிவு பண்ணினாத்தானே அவாளோட கதைகள் வெளில வரும் ? அப்பிடி எழுதறது தானே உண்மை, யதார்த்தம் ? இங்கெல்லாம் பொதுத்தமிழ்னு சொன்னா அதுலயும் சரி, கதைலயும் சரி ஒரு போலித்தனம் இல்லியோ ? ஜுனூன் தமிழ் மாதிரி இருந்தா நன்னாவா இருக்கும் ?

ஒரு பெரியவர் ‘தமிழ் காட்டுமிராண்டி பாஷை’னு சொன்னார். ஆனா அவர ‘தலைவர்’னு கொண்டாடறா. ஆனா நல்ல தமிழ்ப் பாசுரம் பாடினா ஒரு மாதிரி பாக்கறா. ஒரே குழப்பமா இருக்கு.

பெருமாளே இல்லேங்கறா ஆனா பூஜை பண்றதுக்கு உரிமை வேணுங்கறா. பெருமாளே குழம்பிடுவார். ‘இவர் அர்ச்சனை பண்றதுக்கு வர்றவரா இல்லே அடிக்க வர்றவரா’ன்னு பெருமாளுக்கே குழப்பம் வந்துட்டா என்ன ஆகும்?  இப்ப இருக்கறா ‘விருது திரும்பிக் குடுக்கற’ குழப்பம் போறாதுன்னு இது வேறயா ?

என்னமோ போங்கோ மாமி. ஒண்ணும் புரியல. உங்கள மாமின்னு கூப்டதுக்கு என்னவெல்லாம் சொல்லப் போறாளோ ? ‘கன்னித் தமிழ்’ன்னும் சொல்றா, ஆனா தமிழ் அன்னைங்கறா. அதுனால தான் ஒரு மையமா தமிழ் மாமின்னு நான் கூப்டேன்.

‘என்ன இன்னிக்கும் கால்ங்கார்த்தால கனவா ? எழுந்தோமா ஆபீஸ் போனோமான்னு இல்ல, இந்த ஜெயமோகன் அது இதுன்னு படிக்காதீங்கோன்னு சொன்னா கேட்டாத்தானே!’

ஒரு திங்கள் காலை துவக்கம்..

8 thoughts on “தமிழ் மாமி நமஸ்காரம்

  1. என்னுடைய ஒரு பதிவுக்கு ஒருவர் எழுதியிருந்தார் : ‘நீங்க பயன்படுத்திருக்கிற வார்த்தைகள் எல்லாம் இப்போது புழக்கத்திலேயே இல்லை. உங்கள் நேரத்தை நீங்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று.

    சின்னக் குழந்தைகளுக்கான கதை எழுதும் தளத்தில் ஒரு கதையை மொழி பெயர்த்த போது ஒரு எழுத்தாளர் எழுதியிருந்தார்: ‘பிராமண பாஷை பலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும்’ என்று.

    நீங்கள் சொல்வதுபோல அவரவர்கள் அவரவர்களது வட்டார வழக்குச் சொற்களை பயன்படுத்தலாம். பிராமணர்கள் மட்டும் எதுவும் செய்யக்கூடாது.
    நல்லா போட்டீங்க, ஒரு போடு! பாராட்டுக்கள்!

    Like

  2. >>நெல்லை கண்ணன், சாலமன் பாப்பையா இவங்கள்ளாம் பொதுத்தமிழ்ல தான் பேசறாங்களா? திருநெல்வேலி, மதுரைன்னு வட்டார மொழி பயன் படுத்தலையா ?<>ஐயங்கார் பத்தின கதை. அதையும் பொதுத் தமிழ்ல தான் எழுதணுமாம்<<
    எதில் Characterisation முழுமை அடையுமா, அந்த லிங்கோ-வைத்தான் கையாள வேண்டும். மைக்கேல் மதன காமரஜனில், பாலக்காடு மொழி பேசும் டெல்லி கணேஷும், கமல ஹாசனும் சகஜ தமிழில் பேசினால் பாதி சிரிப்புக் கூட வழி இல்லாமல் போயிருக்கும்.

    Like

  3. மிக அருமையாகக் கேட்டிருக்கீங்க! ஆனால் இதுக்கெல்லாம் பதில் வரும்? ம்ஹூம், வராது! 🙂

    Like

  4. பொதுத் தமிழ் என்பது எது? ஆங்கிலம் கலந்து பேசுவது தானே எங்கும் பரவியிருக்கிறது ? அதை விடுத்து இப்படி குறிப்பிட்ட சமூகத்தின் பேச்சுவழக்கை எதிர்ப்பது தப்பு.
    படைப்புக்கு எது தேவைப்படுகிறதோ அதுவே சரி. ஆழ்வார்களின் தமிழை ரசிக்க வேண்டும், அதை விடுத்து மதச்சாயம் பூசக்கூடாது என்பதே என் கருத்து.

    Like

Leave a comment