காலை அனுஷ்டானங்கள் முடித்து சற்று சாவகாசமாக சில சுவடிகளைப் புரட்டிக்கொண்டிருந்தேன். பாதி கரையான் அரித்த சுவடிகள் அவை. பாதி சுலோகங்கள் மட்டுமே தெரிகின்றன. மீதத்தை நானே எழுதிக்கொள்ள வேண்டும். சீக்கிரம் எழுதிவிடவேண்டும் என்று தோன்றுகிறது.
நாதமுனிகள் காலத்திய சுவடிகள் அவை. அவரிடமிருந்து 200 ஆண்டு காலம் கழித்து எனக்குக் கிடைத்துள்ளது.
கரையான் பாதி தின்ற சுலோகம் ஒன்றை எடுத்து பூர்த்தி செய்யத் துவங்கினேன். கூரன் வேகமாக உள்ளே வந்தார். ஏதோ அவசரம் போல் பட்டது.
‘ஸ்வாமி, தேவரீரைத் தரிசிக்க துருஷ்க மதஸ்தர் ஒருவர் வந்துள்ளார். வட நாட்டிலிருந்து வருகிறார் என்பதால் அவரைக் காவிரிக்கரைக்கு அனுப்பி, நீராடி வரும்படிச் சொல்லியுள்ளேன்,’ என்றார்.
‘அவசரம் இல்லை. அவருக்கு அமுது படைத்துப் பின்னர் அழைத்து வரவும்,’ என்றேன் நான்.
இப்போதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக துருஷ்கர்கள் தென்படுகிறார்கள். வட நாட்டில் இருந்து வரும் ஒற்றர்கள், யாத்ரீகர்கள் என்று அவ்வப்போது தெரிகிறார்கள். அவர்களது பேச்சு பெரும்பாலும் புரிவதில்லை. எனவே சைகையில் தான் பேசிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பொதுவாக இவர்கள் கோவிலுக்குள், மடங்களுக்குள் எல்லாம் வருவதில்லை. ஆகையால் இந்த வட நாட்டுத் துருஷ்கர் என்னைப் பார்க்க வந்தது சற்று வியப்பாக இருந்தது.
கூரன் முகத்தைப் பார்த்தால் ஏதோ சாந்தமில்லாமல் தெரிந்தது. தற்போது வட நாட்டிலிருந்து வரும் சில செய்திகள் நல்லவையாக இல்லை. நமது பிரதேசத்தில் உள்ள ராஜாங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தது போய், நமது கலாச்சாரத்திற்கு, வாழ்க்கை வழிமுறைக்குச் சற்றும் ஒவ்வாத வழி முறைகள் கொண்ட மிலேச்ச மதஸ்தர்கள் சிலர் நம்ப முடியாத செயல்களில் ஈடுபடுகின்றனர். கோவில்கள் உடைபடுகின்றன; விக்கிரகங்கள் கூட உடைக்கப் படுகின்றன; வைதீகர்கள் கழுவிலேற்றப்படுகிறார்கள் என்றும் செய்திகள் சொல்கின்றன. இவை செய்திகளாக இல்லாமல் வதந்திகளாக இருக்க வேண்டுமே என்று மனம் ஏங்கியது.
சில நாட்களாகக் கரிய நிறத்தில் ஒரு பெரிய உருவம் ஒன்று நிற்பது போல் கனவு ஒன்று வருகிறது. என்ன காரணம் என்று தெரியாவிட்டாலும் சகுனங்கள் ஏதோ அச்சான்யமாகவே படுகின்றன. அதற்கும் இந்த துருஷ்கர் வருகைக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?
‘கூரரே, துருஷ்கர் என்ன சொல்கிறார்?’ என்று கேட்டேன்.
‘ஸ்வாமி, அவரது பாஷை முழுதும் புரியவில்லை. ஆனால் ஏதோ கலவரங்கள் பற்றிச் சொல்கிறார். தேவரீரை அவசியம் பார்த்து அதிகமாகப் பேச வேண்டும் என்றும் சொல்கிறார்,’ என்றார்.
சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுக் கூரன் சொன்னது ஏற்கெனவே என் காதுகளை எட்டிய ஒன்றுதான்.
‘ஸ்வாமி, நாம் இங்கே பிரம்மம், ஆத்மா என்று வாதம் செய்துகொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் சொல்வதெல்லாம் பார்த்தால் இதற்கெல்லாம் ஒன்றுமே தேவை இருக்காது போலத் தெரிகிறதே,’ என்றார்.
‘அப்படி இல்லை. அவர் வரட்டும். அது வரைக்கும் சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்,’ என்று கூறினேன். ஆனாலும் கூரன் சொல்வதில் உண்மை உள்ளது என்பதை நான் உணர்ந்தே இருந்தேன்.
மத்தியானமாக அந்த துருஷ்கர் வந்தார். நம்மவர்கள் போல் இல்லாமல் வேறு உடை உடுத்திக்கொண்டிருந்தார். க்ஷேம சமாச்சாரங்கள் விசாரித்தபின் தடுமாறிய சமஸ்கிருதத்தில் பேசத்துவங்கினார்.
‘நான் பாரசீக நாட்டில் இருந்து வருகிறேன். நான் ஒரு யாத்ரீகன். பாரசீகம், உருது, அராபியம் என்று மூன்று மொழிகளைக் கற்றுள்ளேன். ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். அஸ்தினாபுரம் என்னும் நகரைப் பற்றிக் கேள்வியுற்று அதனைப் பார்க்க ஆவல் கொண்டு பயணித்தேன். மூன்று ஆண்டுகள் முன்னர் அஸ்தினாபுரம் சென்றேன். அங்குள்ள பண்டிதர்களிடம் சமஸ்கிருதம் கற்று பாரத தேசத்தைப் பார்த்து வர எண்ணினேன். மஹிஷூர் என்னும் அழகிய நகரம் பற்றிக் கேள்விப்பட்டு அங்கு சென்ற போது உங்களைப் பற்றி அறிந்தேன். தாங்கள் திருவரங்கத்தில் இருப்பதாகச் சொன்னதால் உங்களைப் பார்க்க இங்கு வந்தேன்,’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட அவர் தனது பெயர் அப்தாலி என்றும் கூறினார்.
பின்னர் அவர் சொன்ன செய்திகள் அதிர்ச்சி ஏற்படுத்துவனவாக இருந்தன.
‘சனாதன தர்மத்தின் வழியில் நடைபெறும் வழிபாடுகள் விரைவில் முடிவுக்கு வரப்போகின்றன. பாரசீக, காந்தார அரசுகள் ஆங்காங்கே நிலைபெறத் துவங்கி விட்டன. தில்லி என்னும் ராஜதானியிலும் மிகப்பெரிய மிலேச்ச அரசு உருவாகியுள்ளது. அவற்றின் முக்கிய வேலையே சனாதன தர்மத்தைக் குலைப்பது தான். அதற்காக அந்த தர்மத்தின் வெளிப்பாடுகளை அழிக்க முனைந்துள்ளன. தக்ஷிண பாரதப் பிரதேசத்தில் அவ்வளவாக இவை இல்லை. ஆனாலும் இங்கும் வரத் துவங்கிவிடும். சைவம், வைஷ்ணவம் என்றெல்லாம் பேசப்படும் தக்ஷிண பாரதப் பிரதேசத்தில் இந்த மண்ணிற்கு எந்தத் தொடர்பும் இல்லாத அன்னிய கலாச்சாரம் உருவெடுக்கப் போகிறது. அது இந்த மண்ணின் அடி வேரையே பிய்த்தெறியப்போகிறது. சைவ, வைணவச் சின்னங்கள் உடைத்தெறியப்படும். மக்கள் தங்கள் தர்மத்தை விட்டு அன்னிய தர்மத்தைத் தழுவ வேண்டும் இல்லையேல் மரணிக்க வேண்டும்.’ இது தான் அப்தாலி சொன்ன செய்தி.
அப்தாலி சொன்ன செய்திகள் எனக்கு முன்னரே தோன்றியவைதான். ஆனால் என் கணக்குப்படி இன்னும் 100 ஆண்டுகள் கழித்தே இவை நடைபெற உள்ளன. அரங்கன் கோவில் பலியாகப் போகிறது; புதிய ஆச்சாரியர்கள் தோன்றுவர்; பெரியாழ்வார் பாடிய மதுரைக்கும் அழிவுதான் என்பதெல்லாம் எனக்குத் தெரிகின்றன. ஆனால் அப்தாலி இன்னும் சீக்கிரமாகவே நடக்கும் என்கிறாரே என்று எண்ணினேன்.
‘இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.
‘மஹிஷூரில் உள்ள வைஷ்ணவர்கள் உங்கள் பெயரைச் சொன்னார்கள். நீங்கள் 12 வருடங்கள் திருநாராயணபுரத்தில் தங்கியிருந்து உங்கள் தர்மத்தை வளர்த்தீர்கள் என்பதால் அவர்கள் உங்களிடம் இந்த செய்தியைச் சொன்னால் நல்லது என்று தெரிவித்தனர்,’ என்றார் அப்தாலி.
சாதாரண மக்கள் அவர்கள். ஒரு 12 வருஷங்கள் நான் திருநாராயணபுரத்தில் இருந்த போது அந்த மக்கள் காட்டிய அன்பும், கைங்கர்ய மனோபாவமும் என் கண் முன்னே நின்றன. கண்களில் நீர் வழிந்தது. வெகுளியான மக்கள். மண்டியம் பிரதேசம் என்னும் இடத்தில் ‘நல் வழிப்படுத்த யாரும் இல்லையே’ என்னும் ஆதங்கத்துடன் வாழ்ந்துவந்தார்கள். பல பலி வழிபாடுகளும், பயன் தராத, மனித தர்மத்திற்கு விரோதமான பழக்கங்களும் கொண்டிருந்த சாதாரண மலை மக்கள். ஆனால் கல்வியின் மீது மிகுந்த மோகம் கொண்டவர்கள். மிகுந்த ஆர்வத்துடன் நான் எடுத்துரைத்த விஸிஷ்டாத்வைத சித்தாந்தத்தைப் பிடித்துக்கொண்டார்கள். அந்த நாட்கள் இனிமையானவை.
நேற்று மாலை வரை ஸதஸில் நடந்த விவாதங்கள் எத்தகையவை? ஜீவாத்மா, பரமாத்மா, முக்தி, மீமாம்சை என்று அதன் தரமே வேறு. இன்றோ அடிப்படையே ஆட்டம் காணும் வகையிலான ஒரு பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த உலகத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. காலம் எவ்வளவு வேகமாக மாறுகிறது?
‘விக்கிரகங்களை உடைப்பதாவது? கோவில்களையும் சின்னங்களையும் சிதைப்பதாவது? என்ன வழக்கம் இது?’ என்று கூரன் கேட்டார். அடிக்கடி வரும் இந்தக் கரிய உருவக் கனவுக்கும் தற்போது கேள்விப்படும் விஷயங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று திட்டவட்டமாகத் தெரிந்தது.
கூரனின் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டுமா அல்லது அடுத்த ஸதஸில் சொல்லிக் கொள்ளலாமா என்று எண்ணத்துவங்கினேன்.
‘விக்கிரகங்கள் நம்மைக் கடந்து நம்மால் அறியப்பட முடியாத பிரபஞ்சப் பெருவெளியான பிரும்மத்தின் ஒரு உருவகம். அந்த உருவத்தின் வழியாக எல்லையில்லாப் பரப்புள்ள பிரபஞ்ச ஞானத்தின், பிரும்ம சொரூபத்தின் ஆற்றலை உணர்வதே நமது ஞான மரபு. விக்கிரகத்தை உடைப்பதால் பிரம்மத்தை அழிப்பதாகிவிடுமா? என்ன ஒரு அடித்தள எண்ணம்?
மஞ்சளாளான ஒரு சிறு உருவத்திற்குள் அந்தப் பிரபஞ்ச சக்தியை, பிரும்ம சொரூபத்தை ஆவாஹனம் செய்து அதன் வழியே அப்பிரபஞ்சப் பெருவெளியின் முழு வீச்சினை உணர்வதே நமது ஆன்ம தரிசனம். ஒரு விக்கிரகமே பிரும்மமாகிவிடுமா? இது புரியாத இந்த எத்தர்கள் ஆடும் ஆட்டம் வெறும் வெற்றுக் களிப்பு என்று உணரவில்லையே’ என்று எண்ணியவாறு அமர்ந்திருந்தேன்.
இன்னொன்றும் என் மனதில் பட்டது. விக்கிரகங்கள் சக்தியூட்டப்பட்டவை. சக்கரங்களை அடியில் வைத்துப் பிரதிஷ்டை செய்து உரு ஏற்றப்பட்டவை. அவற்றிற்கான தேவையான மந்திரப் பிரயோகங்கள் நடந்தாக வேண்டும். விக்கிரகங்கள் பின்னம் அடைந்தால் அவற்றைச் சாந்தப்படுத்தப் பரிகாரங்கள் செய்தாக வேண்டும். பல உக்கிர தேவதைகளும் இவற்றில் அடக்கம். அப்படிச் செய்யாவிட்டால் ஏற்படும் பாதகங்கள் ரொம்ப அதிகம். சில தேவதைகளின் உக்கிர தாண்டவம் சொல்லி மாளாது. இதனால் அவற்றைச் சிதைப்பவர்களுக்கும் சேர்த்தே அழிவு. மக்களும் பாதிக்கப்படுவர். இதையெல்லாம் இந்த அன்னிய மனிதர்கள் உணர்வதெப்படி?
அடுத்த பௌர்ணமிக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கிறது. அன்று ஸதஸ் நடக்க வேண்டும். ஆனால் அதற்குள் இன்னும் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறதோ என்னும் கேள்வியும் என்னுள் எழுந்தது.
ஸதஸில் மொத்தமாகப் பதிலளிக்கலாம் என்று தீர்மானித்து ஆழ்ந்த பெருமூச்சு விட்டேன். சொல்லி வைத்தது போல் பெருத்த இடியுடன் மழை பெய்யத் துவங்கியது.
மனதில் திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.
‘கூரரே, ஸதஸ் அடுத்த பௌர்ணமி அன்று வேண்டாம். இன்னும் இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்யுங்கள். அதிக நேரம் இல்லை,’ என்று சொல்லி ஆச்சரியத்துடன் பார்த்த கூரரை உற்று நோக்கினேன்.
கூரத்தாழ்வானின் கண்களில் நீர்.
(தொடரும்)