The side that is not spoken about, generally.

‘என்னா மக்களே தனியா நின்னு சிரிக்கேரு,’ என்று கேட்டபடி வந்தார் அண்ணாச்சி என்று அழைக்கப்படும், பன்னாட்டு வங்கியில் பெரும்பதவி வகிக்கும் நெல்லையைச் சேர்ந்த சிங்கப்பூரர். நெல்லைத் தமிழ் மறக்காத சில சிங்கப்பூரர்களில் இவரும் ஒருவர்.

‘இல்ல அண்னாச்சி, நாஞ்சில் நாடன் ‘கும்பமுனி’ கதைகள் படிச்சேன். படு ஜோர்,’ என்றேன்.

‘என்ன சவத்தெளவு தமிளு பேசுதீரு? ‘ஜோரு’ தமிளா? இங்கிலீஷுல தப்பு கண்டு பிடிக்கீரு, தமிளு ஒளுங்கா பேச மாட்டடேளா?’ என்றார் ஆ..பக்கங்களின் நீண்ட நாள் வாசகரான அவர்.

‘சரி அண்ணாச்சி. ‘ஜோர்’ வேண்டாம். ‘சோர்’. இப்பம் தேவலாமா?’ என்றேன்.

‘தங்காவூரான் வாயில வசம்பப் போட்டுக் கொளுத்த. ‘சோர்’ன்னா என்னேன்னு நெனக்கீரு? இந்தில ‘சோர்’ன்னா திருடன்னு அர்த்தம்,’ என்றார்.

புது வம்பாகப் போயிற்றே என்று வழக்கம் போல விழித்தேன்.

‘அண்ணாச்சி, உங்களுக்கு விஷயமே தெரியாதா? நாஞ்சில் நாடன் ஒரு இந்துத்வா. அதாலதான் ‘சோர்’ன்னு சொன்னேன்’ என்றேன்.

படுகுழப்பத்துடன் என்னைப் பார்த்தவர், வாய் திறந்து வசவு மழை பொழியும் முன் முந்திக்கொண்டு, ‘இரும், இரும். விளக்கமாச் சொல்றேன். ‘சோர்’ன்னா திருடன் இல்லையா. திருடனுக்கு வேற ஒரு பேரும் உண்டும். ‘இந்து’ங்கற சொல்லுக்கு ‘திருடன்’ன்னு ஒரு பொருள் இருக்குன்னு ‘முக்கண் முதல்வரே’ சொல்லியிருக்காருல்லா,’ என்றேன்.

அண்ணாச்சியின் முகத்தில் குழப்பம் தீர்ந்தபாடில்லை. அண்ணாச்சிக்கு மேலும் கோபம் வரும் முன் விளக்கிவிடுவது உத்தமம் என்று தோன்றியதால் மேலும் தொடர்ந்தேன்:

‘முக்கண் முதல்வர் இந்துன்னா திருடன்ங்கறார். நாஞ்சில் நாடன் ‘கும்ப முனி’ கதைகள்ல முக்கண் முதல்வர வாரு வாருன்னு வாரறார். அதனால நாஞ்சில் நாடன் இந்துத்வாங்கறேன். மேலும் அவருக்கு ஜெயமோகன் ‘விஷ்ணுபுரம்’ விருது வேற குடுத்திருக்காருல்லா,’ என்று நிறுத்தினேன்.

‘இந்துத்வாவோ என்னெளவோ. இஞ்ச ‘முக்கணும்’னு என்னமோ சொன்னீரே, யாரு முக்கணும் வே,’ என்று வினவினார்.

‘அண்ணாச்சி, யாரும் முக்கண்டாம். ‘முக்கண் முதல்வர்’னு சொன்னேன். யாருன்னு பாக்கீகளா? முத்தமிழ் வித்தகர், முத்தமிழ் அறிஞர் அப்படீன்னு எவ்வளவு நாள் தான் சொல்லுகது? ரெண்டு கண்ணும் தமிழ்னு சொல்லலாம். ஆனா மூணு வந்தாகணும். அதான் மூணாவது நெற்றிக்கண்ண சேர்த்து முக்கண் முதல்வர்னு சொன்னேன்,’ என்று சொல்லி அண்ணாச்சியைத் திரும்பிப் பார்த்தேன்.

அண்ணாச்சி தலை தெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்.

2 responses

  1. sasikumar Avatar
    sasikumar

    முக்கண் போல மூன்று மனைவியரைக் காக்கும் கலைஞர் னு சொல்லுவீங்க னு பாத்தேனுங்க..

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      Ha ha. More on Annachchi to come soon. And I will have the considered silence from SG

      Like

Leave a comment