சமீபத்தில் ஒரு நிகழ்வில் ‘ஆழ்வர்கள் மானுடம் பற்றிப் பாட மறுக்கிறார்கள்’ என்றும் ‘மானுடம்’ பற்றி ஒரு கவிஞர் எழுதுகிறார் என்று அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் ஒரு பேச்சாளர் பேசியுள்ளார்.
எழுத்தாளரைப் புகழுங்கள், அதற்கு ஆழ்வார்களை ஏன் இழுக்கிறீர்கள்? 2016ல் கவிதை எழுதும் ஒருவரும் கி.பி.800ல் பாடல் பாடிய ஆழ்வார்களும் ஒப்பு நோக்கத் தக்கவர்களா? ஆழ்வார்களின் மன நிலை என்ன என்பதை நீங்கள் அறிந்ததுண்டா?
ஒரு உதரணம் சொல்கிறேன். திருமங்கையாழ்வார் திருமாலைத் தரிசிக்க தேரழுந்தூர் என்னும் ஊருக்கு வருகிறார். கையில் வில்லுடன் ராஜ அலங்காரத்துடன் அரசன் நிற்கிறான். ‘எம்மைப் பாடுங்கள்’ என்று ஆழ்வாரைக் கேட்கிறான். ‘மானுடரை நான் பாடுவதில்லை’ என்று சொல்லி ஆழ்வார் திரும்புகிறார். ஒரு இடத்தில் அவரால் நகர முடியவில்லை. தனது கால்கள் விலங்கினால் கட்டப்பட்டு இருப்பது போல் உணர்கிறார். திரும்பிப் பார்த்தால் இறைவன் ‘தேவாதிராஜன்’ என்னும் பெயருடன் நின்றுகொண்டிருக்கிறான்.
தந்தை காலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண்
வந்த எந்தை பெருமானார் மருவிநின்ற ஊர்போலும்
முந்தி வானம் மழைபொழியும் மூவாஉருவின் மறையாளர்
அந்தி மூன்றும் அனலோம்பும் அணியார்வீதி அழுந்தூரே.
என்று பாடுகிறார். இதில் மானுடம் பாடவில்லை என்பதால் திருமங்கையாழ்வார் மனிதர் இல்லை என்று ஆகிறதா? இறையைப் பாடுபவர்கள் மானுடர்களைப் பாடுவது இல்லை என்பது அக்கால ஒரு அறம்.
திருஇந்தளூர் என்னும் திவ்யதேசம். இதே ஆழ்வார் அங்கும் செல்கிறார். பாம்பணையில் துயிலும் பரிமள அரங்கன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. கோவில் மூடியிருக்கிறது. ஆழ்வார் பாடுகிறார் :
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! – வாழ்ந்தே போம் நீரே!
‘உம்முடைய அழகுக்கு நான் அடிமை என்கிற உண்மையை நீ அறிந்தும் எனக்குக் காட்சி கொடுக்காமல் கதவை மூடிக்கொண்டுள்ள நிலையில் நீரே வாழுந்து போங்கள்’ என்று நேரிடையாகப் பாடுகிறார். அப்படிப்பட்டவர்கள் ஆழ்வார்கள்.
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ஒரு பாசுரம்:
அமரவோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பராகில் நொடிப் பொழுதோர் ஆங்கே
அவர்கள் தான் புலையர் போலும் அரங்கமா நகருளானே
நான்கு வேதங்களை ஓதிய அந்தணர்களில் தலைவராக இருப்பினும், இழி நிலையில் உள்ள உங்களைப் பழித்து ஒரு சொல் சொன்னாலும் அந்த அந்தணரே புலையராக ஆவார் என்று சொன்னீரே அரங்க மாநகர் அப்பனே’ என்னும் பொருளில் பாடுகிறார். இந்த இடத்தில் மானுடப் பார்வை, சமூக நீதி இல்லையா?
இன்னொரு பாசுரம்:
குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாயினும்
வலந்தாங்கு சக்கரத் தண்ணல் தன் அருளில்
கலந்தார் தம் அடியார் தம் அடியார் எம் அடிகளே
‘சாதிகள் அனைத்திலும் கீழானதிலும் எந்த நன்மையையும் இல்லாத சண்டாளர் சாதியில் பிறந்து அவர்களில் இழிந்த சண்டாளராக இருந்தாலும், வலக்கையில் சக்கரம் ஏந்தியுள்ள திருமாலின் அடியவர் என்று அறிந்தால் அவரின் அடியாரின் அடியார் யாரோ அவருக்கு நான் அடிமை’ என்று கூறுகிறார் ஆழ்வார். இதில் மானுடம் இல்லையா?
பெரியாழ்வார் பாசுரம் ஒன்று:
அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக்களைந்த இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்திலுள்ளீர் ! அடிதொழுது ஆயிரம் நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே
உங்கள் பழைய குலத்தை விட்டு இன்று தொண்டர் குலத்தில் ஒன்று கூடி, நாராயணனுக்குப் பல்லாண்டு பாடுவோம்’ என்னும் பொருள் பட அமைகிறது இப்பாசுரம். மானுட ஒருமை இங்கு பேசப்படவில்லையா ?
மேடைகளில் பிதற்றுவது இருக்கட்டும். பிதற்றுவது உங்கள் உரிமை. ஆனால் படித்துவிட்டுப் பிதற்றுங்கள். படித்தது போல் நடிக்காதீர்கள். கொஞ்சமாவது படியுங்கள்.
என்னைப்பற்றிய பிம்பங்களை நான் உருவாக்கிக் கொள்வதில்லை. பிம்பங்களுக்காக வாழ வேண்டியிருக்கும் என்கிற பயம் தான் காரணம். ஆனால் சில பிம்பங்கள் உருவானால் தான் பல வாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். நமக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, ஒரு விதமான பொது நம்பிக்கைகள் உள்ள கூட்டங்களில் அவர்களுக்கு ஏற்றவாறு நடிக்க / பேச வேண்டியுள்ளது. அப்படி நடிப்பதால் பல கதவுகள் திறக்கின்றன என்பதை உணர்கிறேன்.
நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு இல்லை. கதவுகள் மூடியே இருக்கின்றன.
கதவுகள் திறக்கும் வரை பிதற்றுபவர்கள் பிதற்றட்டும்.