The side that is not spoken about, generally.

தமிழக அரசியல் பற்றி ஏன் கட்டுரைகள் எழுதுவதில்லை என்று வெங்கடேஷ் சாரி என்னும் வாசகர் கேட்டுள்ளார்.

அன்புள்ள திரு.வெங்கடேஷ் சாரி, வணக்கம்.

எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வெறும் புகழுரைகளையும், சாதிப் பெருமிதங்களையுமே தமிழக அரசியல் முன் வைக்கிறது. பல நேரங்களில் மத அடிப்படையில், வேறு பிரிவுகள் அடிப்படையில் அணிகள் பிரிகின்றன. உண்மையான அறிவுப்பூர்வமான வாதங்களும், கொள்கை அடிப்படையிலான விவாதங்களும் எழுவதில்லை. செய்திக் கட்டுரை எழுத்தாளர்களும் அரசியல் சரி நிலை சார்ந்தே எழுதுகிறார்கள்; உண்மை நிலையை எழுதுவதில்லை.

உதாரணமாக: இலங்கைப் பிரச்சினை பற்றி எந்த ஒரு அரசியல் தலைவரும் உருப்படியாகப்பேசுவதில்லை. ஏனெனில் யாருக்கும் முழுமையான வரலாற்று அறிதல் இல்லை. நான் இலங்கைப் பிரச்சினை குறித்து 8 நூல்களை வாங்கி, படித்து. மதிப்புரை எழுதி, அதன் பின்னர் அந்தப் பிரச்சினை குறித்துக் கருத்துக் கூறினேன். மேற்சொன்ன எந்த நூலையும் படிக்காமல், பொதுப்படையான, மொண்ணையான கருத்துக்களையே பேசிவரும் தமிழக வாசிப்பாளர்கள் வசைமொழி துவங்குகிறார்கள். இதில் அறிவுபூர்வமான விவாதம் நிகழ வாய்ப்பில்லை.

சாதி ஒழிப்பு பற்றி வாய் கிழிபவர்கள் தங்கள் குடும்பங்களில் திருமணங்களின் போது சாதி பார்க்கிறார்கள். அல்லது தங்களை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிற சாதியில் பெண் / ஆண் தேடுகிறார்கள்.

ஏதாவது ஒரு விஷயத்தில் அறிவுப்பூர்வமாக எழுதினால் சாதி அடிப்படையில் வசை பாடுகிறார்கள்; மாற்று விவாதக் களம் தமிழக வாசிப்பாளர்களிடையே இல்லை என்பதே வருந்தத்தக்க உண்மை.

இந்த நிலையில், தமிழக அரசியலாளர்களின் தரம் உலகம் அறிந்த ஒன்று. சாதி இல்லை என்று சொல்லி ஆனாலும் சாதி அடிப்படையிலேயே செயல்படும் வீரர்கள் அவர்கள் ( இடதுசாரிகள், பா.ஜ.க. ஓரளவிற்கு விதிவிலக்கு). வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே தமிழக மக்களை வைத்திருந்து அவர்களிடமிருந்து உணர்வுபூர்வமான எதிர்வினைகளையே தூண்டி , தூபம் போட்டு, அந்தத் தீயில் குளிர் காய்பவர்கள் அவர்கள். அவர்களுடன் எனக்கு ஒட்டோ உறவோ இல்லை; எனவே அவர்கள் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை, எனவே சொல்வதில்லை.

இவை எப்போது மாறும்? தற்போதைக்கு இல்லை. 40 ஆண்டுகால அரசியலின் பிடியில் சிக்கிய தமிழகக் கல்வித்துறை வழி பயின்ற சமூகம் நடை தளர்ந்து விழும். அப்போது தேச நலனில் அக்கறை கொண்ட தலைமை உருவாகிக் கல்வித்துறையைத் திசை திருப்பும்;. அப்போது புதிய சிந்தனை கொண்ட, தானாகச் சிந்திக்கக் கூடிய சமூகம் உயிர்ப்பெறும்.

இது நடக்குமா? நடக்கும். அதற்கு திராவிடம், மொழி வெறி, சாதி பேசும் அரசியல் அழிய, மங்க வேண்டும். தேசீயம் வளர வேண்டும்; எல்லாத் தரப்பு மக்களையும் அரவணைக்கும் தலைவர்கள் உருப்பெற வேண்டும். இதற்கான நல்ல தொடக்கம் வானதி ஸ்ரீநிவாசன் போன்ற, வாக்கில் நேர்மையும், பண்பில் சிறப்பும் கொண்ட தலைவர்கள் தமிழக அரசியல் களத்தில் இறங்குவது. இல. கணேசன் போன்ற பண்பாளர்கள் தேர்தலில் நிற்பது நல்லது. அரசவையில் பண்பான பேச்சு கேட்பதற்குக் கிடைக்கும்.

முன் ஒரு காலத்தில் இராஜாஜி முதல்வராக இருந்த போது, கம்யூனிஸ்ட் கட்சியில் கோபாலன் எதிர் அணியில் இருந்தார். அரசவையில் கண்ணியம் குறையாத ஆனால் மக்கள் நலம் குறித்த ஆழமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது சபை பெஞ்சு தட்டும் மாடுகள் கூட்டத்தின் தொழுவமாக இருக்கின்றது.

ஆனால் தற்போது நல்ல அறிகுறிகள் தெரிகின்றன. தொலைக்காட்சி விவாதங்களில் தற்போதைய அரசியலின் முகம் தெரியத் துவங்குகிறது. சமீபத்தில் சீமான், வைகோ, ஒரு இடதுசாரி பேச்சாளர் முதலியோர் என்ன தரத்தில் பேசினார்கள் என்பதை நாடு கண்டது. திராவிடக் கட்சிகளின் பேச்சு நாகரீகத்தின் லட்சணம் நாடு அறிந்ததே. கலைஞர், இந்திரா காந்தியைப் பற்றிப் பேசியதும் பின்னர் ‘நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக’ என்று கெஞ்சியதும், காமராசரை அவரது நிறம் பற்றிப் பேசியதும், சமீபத்தில் பெரியார் வழியில் வந்த ஈ.வெ.கெ.எஸ்.இளங்கோவன் மிக மிகத் தாழ்ந்து பேசியதும் மக்கள் மனதில் நிற்கிறது. இதற்கு சமூக ஊடகங்கள் அளப்பரிய சேவை செய்கின்றன.

இவை அனைத்தும் மக்களைச் சென்று சேர்கின்றன. சுமார் 10 ஆண்டுகளில் இந்த மாற்றங்கள் தேர்தலில் எதிரொலிக்கலாம்.ஆனால் அதற்கு மேற்சொன்ன வானதி, கணேசன், நல்லகண்ணு முதலான பெரியவர்களின் பேச்சுக்களையும், கருத்துக்களையும் பற்றி வேண்டுமானல் எழுதலாமே தவிர, மற்ற யாரைப் பற்றியும் பேசிப் பயனில்லை.

எனவே நடிகர்-அரசியல்வாதிகள் பற்றியும், மக்களை உணர்ச்சிக்கொந்தளிப்பில் ஆழ்த்தும் ‘பெரியவர்கள்’ பற்றியும் அவர்களது அரசியல் பற்றியும் பேசுவதாக இல்லை.

2 responses

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    நீங்கள் கூறுவது போல் வானதி ஸ்ரீநிவாசன் போன்றோர் தமிழக அரசியலில் ஒரு வெளிச்சக் கீற்று. கணேசன் மற்றும் நல்லகண்ணு போன்றோர் வயதாகி விட்டதால் ஒதுங்கி கொள்வது நல்லது.
    எனினும், அரசியலில் இறங்காது, ஒதுங்கி இருந்து பார்ப்பது தான் நன்றாக உள்ளது.

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      நன்றி ஐயா

      Like

Leave a comment