The side that is not spoken about, generally.

”அந்த குறளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றேன்.

‘சம்பந்தம் இருக்குண்ணா குறளை எல்லாரும் சொல்லுகானுக? குறள்னாக்க ஞாபகம் வாற எடத்துல சும்மா எடுத்து போடறதுக்குண்டான ஒண்ணாக்கும். எனக்க கிட்ட கேக்கேரே கருணாநிதிட்ட கேப்பேராவே?’

‘அறம்’ தொகுதியில் ‘பூமேடை’ கதையில் பூமேடை ராமையா என்னும் தியாகி சொல்வதாக வரும் ஒரு பேச்சு. சம்மட்டி அடி என்றால் இது தான். இக்கதையைக் கருணாநிதி படித்திருப்பாரா தெரியவில்லை.

அதே போல் இன்னொன்று. பூமேடை சொல்வதாக வருவது: ‘அன்னைக்குள்ள தியாகியெல்லாம் இன்னைக்குப் பிக்பாக்கெட்டாக்கும். அப்ப அன்னைக்குள்ள பிக்பாக்கெட் இன்னைக்குத் தியாகி தானே?’ இது ஒரு சுத்தியல் அடி.

இன்னொன்று: ‘இது நம்ம சுதேசி கோர்ட்டு. மேலே சீலிங் ஃபேனெல்லாம் உண்டு. காந்தி படம் இருக்கு. மண்ணு தின்னுறப்ப பிடிபட்ட பிள்ளை மாதிரி சிரிக்காரு.. மத்தபடி அதே டவாலி, அதே பளைய பேப்பரு. அதே சட்டம். ஒரு ஐயராக்கும் ஜட்ஜு. பழைய தண்டனைய பாக்காரு. பிரிட்டிஷ் சர்க்காரு நடைமுறைகளை அப்பிடியே ஃபாலோ பண்ணணுமுன்னுல்லா சுதேசி சர்க்காருக்க சட்டம்?’ விடுதலை பெற்ற பின் நமது சட்டத்தின் நிலையை இதைவிட யாரும் தெளிவாக எழுத முடியாது.

தியாகி பென்ஷன், மொழிப்போர் பென்ஷன் வாங்கியிருக்கலாமே என்னும் கேள்விக்குப் பூமேடை சொல்வது: ‘அது செத்தவனுக்குப் போடுற வாய்க்கரிசில்லா? நான் இப்பமும் சீவனோட இருக்கறவனாக்கும் வே. காந்திக்கு பென்ஷன் குடுத்தா வாங்கிட்டிருப்பாரா?’

‘பூமேடை’ கதையில் ஒவ்வொரு வரியும் சாட்டையடி. ஜெயமோகன் ஜொலிக்கிறார்.

எத்தனை முறை படித்தாலும் ‘அறம்’ தொகுப்பு திகைப்பை ஏற்படுத்தும் படைப்பு. சுமார் 8 முறை படித்திருப்பேன். புதிய படைப்பு ஏதாகிலும் செய்ய முயலும் போது ஒரு மன ஒருமை ஏற்பட நான் நாடுவது ‘அறம்’ தொகுப்பை.

நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

One response

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    ஜெயமோகன் எழுத்துக்கள் எனக்கு சரியாக புரிவதில்லை. அறம் தொகுப்பு வாங்க முடிவெடுத்துள்ளேன்.

    Like

Leave a reply to nparamasivam1951 Cancel reply