எப்போதுமே அதிகார வர்க்கம் பெரிய பண்ணையார்களிடமும் பெருமுதலாளிகாளால் ஆட்டுவிக்கப்படும் மேட்டுக்குடிகளிடமும் மட்டுமே அடிபணியும். ஆனால் இப்போது ஒரு முன்னாள் தேநீர் தொழிலாளி அதிகாரம் செலுத்துகிறார். அவரிடம் அடிபணிய வேண்டியுள்ளது. அரசு அதிகாரிகளை மட்டும் சொல்லவில்லை. அதிகாரம் பரவலாக உள்ள இடைத் தரகர்களும் மோதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதிகாரிகள் இட மாற்றம் என்பது மிக லாபகரமான தொழில். ஒரு அரசு அதிகாரி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பணி மாற்றம் பெற வேண்டும் என்றால் நேரே தனது உயரதிகாரியைப் பார்க்க மாட்டார். அந்த உயரதிகாரியைக் கைக்குள் போட்டுக்கொண்டுள்ள பத்திரிக்கையாளரைப் பார்ப்பார். அவருக்குச் செய்யவேண்டிய சம்பாவனைகளைச் செய்தபின் அதிகாரியின் பணிமாற்றம் தானாக நடக்கும்.
இது இப்போது நடப்பதில்லை. ஏனெனில் இந்த ‘பணியிட மாற்ற’ தொழில் அடியோடு நின்றுவிட்டது. ஏனெனில் அந்தப் பத்திரிக்கையாளர்களுக்கு அதிகார வர்க்கத்திலும், அரசின் உயர் இடங்களிலும் செல்வாக்கு இல்லை. ஏனெனில் இந்தப் பத்திரிக்கையாளர்கள் தில்லியில் தங்குவதற்கு இடமில்லை. ஏனெனில் இந்தப் பத்திரிக்கையாளர்கள் தங்கும் அரசுக்குச் சொந்தமான லுட்யென்ஸ் பூங்காப் பகுதியில் இருந்து அந்தப் பத்திரிக்கையாளர்களை வெளியேறச் சொல்லிவிட்டது மோதி அரசு. குறிப்பாக வெங்கையா நாயுடு.
இதனால் பத்திரிக்கையாளர்கள் தங்கள் பகுதி நேரத் தொழிலான தரகர் வேலை பார்ப்பது இல்லாமலாகிவிட்டது. பண வரத்து நின்றுவிட்டது. இருக்கவும் இலவச இடம் இல்லை. வராதா கோபம். அதனால் பத்திரிக்கையாளர்கள் பொங்குகின்றனர்.
முந்தைய அரசின் அமைச்சரவை உருவாக்கத்தின் போது பர்க்கா தத், வீர் சங்வி, கனிமொழி, நீரா ராடியா முதலியோர் நடத்திய பேரங்கள் நினைவிற்கு வரலாம். அப்படியான பேரங்கள் இப்போது இல்லை. மானம் கெட்டு சந்தி சிரித்தபின் வீர் சங்வியும் பர்க்கா தத்தும் இன்னமும் ஊடக வெளியில் நல்ல தங்காள் வேஷம் போடுவது இந்திய ஆங்கில ஊடகங்களின் பத்தரை மாற்றுத் தங்கத் தன்மைக்கு உதாரணம். இம்மாதிரியான பேரங்கள் பா.ஜ.க. அரசில் இல்லை. எனவே பத்திரிக்கைப் பகலவன்களுக்கு வரும்படியும் இல்லை.
இன்னொன்றும் உண்டு. மோதி பதவி ஏற்றவுடன் வெளி நாடுகள் செல்ல ‘ஏர் இந்தியா ஒன்’ எனப்படும் அரசு விமானத்தில் எந்தப் பத்திரிக்கயாளர்களுக்கும் இடம் இல்லை என்று அறிவித்துவிட்டார். பிரதமருடன் பயணம் செய்ய தூர்தர்ஷன், ஆகாசவாணி என்று அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் சொல்லிவிட்டார். அரசுப் பணத்தில் தனியார் தொலைக்காட்சிகள் கொழித்த நிலை மாறியது. தனியார் தொலைக்காட்சிகளில் பிரதமரின் பயணம் குறித்த செய்தி வரவேண்டுமானால், அவர்கள் அரசுத் தொலைக்காட்சியிடம் பணம் கொடுத்துக் காணெளிகளைப் பெறலாம் என்றும் ஆனது.
அடி மேல் அடி. அரசுப் பணத்தில் இலவசமாய் ஊர் சுற்ற முடியாது; தில்லியில் தங்கி வியாபாரம் நடத்த முடியாது. எனவே ‘பொங்கி எழுந்தன புல்லர் கூட்டம்’. ‘சகிப்புத்தன்மை அற்ற அரசு’ என்று பெயர் சூட்டின. ஊரான் வீட்டுக் காசை எடுத்து வயிறு வளர்க்க வழி இல்லை என்றால் ‘சகிப்புத்தன்மை இல்லை’. இது என்ன பகுத்தறீவோ என்ன கண்றாவியோ!
125 கோடி மக்களில் நான் எப்போதுமே ஆட்டுப் புழுக்கையைப் போலவே நடத்தப்பட்டுள்ளேன். நான் மட்டும் அல்ல, எல்லா சாதாரணக் குடிமகன்களுமே அப்படித்தான். பைசா பிரயோசனமில்லாத கவுன்சிலர்கள் முன் கூட மரியாதையாக நின்று பேச வேண்டிய நிலையிலேயே இருந்திருக்கிறேன். அப்படி இருக்கையில் ஒரு நாள் பிரதமரிடமிருந்து இந்த வாழ்த்து வந்தது. எனக்குப் பிறந்த நாளாம்.
125 கோடியில் ஒருவன், அரச வர்க்கங்களாலும் சாதாரண மின் ஊழியர்களாலுமே கூட உதாசீனப்படுத்தப்பட்டுள்ள எனக்குப் பிரதமர் வாழ்த்து அனுப்புகிறார். அது பிரதமரின் இணையச் செயலி வழியாக, தானியங்கித் தொழில் நுட்பத்தில் வந்த வாழ்த்து தான். ஆனால் வாழ்த்து வந்தது. 125 கோடியில், ஒரு கோடியில் உள்ள எனக்கு என் நாட்டுப் பிரதமர் வாழ்த்து அனுப்புகிறாரே, இப்படியும் ஒரு பிரதமரா! என்று எண்ணக் கூடாதாம். ஏனெனில் அவர் பாசிஸ்டாம். சொல்கின்றன பத்தரை மாற்றுத் தங்கங்கள்.
பிரதமர் என்ன சொன்னார்? ‘சுத்தமான பாரதம்’ என்றார். ‘ஸ்வச்ச பாரத்’ என்றார். இதில் என்ன தவறு? இதில் என்ன ஹிந்துத்வா வெறி வந்தது? வேஷம் போடுகிறாராம். நாட்டைத் திருத்துவது போல் நடிக்கிறாராம். 65 ஆண்டுகளாக நடித்தே நாசமாக்கிய நடிகர் திலகங்கள் சொல்கிறார்கள்.
வேறென்ன சொன்னார் பிரதமர்? ‘பெண்களைப் படிக்க வையுங்கள்’ என்றார். பெண் குழந்தைகளுக்காக அதிக வட்டி தரும் வைப்பு நிதியை அறிவித்தார். இதில் என்கு வந்தது ஹிந்துத்வ வெறி? ‘சுகன்யா சம்ரித்தி’ என்கிற இந்தத் திட்டம் என்ன பாசிசத் திட்டமா? 65 ஆண்டுகளாக ‘நடு-நிலை’ காங்கிரஸ் ஏன் இப்படி எதையும் கிழிக்கவில்லை? காங்கிரஸ் கிழிக்காததைப் பற்றி ஊடகங்கள் மூச்சு விட வேண்டுமே! உளறுவதற்கு எதுவும் இல்லையென்றால் இப்படியா இந்தத் திட்டத்தையும் பழிப்பது?உங்கள் மதச் சார்பின்மையில் மண்ணை வாரிப் போட.

(தொடரும்)