The side that is not spoken about, generally.

namma kiraamamதிரைப்படங்கள், டி.வி. பார்ப்பதில்லை என்று சில வருடங்களாக இருந்து வருகிறேன். மன நிம்மதி வேண்டும் என்பதற்கான நடவடிக்கை இது. இதையும் மீறி, ‘நம்ம கிராமம்’ என்னும் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.

மிகுந்த மன உளைச்சலையும் பாதிப்பையும் ஏற்படுத்திய படம் ‘நம்ம கிராமம்’. இப்படி ஒரு படம் வந்தது தெரியாமல் நான் இருந்திருக்கிறேன்.

50-60 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாலக்காட்டு பிராமணக் கதை. தமிழ் நாட்டிலும் பரவலாக இருந்த விதவைக் கோலங்கள் பற்றிய கதை இது. பல நிகழ்வுகள் நாடகத்தன்மையுடன் இருந்தாலும் ஒரு மாபெரும் கொடுமையை சித்தரிக்கும் இந்தப் படம் தமிழ் நாட்டில் ஓடியதா என்று தெரியவில்லை. ஓடியிருக்க வாய்ப்பில்லை.

கதையில் சித்தரிக்கப்பட்ட ‘பெண்ணின் தலைமுடியை எடுத்தல்’ என்னும் நிகழ்வு 1955-ல் என் வீட்டிலும் நிகழ்ந்தது. என் பாட்டி தனது 36-வது வயதில் இந்தக் கொடுமைக்கு ஆளானார். இது நிகழவில்லை என்றால் இறந்த அவரது கணவருக்கு ( என் தாத்தாவிற்கு) மாதாந்திர திவசக் காரியங்களுக்கு வைதீகர்கள் வரமாட்டார்கள். ஊரிலிருந்தும் ஒதுக்கப்படுவோம் என்னும் நிலையில் இந்தக் கொடுமையை என் பாட்டி ஏற்றுக்கொண்டார். 87 வயது வரை வாழ்ந்த அவரை நாங்கள் வெள்ளை நார்மடிப் புடவையில் தான் பார்த்துள்ளோம்.

ஒவ்வொரு முறை தீபாவளியின் போதும் நாங்கள் எல்லாம் வண்ண வண்ண ஆடைகளைப் பாட்டியிடம் கொடுத்து வாங்கி அணியும் போது, அவர் தீபாவளி முடிந்தபின் எங்கள் வற்புறுத்தலின் பேரில் புதிய வெள்ளை  நார்மடிப் புடவை அணிவார். அந்தக் கொடுமை ரொம்ப நாள் வரை எனக்குப் புரிந்ததில்லை. புரிந்த போது பாட்டிக்கு அது எதுவும் உறைப்பதில்லை என்று ஆனது.

ஓரளவு வயது வந்த பின் நான் இதுபற்றிப் பாட்டியிடம் கேட்டுள்ளேன்.

‘போடா. அது அந்தக் கால வழக்கம். வேற யாருக்கும் இந்த நிலை இனிமே வரக்கூடாது. நன்னா படி போ’ என்று ஆழ்ந்த பெருமூச்சுடன் சொல்லியிருக்கிறார். 36ல் இருந்து 87 வரை அந்த மனதில் எத்தனையோ ஆசாபாசங்களைப் பூட்டி, குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அந்த ஆத்மாவை இந்தப் படம் நினைவூட்டடியது.

படத்தில் ஒரு கேள்வி உண்டு. வேடிக்கை என்கிற பெயரில் வரும் ஒய்.ஜி.மகேந்திராவின் காமெடி டிராக் எதற்கு?

2 responses

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    நல்ல வேளை. சிறிது சிறிதாக குறைந்து 2000 இது போல் எங்கும் தமிழ் நாட்டில் இல்லை என சமீபத்தில் படித்த ஞாபகம் . ஆதி சங்கரரையே கொடுமைப்படுத்திய உலகம். அதுவும் எப்படி? அவர் தாயார் இறந்த சமயம், அவரது புத்திர கடமைகளை ஆற்ற உதவி மறுத்தது, ஆதி சங்கரரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது என பலப் பல. எல்லாம் கொடுமை.

    Like

  2. B Hariharan Avatar
    B Hariharan

    நாம் சிறிது சிறிதாக யதார்த்த வாழ்க்கையை விட்டுவிட்டு, மனித இயற்கைக்குப் புறம்பான செயற்கையான வாழ்வு முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறோம். எங்கு போகிறோம் என்று தெரியாமல் சென்றுகொண்டு உள்ளோம். உண்மையை புரிந்துகொள்ளும் போது, நாம் வெகு தூரம் சென்று விட்டிருப்போம் எனத் தோன்றுகிறது.

    Like

Leave a reply to B Hariharan Cancel reply