
‘நெய்யிடை நல்லதோர் சோறும்..’ என்கிறார் பெரியாழ்வார்.
இரண்டு வியாக்கியானங்கள் சொல்கிறார்கள். ‘நெய் அளவு சோறு’ என்று கொண்டால் சோற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளலாம். கார்போஹைரேட் அளவு குறைவாக உண்ண வேண்டும் என்பதாக வைக்கலாம். ஆனால் அவ்வளவு குறைவாகவா உண்பார்கள்? என்கிற கேள்வி எழுகிறது.
‘சோற்றின் அளவு நெய்’ என்று கொண்டால் பயமாக இருக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சம அளவில் அதுவும் அதிகமாக உண்டால் என்னாவது?
‘நெய் நிறையவும், நெய்யின் இடையே சோறு’ என்று கொண்டாலும் இக்கால அளவில் ஆபத்து தான். தற்காலத்தில் செலவு அதிகம் ஆகும் என்பதை விட, மருத்துவ பயம் கூடுதலாக இருக்கிறது.
ஆனால் பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் அப்படிச் செய்யவில்லை. விரதம் இருக்கிறாள். ‘நெய்யுண்ணோம் பாலுண்ணோம்..’ என்கிறாள். அப்படி விரதம் இருந்து, முடிவில் ‘பாற்சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார..’ என்று முழங்கையில் நெய் வடியும் வகையில் உண்போம் என்கிறாள். தானாக உண்ண மாட்டாளாம், கூடியிருந்து அனைவருமாய் உண்போம் என்கிறாள்.
அது சரி. இவ்வளவு பாலும் நெய்யும் சாத்தியமா? அவளே விடையும் அளிக்கிறாள்:
‘வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’ இருக்கும் வரை நெய்யும் பாலும் கிடைக்காதா என்ன? அத்துடன் அவளிடம் ‘நீங்காத செல்வம் நிறைந்து’ கிடக்கிறது. இத்தனை பாலும் நெய்யும் சாத்தியமே.
அப்படி என்ன செல்வம் அவளிடம் இருந்தது? பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்யும் பெரியாழ்வாரின் மகளிடம் அப்படி என்ன செல்வம் இருந்துவிட முடியும்?
கோதை காட்டும் பாதையில் சென்று நாமும் பார்ப்போம்.