‘பழைய கணக்கு’ நூலில் உள்ள வரலாற்றுக் கதைகள் பற்றி சில கடிதங்கள் வந்தன. இக்கதைகள் என்ன மாதிரியான உத்தி? இவற்றை எப்படி எழுதுவது? என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்.
‘பழைய கணக்கு’ற்குள் செல்வதற்கு முன் வேறு இரு சிறுகதைகளைப் பார்ப்போம்.
அரவிந்தன் நீலகண்டனின் ’அமுதம்’ என்றொரு சிறுகதை. ‘பிரானையங்கார்’ என்னும் பண்டைய நாளைய கதாபாத்திரம் ஆழ்வார்களின் அடியொற்றி சீர்திருத்தம் செய்ய முனைவதும், அதற்கான பலன்களை அனுபவிப்பதும், சில நூற்றாண்டுகள் கழித்து அந்தப் பெரியவரின் பணி எப்படி பார்க்கப்படுகிறது என்பதும் கதை. கதையில் சில விடுபடல்கள் தெரிந்தாலும், பழையதையும் புதியதையும் இணைக்கும் யுக்தி நல்ல முயற்சி. கதையின் முடிவு ஊகிக்க முடிவதாக உள்ளது. ஆக, முடிவில் வேண்டிய ‘திடுக்கிடல்’ தென்படவில்லை. ஆனால் புராணத்தையும், ஒரு கல்வெட்டையும், செவிவழிச் செய்தி ஒன்றையும் தற்கால நிகழ்வுகளையும் ஒரு புள்ளியில் இணையச் செய்யும் முயற்சி அது.
தொடர்புடைய கதை சுஜாதா தேசிகனுடைய ‘ராமானுஜலு’ என்னும் அதிரடி சின்னஞ் சிறுகதை. சிறுகதை வடிவ ஒழுங்கு மிக நேர்த்தியாய் அமைந்துள்ள, தத்துவத் தொடர்புடைய, பல நூற்றாண்டு இடைவெளியை ஒரு வரியில் இணைக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று. சுஜாதா கைத்தொடல் இருப்பது போன்று ஒரு தோற்றம் ஏற்படுத்தும் கதை.
‘பழைய கணக்கு’ நூலில் இதே பழைய புதிய இணைப்பை ஏற்படுத்தும் கதைகளை நான் எழுதியுள்ளேன். 200 ஆண்டுத் தொடர்பு தெரியும் வண்ணம் எழுதப்பட்ட கதைகள் அத்தொகுப்பில் உள்ளன. ‘அனுமன் சொன்ன கதை’, ‘வாசல்’ முதலானவை இந்த ரகத்தில் இருக்கும். சென்றகால அநீதி வரலாற்றில் தங்கி புனைவுகளில் வெளிப்படல். அல்லது பல நூறு ஆண்டுகால தொடர்ந்த நினைவுகூரல்களின் வழியாக மானுடத்தின் நினைவடுக்குகளிலேயே தங்கியிருந்து, தற்காலத்திய ஒரு நிகழ்வின் , காட்சியின் மூலம் உருப்பெற்று பண்டைய சித்திரத்தையும் புதிய பார்வையையும் இணைத்துப் புனைவில் வெளிப்படுவது என்பது இந்த வகை.
இந்த மூன்றும் தொடுட்டுச் செல்லும் கதைக்களம் ஏறக்குறைய ஒன்றே.
கிளர்ந்தெழுந்த ஞானச் சுடர் பேருருவெடுத்து உலகெங்கிலும் பிரும்ம ஞானப் பேரொளி பரவச் செய்த காலம் ஒன்று பாரதத்தில் இருந்தது. அதே நேரம் மற்ற கண்டங்களில் மானுட வளர்ச்சி பிற்போக்குத்தனமாயும், தேக்க நிலையிலும் இருந்தது. பின்னர் அக்காலம் மறைந்து பாரத தேசத்தின் ஞானப் பேரொளி மங்கி, மிலேச்ச அரசுகள் தோன்றி, இன்னமும் பின்னாலிழுக்கப்பட்டு, பெருவீழ்ச்சி அடைந்து, மக்கள் தங்களின் முன்னாளைய பெருமை மறந்து, வெறும் சோற்றுப் பிண்ட வாழ்வு வாழும் நிலையை அடைவதைப் பெருமை என்று கொள்ளும் நிலையில் வாழ்ந்து வருவர். இந்த இரு நிலைகளையும் இணைக்கும் பண்பாட்டுக் கருவியாக தத்துவம், கோவில், சிற்பம் முதலானவை திகழும்.
இந்த இணைப்பைக் கண்டுகொண்டு அதன் ஊடாகக் கதை சொல்வது என்பதே மேற்சொன்ன மூன்று கதைகளிலும் உள்ள உத்தி. இதற்கு நமது பாரத பண்பாடு, தத்துவம், சிற்பம், கலைகள் முதலியவற்றில் ஒரு சிலவற்றோடாவது கொஞ்சம் தொடர்பு இருந்து, அந்தப் பழைய பண்பாட்டுப் பெருமைகளை மீட்டெடுக்கும் உத்வேகமோ அல்லது மீட்டெடுக்க வேண்டும் என்கிற தாபமோ இருப்பவனாக எழுத்தாளன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..
மொழியின் மீது ஆளுமை, பண்பாட்டின் மீது காதல், சென்ற மகோன்னதக் காலங்களின் மீதான பெருமிதம் கலந்த பரிவுப் பார்வை, நீண்ட இடைவிடாத வாசிப்பு முதலியன இருப்பின் யாரும் இம்மாதிரியான கதைகளை எழுதலாம் என்றே நினைக்கிறேன்.