The side that is not spoken about, generally.

நண்பரின் மகள் சுதா பூப்டைந்தாள். இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். நான் அப்படி நினைக்கவில்லை. சுதா தொடக்கப்பள்ளியில் 3 ம் வகுப்பு படிக்கிறாள்.

பெருக்கல் வாய்ப்பாடு பயிலத் துவங்கிய குழந்தை அது. என்ன புரிந்து கொள்ளும்? இப்படிக் கடந்த சில வருடங்களில் இரண்டு மூன்று நிகழ்வுகள் நடந்துவிட்டன. ஏன் இப்படி?

நண்பர் இந்தியர். அவர் அமெரிக்காவில் சில வருடங்கள் பணியில் இருந்த போது சுதா பிறந்தாள். பின்னர் சிங்கப்பூருக்கு மாற்றலாகி வந்துவிட்டார். ஆனால் அமெரிக்க படாடோபம் கொஞ்சமும் குறையவில்லை. அவர் குடும்பத்துடன் வாரத்தில் இரு முறையாவது மெக் டொனால்ட்ல் அசைவம்  உண்பார். வேளை கெட்ட வேளையில் பிட்சா என்னும் பிசாசையும் அவ்வப்போது உண்பது வழக்கம். போதாத குறைக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் வகைகளை மட்டும் பயன்படுத்துவார்கள். வழக்கமாக வாங்கும் அந்த பிராண்ட் கிடைக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலியா பால் எதுவாக இருந்தாலும் வாங்குவார்கள்.

சமீபத்தில் பதப்படுத்தப் பட்ட பாலினால் மனித உடலில் ஹார்மோன்களின் அளவுகள் தாறுமாறான அளவில் அதிகரிக்கின்றன என்று பசு ஆர்வலர் நண்பர் சசி குமார் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒருவேளை இதனால் கூட இருக்கலாம் என்றும் குழ்ந்தை சுதா விஷயத்தில் நினைக்கத் தோன்றுகிறது.

நேற்று வரை 8-9 வயதுப் பிள்ளைகளுடன் ஓடி விளையாடிய குழந்தை, புரியாத வயதில், தடுமாற்றங்கள் நிறைந்த அணுகுமுறைகளுடன் இனி பயணிக்க வேண்டி இருக்கும் என்று நினைக்கும் போது மனம் ஒரு நிலையில் இல்லை.

பதப்படுத்தப்பட்ட பால், மரபணு மாற்றப்பட்ட தானியங்கள், செயற்கை உரம் – இன்னும் என்னென்னவோ மாற்றங்களுடனும், அவற்றால் என்ன பின் விளைவுகள் ஏற்படும் என்று அறியாமலேயே அவற்றைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள நமது கையறு நிலை நம்மைப் பார்த்து ஏளனம் செய்கிறது.

சின்னக் குழந்தையாக இருக்கும் போதே உதட்டுச் சாயம் பூசுகிறார்கள். அதில் உள்ள வேதியல் பொருட்கள் பற்றி இணையத்தில் தேடினால் மனம் கொதிப்படைகிறது. தெரிந்து பல வேதியல் பொருட்கள், தெரியாமல் என்னென்ன உள்ளனவோ. குழந்தைக்குப் பள்ளியில் இடைவெளி நேரத்தில் உண்ண ‘உடனடி நூடூல்ஸ்’ ,’கப் நூடூல்ஸ்’ என்று வழங்குகிறார்கள். ஒரு பிளாஸ்டிக் டம்ளர் அளவு நூடூல்ஸ் உள்ளது. அதில் வெந்நீர் ஊற்றுகிறார்கள். இரண்டு நிமிடத்தில் நூடூல்ஸ் தயார். குழந்தை உண்கிறது. இதில் என்ன விஷங்கள் உள்ளனவோ தெரியாது.

அது தவிர உடனடி-மருதாணி என்றொரு வழக்கம் கிளம்பியிருக்கிறது. மருதாணி இலை பறித்து, அரைத்து இட்டுக்கொள்வது என்று இல்லாமல், பழுப்பு நிறத்தில் ஒரு பொடியைத் தண்ணீரில் கரைத்து இட்டுக்கொள்கிறார்கள். இல்லை, உடலில், கையில் வரைந்து கொள்கிறார்கள். என்னென்ன விஷ ஊற்றுகள் உடம்பினுள் செல்கின்றனவோ!

இந்தக் கண்றாவிகள் தவிர தோலின் நிறத்தை மாற்றுகிறோம் என்று சொல்லி என்னென்னவோ மாவுக்கலவைகளை உடலில் அப்புகிறார்கள். குழந்தையையும் விடுவதில்லை.

உடம்பின் உள் செல்லும் உணவு முதல், வெளியில் தடவும் மாவு வரை தொலைக்காட்சியில் கண்டதை நம்பி என்னவென்றே தெரியாமல் எடுத்துக்கொள்ளும் இந்த ‘முற்போக்கு-பெற்றோர்’களால் சுதா போன்ற குழந்தைகள் தங்கள் பிள்ளைப் பருவத்தை விரைவில் தொலைத்துவிடுகின்றன.

இவற்றைப் பற்றிப் பேசினால் பழமைவாதி என்கிறார்கள். அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுங்கள். போதும்.

3 responses

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    மிக அருமையான பதிவு. எனது முக நூலில் பகிர்கிறேன்

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      நன்றி ஐயா

      Like

  2. kowsi2006 Avatar

    மனது கொதிக்கிறது. ஆனால் அரசாங்கம் வால்மார்டையும், டெஸ்கோவையும் வரவேற்கிறது.

    Like

Leave a comment