80களின் துவக்கத்தில் பள்ளி விடுமுறை நாட்களில் நெய்வேலியில் இருந்து தேரழுந்தூர் செல்வதுண்டு. கோவில் உற்சவம் இல்லாத மதிய நேரத்தில் முத்தா என்று அழைக்கப்பட்ட ஒன்று விட்ட பெரியப்பாவின் வீட்டில் துழாவிய போது ஒரு தமிழ் இதழ் கிடைத்தது. வினோபா பாவே என்பவர் பற்றியம், கருணாநிதி என்பவர் பற்றியும் எழுதியிருந்தது. நீள மூக்கு காக்கை ஒன்று ஒரு பழத்தைக் கொத்துவது போல் ஒரு கேலிப்படம். காக்கையின் மேல் ‘இந்திரா காந்தி’ என்றும் பழத்தின் மேல் ‘ஆந்திரா’ என்றும் எழுதப்பட்டிருந்தது. படம் வினோதமாக இருந்ததால் என் கவனத்தை ஈர்த்தது.
உள்ளே கழுதை ஒன்று கறுப்புக் கண்ணாடி அணிந்து உபன்யாசம் செய்வது போல் இன்னொரு கேலிச்சித்திரம். ‘கீமாயணம்’ என்று உபன்யாசகர் பின்னால் எழுதியிருந்ததாக நினைவு. உபன்யாசகர்கள் குடும்பத்தில் பிறந்த எனக்கு இந்த கேலிச்சித்திரம் மனதில் பெரிய பாதிப்பை உண்டாக்கியது.
ஆனால் 30 வருடங்கள் கழித்தும் இந்த கேலிச்சித்திரம் நினைவில் இருப்பதற்குக் காரணம் அதன் அட்டையில் ‘துக்ளக்’ என்று எழுதியிருந்தது என்பது தான். என் முதல் ‘துக்ளக்’ அனுபவம் அது.
நெய்வேலியில் ‘துக்ளக்’ வெளிப்படையாகக் கிடைக்கவில்லை. அப்பா அலுவலகத்தில் யாரும் துக்ளக்கை வெளிப்படையாகப் படிப்பதில்லை. தீவிர இந்திரா காங்கிரஸ்காரர்கள் துக்ளக் படிப்பதில்லை என்று எனக்கு அப்போது புரியவில்லை.
ஆனால் நான் தொடர்ந்து படித்து வந்தேன். என் நண்பன் ‘கிச்சாண்டி’ என்ற கிருஷ்ணன் வீட்டில் புத்தகம் கிடைத்தது. அப்போதெல்லாம் மாதம் இருமுறை வரும் என்று நினைக்கிறேன். வெள்ளி அன்று சென்று 2 மணி நேரம் படிப்பது வழக்கம். படித்த பின் அது பற்றி வாக்குவாதங்கள் நடைபெறும்.
‘தடை செய்யப்பட வேண்டிய இயக்கமா ஆர்.எஸ்.எஸ்.’ என்று ஒரு கட்டுரைத் தொடரை எழுதினார் சோ. பல கோணங்களிலும் அலசி எழுதப்பட்ட கட்டுரை அது. ‘ஆர்.எஸ்.எஸ்.’ என்பது கெட்ட வார்த்தை அல்ல என்று ‘செக்யுலர்’ நெய்வேலியில் பலருக்கு உணர்த்திய கட்டுரை அது என்று நினைக்கிறேன். அது வரை ‘ஆர்.எஸ்.எஸ்.’ என்று வாயை மூடிக்கொண்டே சொல்வார்கள்.அதை மாற்றியமைத்தார் சோ.
சேலம் பொறியியல் கல்லூரியில் நண்பர்கள் பலர் ‘துக்ளக்’ இதழுக்கு அடிமை ஆனார்கள். துக்ளக்கின் தீவிர இந்திய ஆதரவு, விடுதலைப்புலி எதிர்ப்பு இரண்டும் என்னைக் கவர்ந்தன. வி.பி.சிங் மண்டல் கமிஷனை அமல்படுத்தியது, கருணாநிதி அரசில் இருந்து கொண்டே புலிகளுக்கு ஆதரவாக இருந்தது, இவை பற்றியெல்லாம் துக்ளக் என்ன சொல்கிறது என்று தெரிந்து மற்ற நண்பர்களுக்கு எடுத்துரைப்பேன்.
அப்போது தான் ‘எங்கே பிராமாணன்’ தொடரை எழுதத் துவங்கினார் சோ. முழுவதும் படித்து பல தெளிவுகளை பெற்றேன். அவர் மூலமாக ‘தெய்வத்தின் குரல்’ அறிமுகமானது. ஒரு பிரச்சினையை எப்படிப் பல கோணங்களில் இருந்தும் அணுகி வேண்டும் என்றும் அறிந்துகொண்டேன்.
அடியேனது ‘நான் இராமானுசன்’ நூலிற்கு ‘எங்கே பிராமணன்’ துணை செய்தது. இதை நான் நூலிலும் குறிப்பிட்டுள்ளேன். எந்த ஒரு பிரச்சினையிலும் சோ என்ன சொல்கிறார் என்று பார்ப்பது எங்கள் குடும்பத்தில் வழக்கமாகிப்போனது.
‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தின் வரிகளை மனப்பாடமாக ஒப்பிப்பதில் எனக்கும் கிச்சாண்டிக்கும் போட்டி இருக்கும். பின்னாளில் அவரது பல நாடகங்களை நெய்வேலி நூலகத்தில் படித்திருந்தேன். என்னை மாற்றியமைத்த எழுத்து அவருடையது.
அநேகமாக அவரது எல்லா நூல்களையும் படித்துள்ளேன். வேலைக்காக பம்பாய் சென்ற போதும் துக்ளக் வரும் வியாழன் அன்று கடையில் சொல்லி வாங்கி வைப்பதுண்டு. சில வருடங்கள் ஜப்பானில் வேலை செய்த போது ‘துக்ளக்’ கிடைக்காமல் அவதிப்பட்டேன். சிங்கப்பூரில் துக்ளக் கிடைக்கிறது.
துக்ளக் ஆண்டு விழாவிற்காக ஜப்பானில் இருந்து வந்த ஒரே ஆள் நானாகத்தான் இருக்க முடியும். சங்கராந்தி அன்று எப்படியும் சென்னையில் இருந்துவிடுவேன். அன்று மாலை ஆண்டு விழா ஆயிற்றே! கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் ஆண்டு விழாவிற்குப் போக மனம் வரவில்லை.
இனி போக வேண்டிய அவசியம் இல்லை.
Leave a reply to Amaruvi Devanathan Cancel reply