80களில் நெய்வேலியில் போட்டியும் பொறாமையும் அதிகம்.
ஸத்சங்கம்-மணித்வீபம் கீரன் உபன்யாசம் ஏற்பாடு செய்தால், ஸத்சங்கம் -தபோவனம் வாரியாரை வரவழைக்கும். விநாயகர் சதுர்த்தியை மணித்வீபம் தூள் பரத்தினால், தபோவனம் ராதா கல்யாண உற்சவத்தை விமரிசையாகக் கொண்டாடி தன பெருமையை நிலை நாட்டும்.
இங்கே சூரிய நமஸ்காரம் ஏற்பாடு செய்தால் அடுத்த வாரம் அங்கு திருப்பாவை போட்டி நடக்கும். திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வேளையில் மணித்வீபம் ஜெயராம சர்மாவின் நாராயணீயம் உபன்யாசத்தை ஏற்படுத்தி சம நிலையைக் குலைத்தது. ஒரு மாதம் கழித்து தபோவனமும் அவரை அழைத்து வந்து வால்மீகி ராமாயண உபன்யாசம் என்று நிலமையைச் சரி செய்தது.
நல்ல விஷயங்களுக்கான போட்டி அது. பயன்பெற்றது அப்போதைய பள்ளிப் பிள்ளைகளான நாங்கள். இன்று ஓரிரு நல்ல சத்-விஷயங்கள் தெரிவது போல் தோன்றினால் அதற்கு காரணம் அப்போதைய நெய்வேலியில் இந்த அறப்பணிகளில் ஈடுபட்ட என் தந்தையார் போன்ற பல பெரியவர்கள்.
ஒருமுறை மணித்வீபத்தில் வாரியார் சுவாமிகள் உபன்யாசம். 1967 என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்வி. அண்ணாத்துரையின் உடல் நிலை சரியில்லாத நேரம். வாரியார் சுவாமிகள் யதேச்சையாக எதோ சொல்ல, அது அண்ணாத்துரையின் உடல் நிலை பற்றிய கருத்து போல் பரவ, ஒரு நாள் இரவு அவர் தங்கியிருந்த வேடடைச் சுற்றி தி.க. / தி.மு.க. ஆட்கள் சூழ்ந்துகொண்டு வயதில் முதிர்ந்த அந்தப் பெரியவரைச் சரமாரியாகத் தாக்கினார்கள். அவர் பூசையில் இருந்த சிவ லிங்கத்தை உடைத்துவிட்டும் சென்றனர். அன்றிலிருந்து வாரியார் மணித்வீபம் வரமாட்டார், தபோவனத்தில் மட்டும் பேருரையாற்றுவார். ( அவரைத் தாள்ளியவன் பின்னாளில் மரணப் படுக்கையில் இருந்த பொது வாரியாரிடம் திருநீறு பெற்றான் என்பது வேறு விஷயம்)
நெய்வேலியை நினைத்துக்கொள்ளாத நாளே இல்லை. விரைவில் ஒருமுறை சென்று வர வேண்டும்.
Leave a comment