1988ல் ஒருமுறை 44-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் நெய்வேலிக்கு எழுந்தருளியிருந்தார். ஒரு நாள் பிரயாணம். 30 நிமிடங்கள் சொற்பொழிவு ஆற்றினார். ‘நாம் யார்?’ என்பது தலைப்பு. 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நான் முதன் முதலில் புரியும்படி பேசும் ஒருவரது பேச்சைக் கேட்கிறேன்.
‘என்னோட புஸ்தகம்ங்கறோம். அப்ப நாம வேற புஸ்தகம் வேறன்னு ஆறதோல்லியோ? அதோட புஸ்தகம் இந்த உடம்போடதுன்னு ஆறது. என்னோட கைன்னு சொல்றோம். அப்ப இந்த கை இந்த ஒடம்போட சொந்தம்னு ஆறது. இன்னும் மேல போய், என்னோட ஒடம்புன்னு சொன்னா, ஒடம்பு வேற நாம வேறன்னு ஆறதில்லையா? அப்ப அந்த ‘நான்’ அப்பிடிங்கறது ஆத்மா..’ என்று 16 வயது ஆன எனக்குப் புரியும்படியாகச் சொன்னார்.
25 ஆண்டுகள் கழித்து ‘நான் இராமானுசன்’ எழுதுவதற்கான கரு 1988ல் நெய்வேலியில் விதைக்கப்பட்டதை, அந்த ஆதி குருவை, இன்று நன்றியுடன் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.
வேதாந்த விசாரங்கள் யாவருக்கும் புரியும்படி இருக்க வேண்டும். எளிய முறையில் சொல்லித் தரப்பட வேண்டும். இவை பள்ளிகளில் கற்றுத் தரப்பட வேண்டும். அதுவே நல்ல துவக்கமாக அமையும். அதற்கு நல்ல குருமார்கள் அமைய வேண்டும்.
இவை அனைத்திற்கும் இறையருள் வேண்டும்.
Leave a comment