ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் வீடுகளில் வருமான வரிச்சோதனைகள் நடந்துள்ளன. நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப் பட்ட ஒன்றுதான் என்பதால் அதிர்ச்சி அளிக்கவில்லை. ஆனால் அதற்குப் பின்னான ப.சி.யின் ஆணவப் பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது.
பாரம்பரியம் உள்ள குடும்பம், நல்ல கல்வி, பெரிய பதவிகள். இவை இருந்தும் தனது தற்போதைய நிலைக்கு அவரே காரணம்.
இவர் குறித்த எனது பார்வை குவிந்தது 2011ல். பல ஊழல் புகார்கள் வெளி வந்த போது ஒரு செய்தி உறுத்தியது.
2011ல் வாசன் ஐ கேர் என்னும் நிறுவனம் திடீரென்று விஸ்வரூபம் எடுத்தது. வீதிக்கு வீதி அதன் கடை திறக்கப்பட்டது. கொஞ்சம் விசாரித்தேன். சிங்கப்பூர் அரசின் ஜி.ஐ.சி (GIC) 100 மில்லியன் டாலர்களை அதில் முதலீடு செய்தது தெரிய வந்தது. ‘டயாபட்டிக் ரெடினோபதி’யால் இந்தியர்கள் வெகு விரைவில் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதற்கான மருத்துவ சேவையில் பெரும் பணம் ஈட்ட முடியும் என்னும் கணக்கு இருக்கிறது என்று ஜி.ஐ.சி. தனது முதலீட்டுக் காரணத்தைத் தெரிவித்தது.
‘ஒரு முதலீட்டுக் கம்பெனி என்கிற அளவில் இந்த முயற்சி சரியானதே. தனது நாட்டிற்கு நலமளிக்கும் திட்டங்களை எந்த நாடும், அதன் முதலீட்டு நிறுவனங்களும் செய்யும் தான். ஆனால் வாசன் ஐ கேர் ஏன்?’ என்று உற்றுப் பார்த்தேன். அந்தக் கம்பெனியின் பின்னணியில் உள்ள புள்ளிகள் தெரிந்தார்கள். தீர அலசி ஆராய்கின்ற, உலகத்தரம் வாய்ந்த முதலீட்டு ஆய்வாளர்கள் கொண்ட முதலீட்டுக் கம்பெனியையும், செக்கோயா கேப்பிடல் என்னும் பன்னாட்டு முதலீட்டுக் கம்பெனியையுமே கண்ணைக் கட்டிக் கூட்டிக் கொண்டு போன அந்தப் பெருமகன்கள் நிச்சயம் திறமையானவர்களே.
வெளி நாட்டு அரசின் முதலீட்டு நிறுவனம் இவ்வாறு ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால், மேலும் முதலீடுகளைச் செய்ய விரும்புமா? இதனால் யாருக்கு இழப்பு? தேசம் எக்கேடு கெட்டாலும் என் பை நிரம்ப வேண்டும் என்கிற எண்ணம் வருமாயின் எத்தனை படித்திருந்தால் தான் என்ன?
சிங்டெல் (SingTel ) என்னும் சிங்கப்பூர் அரசு நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தின் 40% பங்குகளை வைத்துள்ளது. அந்நிய முதலீடு என்கிற வகையில் ஏர்டெல் நிறுவனம் மிகப்பெரிய அளவில் அலைப்பேசிச் சேவைகள் வழங்க இது உதவியது. இதனால் ஏர்டெல் நிறுவனம் வளர்ந்தது, நாடு பயன் பெற்றது, அதன் மூலம் சிங்டெல் நிறுவனமும் லாபம் ஈட்டியது. இதன் மூலம் இன்னும் பெரிய அளவில் தெமாசிக் முதலான முதலீட்டுக் குழுமங்கள் இந்தியாவில் குடிநீர், எரிவாயு, மருத்துவம் முதலான துறைகளில் முதலீடு செய்தன. இந்தியாவிற்குக் குறைந்த செலவில் அந்நிய முதலீடு பெற இவ்வகையிலான நிறுவனங்கள் உதவி செய்தன. நாடு பலன் பெற்றது.
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாகாணத்தில் ஹைபிளக்ஸ் (Hyflux) என்னும் சிங்கப்பூர் நிறுவனம் குடிநீர் சுத்திகரிப்புத் துறையில் முதலீடு செய்துள்ளது, தொழில் நுட்ப உதவியும் செய்து வருகிறது. ராஜஸ்தானில் 1000 மெகாவாட் சூரிய வழி மின்சாரம் தயாரிக்க சிங்கப்பூர் நிறுவனங்கள் உதவி வருகின்றன. ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியை சிங்கப்பூர் நிறுவனங்கள் வடிவமைத்து வருகின்றன. இந்தியாவின் ஆகப்பெரிய அன்னிய முதலீட்டாளராக சிங்கப்பூர் திகழ்கிறது.
சிங்கப்பூர் மட்டுமல்லாமல், மற்ற பிற நாடுகளும் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன. முதலீடு செய்யும் முன் எந்த நிறுவனமும் தங்களுக்கு அளிக்கப்பட்ட தகவல்களையும், தரவுகளையும் சரி பார்க்கும். இதனை ஆங்கிலத்தில் Due Diligence என்று அழைப்பர். கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு இந்த நிறுவனங்கள் செயல்பட்டாலும் தவறு நடக்க வாய்ப்புள்ளது தான். அவ்வேளைகளில், முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை முதலீட்டு நிறுவனங்கள் பார்ப்பது வழக்கமே. அவ்வகையில் இந்த வாசன் நிறுவனத்தில் பின்னால் சிதம்பரம் என்னும் நிதியமைச்சரின் முத்திரை இருப்பதை அறிந்துகொள்ளும் இந்த நிறுவனங்கள் இந்த மூன்று எண்ணங்களால் உந்தப்படும் :
- முதலீட்டின் பின் நாட்டின் நிதியமைச்சரே இருக்கிறார். பாதுகாப்பான முதலீடு போல் தெரிகிறது.
- நிதியமைச்சர் ஸ்டான்போர்டு பல்கலையில் பயின்றவர். பொருளாதார அறிவுடையவர்.
- உலகமயமாக்கலை இந்தியாவில் செயல்படுத்திய அரசின் முக்கிய பங்காளர். எனவே பயமில்லை.
இப்படிப்பட்ட எண்ணங்கள் முதலீட்டாளர்களின் மனதில் எப்படியும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
இந்தச் சூழலில், இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அது ஊழலில் தான் முடியும் என்னும் பயம் அந்நிய முதலீட்டு நிறுவனங்களுக்கு ஏற்பட்டால், கேடு இந்தியாவிற்கே. நாட்டின் கதி என்னவானாலும் பரவாயில்லை, தனக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று செயல்படும் அரசியல்வாதியாக திரு.சிதம்பரம் ஆனது மனிதன் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிச் செல்வதை உறுதி படுத்துகிறது என்று தோன்றுகிறது.
இப்படிப்பட்டவர் மோதியின் பொருளாதார ஞானத்தை ஒரு தபால் உறையின் பின்னால் எழுதிவிட முடியும் என்றார். ஒருவேளை ஊழல் செய்து தனது “பொருள் ஆதாரத்தை” அதிகரிக்க மோதிக்குத் தெரியாது என்பதை சூசகமாகச் சொல்வதாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.
பெரு நோட்டு ஒழிப்பு (Demonetization) நடந்த பொது அதிக ஒலியளவில் முழங்கியதும் இவரே. இவருடன் சேர்ந்து கொண்டு சேர்ந்திசை இசைத்தவர்கள் கனிமொழி அம்மை, லாலு, மமதா போன்றோர். ஊழலாரை ஊழலாரே காமுறுவர் என்று கொள்ள வேண்டியது தான் போல.
பெரு நோட்டு ஒழிப்பின் பின்னர் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 9.1 மில்லியன் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த நோட்டு ஒழிப்பை ப.சி. எதிர்த்தார். என்ன நிதியமைச்சரோ இவர்!
மோதியின் பொருளாதார அறிவை எழுதுவது இருக்கட்டும். இவரது அறிவை எவ்விடத்தில் எழுதுவது? உள்ளங்கையிலா? ஆமாம். எழுதலாம் தான். காங்கிரஸ் கையின் ஊழல் கறையில் இவரது பொருளாதார அறிவும் மிளிர்ந்து ஒளிரும்.
தேச நலனுக்கு எதிராகச் செயல்பட்ட கரும்புள்ளிகள் விரைவில் தங்கள் செயல்களின் பலனை அனுபவிக்கட்டும்.
‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்’ என்றார் பாரதியார். போகட்டும்.
தரவுகள்:
Leave a reply to nparamasivam1951 Cancel reply