திருக்குறளில் இருந்து ‘புலால் உண்ணாமை’, ‘கள் உண்ணாமை’ அதிகாரங்களை நீக்கிவிட்டால் என்ன? போராடுவதற்கு வசதியாக இருக்குமே என்று யோசித்தேன்.
ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது. வள்ளுவர் பசுவைப்பற்றிப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ‘ஆவிற்கு நீர் என்று இருப்பினும்..’ குறளில் பசுவிற்கு நீர் வேண்டும் என்றாலும் இரக்காதே என்கிறார். எனவே பசு முக்கியம் என்று வள்ளுவர் சொல்கிறார். ‘ஆ பயன் குன்றும் அறு தொழிலோர் நூல் மறப்பர்..’ என்று பசுவையும் பிராம்மணர்களையும் சேர்த்துச் சொல்கிறார். ஆக இப்படியான குறட்பாக்களையும் நீக்க வேண்டி இருக்கும். சிக்கல் கொஞ்சம் பெரிது தான்.
சரி. திருக்குறளைத் தடை செய்து விடலாம். அதுதான் வழி போலத் தெரிகிறது. யாரும் படிப்பதில்லை. தடை செய்தாலும் யாருக்கும் தெரியாது.
ஆனால், கல்வெட்டெல்லாம் பசு பற்றிப் பேசுகின்றன. குளம், ஏரி முதலான நீர் நிலைகளுக்குத் தீங்கு செய்ப்பவன் காசியில் காராம்பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவான் என்று பல கல்வெட்டுக்கள் சொல்கின்றன. கல்வெட்டையெல்லாம் தடை செய்துவிடலாமா?
சிலப்பதிகாரம் “பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், மூத்தோர், குழந்தைகள் இவர்களை விடுத்து மற்ற அனைத்தையும் எரித்துவிடு’ என்று கண்ணகி கூறுவதாகச் சொல்கிறது. கண்ணகியை எப்படித் தடை செய்வது? பேசாமல் சிலப்பதிகாரத்தைத் தடை செய்துவிடலாமா?
விஷயம் ரொம்ப சிக்கலாயிடும் போலத் தெரிகிறது.
சரி. நாளைக்கு எச்-1 பி விசா வாங்க யூஸ்.எம்பசி முன் க்யூவில் நிற்கும் போது யோசிக்கலாம் என்று எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொண்டேன்.