The side that is not spoken about, generally.

‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது ஸ்ரீமத் ராமானுஜரின் ஆஞ்ஞை.

தற்காலத்தில் உத்யோக நிமித்தம் எங்கெல்லாமோ இருக்க நேர்கிறது. பணி ஒய்வு பெற்றவுடனாவது தத்தமது பூர்வீக ஊர்களில் (அ) அருகிலிருக்கும் திவ்ய தேசங்களில் குடியிருக்க முயற்சிக்கலாம். கொஞ்சம் அசௌகரியங்கள் இருக்கும். ஆனாலும் வீண் மன உளைச்சல், அதிக இரைச்சல், சுற்றுச் சூழல் கேடு முதலியவற்றில் இருந்து தப்பிக்கவும் இது நல்ல வழியே. ரிடையர் ஆன பின்னும் பம்பாய், சென்னை என்று உழல்வதில் அந்தந்த கார்ப்பரேஷன்களுக்குத் தான் பயன்.

பல திவ்யதேசங்களில் பெருமாளுக்கு சேவாகாலம் சாதிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. புஷ்பகைங்கர்யம் செய்யக்கூட ஆளில்லாமல் பெருமாள் தனித்து நிற்கிறார். அதுவும் அறம் நிலையாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திவ்யதேசங்களின் நிலை சொல்லி மாளாது. நேரடியான அனுபவத்தால் சொல்கிறேன்.

ஆக, நாம் செய்யக் கூடியது என்ன? பணியில் இருக்கும் போதே நமது பூர்வீக கிராமங்களில் வீடு, மனை இருந்தால் சிறிய அளவிலாவது ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம். வருஷம் ஒரு முறையேனும் உற்சவாதிகளுக்குச் சென்று வரலாம். ஊர்களுடனான பரிச்சயம் ஏற்பட்டு ஓய்வுபெறும் சமயத்தில் அங்கு சென்று குடியேற ஒரு எண்ணம் பிறக்கும்.

திவ்யதேசங்களில் ஆஸ்திகர்களின் மீள் குடியேற்றம் நடைபெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது இல்லாததால் அங்கெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆபத்துக்கள் பற்றிப் பொதுவெளியில் பேச இயலாது.

‘வெகேஷன்’ என்று சொல்லிக்கொண்டு ‘தண்ணி இல்லாக் காடுகள்’ தேடிச் சென்றுகொண்டிருக்கிறோம். திவ்ய தேசங்களிலும் தண்ணீர் இல்லை. அங்கும் கொஞ்சம் எட்டிப் பார்த்தால் கருணைக்கடல்களும், கிருபாசமுத்திரங்களும் கண்ணீர் பெருக்கி நின்றிருப்பது தெரியும்.

2 responses

  1. லெக்ஷ்மணன் Avatar
    லெக்ஷ்மணன்

    உண்மை.
    நல்ல பகிர்வு.

    Like

  2. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    உண்மை தான். வீடு கட்டினால் மட்டும் போதாது. திடீர் திடீர் என நமது கிராம்ம் சென்று வீட்டை/மனையை பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் புண்ணியவான்கள் சிறிது சிறிதாக ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். அனுபவ உண்மை

    Like

Leave a reply to nparamasivam1951 Cancel reply