#நெய்வேலியில் ‘தாஸன்’ (70) வருகிறார் என்றால் வீட்டினுள் ஒளிந்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. ‘திருப்பாவைல 8ம் பாசுரம் சொல்லு’, ‘சஹஸ்ரநாமத்துல ‘பீஷ்ம உவாச’க்கு அப்பறம் கண்டிநியூ பண்ணு’ என்று நேரம் காலம் தெரியாமல் எல்லார் எதிரிலும் கேட்டு வைப்பார் என்பதால் அந்த பயம்.
விடியற்காலையில் எப்போதுமே குளிர் இருக்கும். மார்கழி மாதம் நெய்வேலி குளிர் கொஞ்சம் அதிகம். 4:30 மணிக்கு எழுந்து, தீர்த்தமாடி, பஞ்சகச்சம் உடுத்தி, 4-5 வீதிகளில் திருப்பாவை சொன்னபடியே செல்வார். அதனால் பாதகம் இல்லை. எங்களையும் உடன் வரச் சொல்வார். திருப்பாவை முழுவதும் தெரியாது என்பது ஒரு பயம். விடியற்காலை குளிர் இன்னொன்று. மூன்றாவது பயம் தெரு நாய். அவை அவரை ஒன்றும் செய்வதில்லை. அவருடன் நடக்கும் என்னைப் பார்த்து மட்டும் உறுமும். முந்தைய நாள் மாலையில் நான் ஏதாவது வாலாட்டியிருப்பேன்.
தாஸன் எங்கள் தெருப் பிள்ளைகளுக்கு ஆங்கில இலக்கண வகுப்புகள் நடத்தி வந்தார்.
இப்படியாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ‘ஏண்டா நீங்கள்ளாம் நாடகம் போடக்கூடாது?’ என்று ஆரம்பித்தார் தாஸன். ‘தில்லி சென்ற நம்பெருமாள்’ என்கிற நாடகம் மூலம் அவர் பெரிய பிரபலம் பெற்றிருந்தார் என்று தெரியும். ‘நெய்வேலி சில்ரன்ஸ் கிளப்’ (NCC) என்கிற அமைப்பைத் துவங்கினார். நான் செயலாளர் ஆனேன்.
அவரது ஊக்கம் அசாத்தியமானது. ‘இதோ பார். என்.சி.சி. பத்தி ஹிந்துவுக்கு எழுதியிருக்கேன். ‘நெய்வேலியில் நாடக உலகின் விடிவெள்ளிகள்’ என்ற தலைப்பில் நான்கு பக்கத்திற்கு எழுதியிருந்தார். இன்று வரை ஹிந்து அதை வெளியிடவில்லை.
அசட்டுத்தனமான இரு நாடகங்களை அரங்கேற்றினோம். முதல் நாடகம் ஒரு திருடனைப் பற்றியது. வீட்டில் இருந்த படுதா, போர்வை எல்லாம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாசல் திண்ணையில் நாடகம். ஆறு நடிகர்களும் ஒன்பது பார்வையாளர்களுமாக நாடகம் நடந்தேறியது. கடைசிக் காட்சியில் ஒரு படுதா கழன்று விழ, என் தம்பி அதைப் பிடித்துக்கொண்டு நிற்க, ஏக களேபரத்துடன் நாடகம் முடிந்தது.
இரண்டாவது நாடகத்திற்கு இரண்டு பார்வையாளர்கள் வந்தனர்.
தாஸன் எங்களை வைத்துக்கொண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் போட்டார். ‘மாக்பெத்’ நாடகம் நெய்வேலி சத்சங்கம் மணித்வீபத்தில். கீரன், வாரியார் முதலியோர் பேசிய மேடையில் நாங்கள். பார்வையாளர்கள் விநோதமாகப் பார்த்த்துச் சென்றார்கள். நாடகம் பார்க்க வந்த என் பாட்டி,’ ஏண்டா, மஹாபாரதம்னு சொன்னே. கடைசி வரைக்கும் கிருஷ்ணர் வரவே இல்லையே’ என்றாள். ‘மாக்பெத்’ மஹாபாரதம் ஆன கதை அன்று நடந்தது.
அதன் பிறகு தாஸன் எங்களை நாடகம் போட வலியுறுத்தவில்லை. சில மாதங்களில் நெய்வேலியில் அரசு ஆடிட்டராக இருந்த அவரது மகளுக்கு மாற்றல் ஆகி வேறு ஊர் சென்றுவிட்டார் தாஸன். விரைவில், நெய்வேலி சில்ரன்ஸ் கிளப் புதிய அவதாரம் எடுத்தது. நெய்வேலி கிரிக்கெட் கிளப் உதயமானது. இருப்பில் இருந்த சில பத்து ரூபாய்கள் பந்துகளாகவும், பேட்களாகவும் மாறின. ஒரே மேட்ச்ல் பணம் காலாவதியாகி கிளப் மூடு விழா கண்டது.
பல ஆண்டுகள் கழித்து தாஸனை ஒரு திருமண விழாவில் சந்தித்தேன். அப்போது அவருக்கு வயது 90. நெய்வேலி சில்ரன்ஸ் கிளப் ( NCC) பற்றி நினைவு படுத்தினேன். கேட்கும் திறனை முற்றிலும் இழந்திருந்த அவர், ‘என்.எல்.சிக்கு (NLC) என்ன ஆச்சு? என் அது சரியா போகலையா?’ என்றார்.
சில நாட்களில் அவர் காலமானார் என்று அறிந்தேன். அன்று அவர் இட்ட ஆங்கிலப் பிச்சையை இன்றும் நினைவுகூர்கிறேன்.