#நெய்வேலியில் சுப்பு மாமா வாசலில் வந்து இரண்டு நிமிடத்துக்கு மேல் நின்றால் அன்று ரணகளம் என்று அர்த்தம்.
நாங்களும் அவருமாகச் சேர்ந்து ஹிந்து பேப்பர் வாங்குவது என்று ஒரு ஏற்பாடு 20 ஆண்டுகளாக இருந்து வந்தது. சுப்பு மாமா படித்து விட்டு எங்கள் வீட்டிற்கு வந்து தருவார். நாங்கள் நாள் முழுவதும் வைத்திருந்து மறு நாள் அவரிடம் கொடுக்க வேண்டும். மாத இறுதியில் பழைய பேப்பருக்குப் போடுவது என்று ஏற்பாடு. அன்றைய சம்பளம் அவ்வளவு தான். எனவே கொஞ்சம் எகனாமிக்ஸ், கொஞ்சம் நியூஸ் என்று வாழ்ந்து வந்த காலம் அது.
‘பேப்பர் முழுசா குடு’ என்றார் மாமா. நேற்றைய பேப்பரைப் பார்த்தேன். பாதி தான் இருந்தது.
‘எல்லா பேப்பரும் இருக்கே மாமா’. பொய் சொல்கிறோம் என்று தெரிந்தே சொன்னேன்.
‘ஆகாஸவாணி. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி..’ ரேடியோ மணி 7:15 என்று உணர்த்தியது. எட்டு மணிக்கு பள்ளிக்கு கிளம்ப வேண்டும்.
‘நாழியறது. நாளைக்கு தேடித் தரேன்’ – ஒருவழியாக மீண்டு வீட்டினுள் திரும்பினேன். தம்பி பேப்பரைப் பிடுங்கிக் கொண்டான்.
இத்தனை போராடியும் நான் படிக்க முடியவில்லையே என்னும் துயரம் ஒரு பக்கம், மணி ஆகிவிட்ட சோகம் இன்னொரு பக்கம், அன்று சமர்ப்பிக்க வேண்டிய ஹோம் ஒர்க் என்னும் பூதம் இன்னொரு பக்கம் என்று முப்பரிமாண சோகத்தை மறைத்துக் கொண்டு கூடத்தினுள் சென்றேன்.
உள்ளே இருந்த பாட்டி பேசினாள்:
‘ஏண்டா, சுப்புணியோட எதுக்கு இத்தனை நாழி பேசிண்டிருக்கே? ஸ்கூலுக்கு நாழியாகல? ரொம்ப பேசினா அப்புறம் அவன் நேத்திய பேப்பரைக் கொண்டான்னு பிடுங்குவான். மாவு சலிக்க எனக்கு யாரு பழைய பேப்பர் குடுப்பா?’
பாட்டியின் முன் பரப்பிய பேப்பர் மேல் அரிசி மாவு தெரிந்தது.
இன்று பாட்டியும் இல்லை, சுப்பு மாமாவும் இல்லை, ஹிந்து மட்டும் இருக்கிறது- மாவு சலிக்க உதவியாக.