#நெய்வேலி ஸ்டோர் ரோடின் பெயர் ஏன் ஸ்டோர் ரோடு என்று வைத்தார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஏனெனில் ஊர்க்காரர்களுக்குமே தெரிந்திருக்கவில்லை.
அது ஒரு ஜங்ஷன். 12 தெருக்கள் ஒரு புள்ளியில் சேரும் இடம். 12 சந்தி என்று சொல்லலாம். அங்குதான் ராமசாமி நிற்பார். இரண்டெழுத்து இனிஷியல்காரர். ஹாஸ்பிடல் ரோடு என்று இருந்ததை மாற்றி, சிலை இருந்ததால் அவரது பெயரை வைத்தார்கள். சிலை இருந்தாலும், ஈரெழுத்து சதுக்கம் என்று பெயரிட்டாலும், அந்த ஜங்ஷன் ‘ஸ்டோர் ரோடு’ என்றே அறியப்பட்டது.நிற்க.
ஸ்டோர் ரோடை ஒட்டியே ஸத்-ஸங்கம் மணித்வீபம் அமைந்திருக்கும். அங்கு ஸத்-விஷயங்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். இனிஷியல்காரர் சிலையின் கீழ் அஸத்துகள் கூடி அசாத்யமாகப் பேசுவார்கள். பிள்ளையார் சதுர்த்தியின் போது ஏக விசேஷம். அதே வாரத்தில் ஈரெழுத்து இனிஷியல் சிலைக்கும் பிறந்தநாள் வரும். மண்டகப்படி ஆரம்பம்.
பிள்ளையாருக்கு அபிஷேகம் நடக்கும் போது சிலை தொழும் தொண்டர் சிலை கீழிருந்து சொல்மாலை புனைவர். அதான் ஸார், அவனே, இவனே என்று அர்ச்சனை. ‘தா’ என்றும் ‘ழி’ முடியும் வார்த்தைகள் சரளமாக வந்து விழும். இடையிடையே தமிழைப் பாதுகாப்போம் என்றும் செல்வார்கள்.
ஆனால் ஒன்று. அடுத்த நாள் பொழுது விடிந்ததும் ஸத்-ஸங்கத்தில் கூட்டம் மீண்டும் கூடி அபிஷேகம், ஆராதனை என்று இருக்க, சிலை தனியாக நிற்கும். முதல் நாள் இரவு பணம் வாங்கிக்கொண்டு பேசியவர்கள் அடுத்த கூட்டத்துக்குப் போக வேண்டாமா என்ன? பகுத்தறிவு முக்கியம் இல்லையா?
அந்தக் கூடடத்தில் தான் சிந்துஜா அறிமுகம். நல்ல பளீர் ரோஜா நிறம். பார்த்தால் நெய்வேலி போல் தெரியவில்லை. ஒரு வேளை ஸ்டேட் பாங்க் மானேஜர் பெண்ணாக இருக்கலாம் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். கொண்டோம் என்ன? கொண்டேன். போதுமா?
‘சுப்பு மாமா அபிஷேகத்துக்கு வரச் சொல்லியிருக்கார்’, ‘கோவில்ல பந்தி பரிமாற டி.ஆர்.சி. மாமா வரச் சொல்லியிருக்கார்’ , ‘பிரசாதம் பொட்டலம் , கவர் போட யஞ்ய நாராயணன் மாமா வரச்சொன்னார்’ என்று அன்று வரை கோவிலையே எட்டிப் பார்க்காத நண்பர்கள் திடீரென்று மணித்வீபத்தையே மொய்த்தனர்.
காரணம் பிள்ளையார் அல்ல என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
சில மாதங்கள் பக்தி பெருக்கெடுத்து ஓடியபின் நண்பர்களைக் கோவிலில் காணவில்லை.
‘டியூஷன் போறேன், நேரமில்லை’, ‘பார்ட் டைம்ல வள்ளி பிரிண்டர்ஸ்ல ஒர்க் பண்றேன், டைம் இல்லை’ போன்ற நம்பத்தகாத காரணங்களைக் கூறினார்கள்.
ஸ்டேட் பாங்கிற்குப் புது மானேஜர் வந்திருந்தார்.