நீங்கள் பஞ்சகச்சம் உடுத்திக் கொண்டிருக்கிறீர்களா? ஆமாம் என்றால் மேலே படியுங்கள். இல்லையென்றால் அவசியம் மேலே படியுங்கள்.
வேஷ்டிகள் பல வகை.
மயில்கண் வேஷ்டி என்னும் வகை ரொம்ப காலம் பிரசித்தியுடன் விளங்கியது. ‘என்ன மயில்கண் வேஷ்டி வாங்ல்லியா?’ என்றூ மாப்பிள்ளைகள் கோபித்துக்கொண்டு போன காலங்கள் உண்டு. அத்தனை ஜாஜ்வல்யத்துடன் திகழ்ந்த மயில்கண் வேஷ்டியை தற்போது யாரும் சீந்துவார் இல்லை. யாரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை.
மயில்கண் வேஷ்டியைப் போலவே சமீப காலத்தில் ஈரோடு வேஷ்டி என்று ஒன்று வந்தது. ஒன்றிரண்டு முறை துவைத்த பின் முழங்காலுக்கு மேல் ஏறிக்கொள்ளும். அதை விரித்துவிட வேஷ்டி நுனியில் கல்லைக் கட்டி விட வேண்டும் என்பது போல் 1-2 வாரத்துக்குள்ளேயே பல்லிளித்து நின்றுவிடும். அது என்ன டெக்னாலஜி என்று இன்னமும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் இரண்டாந்தரமான வேஷ்டியாக ‘மல் வேஷ்டி’ என்று ஒன்று இருந்தது. சரியாக மூன்று முறை உடுத்திக் கொண்டவுடன் குழந்தைத் துணியாகப் பயன்படுத்தலாம்.
இதைத் தூக்கி அடிக்கும் விதமாகத் தற்காலத்தில் பாலியஸ்டர் வேஷ்டி என்று ஒரு வஸ்து வந்துள்ளது. கிறிஸ்தவ மணப்பெண் அணியும் முகம் மறைக்கும் / மறைக்காத பாலாடை போன்ற வெண் துணியால் ஆனது இந்த பாலியஸ்டர் வேஷ்டி. வேஷ்டியை உடுத்திக் கொண்டது போலவும் இருக்கும், இல்லாதது போலவும் இருக்கும். வேஷ்டியே இல்லாதது போலவும் இருக்கும். ‘உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதவர்கள்’ என்று யாராகிலும் இருந்தால் இந்த வஸ்திரத்தைப் பயன் படுத்தலாம். ஆங்கிலத்தில் ‘Leaving nothing to the imagination’ என்பார்கள். பாலியஸ்டர் வேஷ்டி அப்படியானது.
வேதாந்த பாடத்தில் ‘அந்தர் இந்திரியம்’ , ‘பஹுர் இந்திரியம்’ என்பார்கள். அப்படி அந்தர் இந்திரியத்தையும், பஹுர் இந்திரியத்தையும் ஒன்றைணைக்கும் விதமாக, வேறுபாடு இல்லாமல் உள்ளிருப்பதை வெளிக்காட்டி, பரமானந்த அனுபவத்தை அளிக்கவல்லதாக பாலியஸ்டர் வேஷ்டி திகழ்கிறது. இப்படிப்பட்ட ஒப்பற்ற ஆன்மீக அனுபவத்தை அளிக்கும் பாலியஸ்டர் வேஷ்டிக்கு ‘Transparency International’ விருது கொடுக்கலாம்.
தற்காலத்தில் வேஷ்டியை உடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வெறுமனே பேண்ட் போட்டுக்கொள்வது போல் அணிந்து கொள்ளலாம் அல்லது அதனுள் புகுந்துகொள்ளலாம். இப்போதெல்லாம் ஜிப், பாக்கெட் எல்லாம் வைத்து ரொம்ப வசதிகள் உள்ளனவாம். பெல்ட் இதுப்பதால் எப்போது அவிழ்ந்து மானத்தை வாங்கும் என்கிற பயம் எல்லாம் இல்லை. இதற்கு ‘பேஷ்டி’ என்று நான் பெயர் வைத்திருக்கிறேன் ( பேண்ட் + வேஷ்டி = பேஷ்டி ).
4 முழம், 8 முழம் என்பது போக, 9-5, 10-6 என்று ஆபீஸ் டைமிங் மாதிரி வேஷ்டிகள் உள்ளன. 9-5, 10-6 என்பவை அளவைக் குறிப்பதாக நான் நினைத்ததுண்டு. ஆனால் இவற்றில் பஞ்சகச்சம் என்னும் முறையில் உடுத்திக் கொண்ட போதுதான் இந்த நம்பர்களின் அருமை தெரிந்தது. 9-5 உடுத்திக் கொள்ள காலை 9ல் இருந்து மாலை 5 மணி வரை ஆகலாம் என்றும் 10-6 என்பது காலை 10ல் இருந்து மாலை 6 வரை ஆகும் என்றும் தெரிந்து புளகாங்கிதம் அடைந்தேன்.
இதில் 10-6 என்பதில் 2-3 பேர் ஒரே சமயத்தில் உடுத்திக் கொள்ளலாம் என்று உணர்ந்துகொண்ட அந்த ஜென் தருணத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்.
இந்த முறை உற்சவ விஷயமாகத் தேரழுந்தூருக்குச் சென்றிருந்தேன். மடத்தில் ஒரு அறையில் 4-5 பேர் அவசரம் அவசரமாக பஞ்சகச்சம் உடுத்திக் கொண்டிருந்தனர். பெருமாள் ஏள்ளுவதற்குச் சில மணித்துளிகளே இருந்ததால் நானும் அந்த அறையில் நுழைந்து 10-6 வேஷ்டியை பஞ்சகச்சமாக உடுத்திக்கொள்ள முயன்றேன். நிற்க.
ஆமாம். நிற்கத்தான் முயன்றேன். 10-6 வேஷ்டியை உடுத்திக் கொள்ள சில ஆசனங்களையும், ஒரு சில தண்டால்களையும், சில முறை ஆத்மப்பிரதட்சணமும் செய்ய வேண்டும். அவ்வப்போது கீழே கிடக்கும் வேஷ்டி நுனிகளை இடுப்பில் சொருகிக்கொள்ள வேண்டும். ஒரு 10 நிமிஷத்தில் அது ஒரு மாதிரி பஞ்சகச்சம் போல் வரும். அந்தப் பதம் தெரிந்து உடனே உடுத்திக்கொள்வதை நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் 10-6ல் பஞ்சகச்சம் எப்போது நிகழும் என்று சொல்ல முடியாது.
பஞ்சகச்சம் தியானம் போன்றது. அதைப் பூரணமாக அடைய மனுஷனால், மனுஷ யத்னத்தால் முடியாது. அதை நோக்கிப் பயணிக்க வேண்டும். அது நிகழும் போது நிகழும். அதுவரை நாம் பலனை எதிர்பாராமல் கடமையாற்றும் கர்மயோகி போல 10-6 வேஷ்டியின் மேல் மேற்சொன்ன ஆசனங்களைச் செய்தவண்ணம் இருக்க வேண்டும். அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருக்கும் யாராவது ‘வந்துடுத்துடா, பஞ்சகச்சம் வந்துடுத்து’ என்று பாஞ்சஜன்யம் போல் முழங்குவார். அப்போது ராமன் வில்லைப் படீரென்று ஒடித்தது போல் நிறுத்திவிட வேண்டும். அப்போது பஞ்சகச்சம் நிகழ்ந்துவிட்டது என்று பொருள்.
இப்படியாக பஞ்சகச்ச மோன நிலையை அடைய நான் பிரயத்னப்பட்டுக் கொண்டிருந்த போது, ‘வந்துடுத்துடா, பஞ்சகச்சம் வந்துடுத்து’ என்று யாரோ யாருக்கோ கத்த, அது எனக்குத் தான் என்று நினைத்து நான் அவசரமாகக் கீழே கிடந்த சில வேஷ்டி நுனிகளை இடுப்பில் சொருகிக்கொண்டு ஓட, ‘மாமா நில்லுங்கோ, வேஷ்டிய உறுவிண்டு போகாதீங்கோ’ என்று வேறு இரண்டு பேர் பின் தொடர, அவர்கள் வேறு யாரையோ சொல்கிறார்கள் என்று நானும் ‘மாமா நில்லுங்கோ, வேஷ்டியை உறுவிண்டு போகாதீங்கோ’ என்று கத்தியவாறே சன்னிதித் தெருவில் ஓட, பிரிட்டிஷ் ராஜகுமாரியின் ஆடையைப் பிடித்துக் கொண்டே வரும் சேவகிகள் போல் நாங்கள் மூவரும் ஊர்வலமாகச் சென்றுகொண்டிருக்கும் போது, வீதியில் பெருமாள் ஏள்ளினார்.
‘அர்ச்சனை இருக்கா? பழம், தேங்கா இருந்தா அமிசேப் பண்ணலாம்’ என்று அர்ச்சகர் கேட்கும்போது தான் நான் கட்டிக்கொண்டிருந்தது ஒரே ஒரு பஞ்சகச்சம் இல்லை, பலரின் 10-6களும் சேர்ந்து சுமார் 30-18 என்று என் உடலில் சுற்றியிருந்ததை உணர்ந்த தருணம் என் அகக்கண் திறந்து ,
‘உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு..’ என்று பாசுரம் சொன்ன மோன நிலையே இந்தப் பிரபஞ்சத்தை உணர்ந்த ஜென் தருணம் என்று நினைக்கிறேன்.
அடுத்த முறை உற்சவ விஷயமாக தேரழந்தூர் செல்லும் சமயம் எனக்கு தெரிவியுங்கள். நான் எனது சென்னிய நல்லூர் குலதெய்வ வழிப்பாடு விசிட் உடன் இணைத்து வருகிறேன்.
LikeLike
9 * 5 வேஷ்டியை பஞ்சகச்சமாக கட்ட அதிகபட்சம் 5 நிமிடம். நன்கு இறுக்கி கட்டினால் நாள் முழுதும் அப்படியே இருக்கும்.
LikeLike
aaha romba naalaikku piragu vaaivittu sirichen
LikeLike
நன்றி ஐயா
LikeLike
Couldn’t stop laughing….humour overdose
LikeLike
மிக்க நன்றி.
LikeLike
ஹாஹா. Laugh riot.
ப்ரிட்டிஷ் இளவரசி என்ன…. இப்போது புடவை கட்டி கொள்ளும் சிலரும் இப்படி ரோட்டை பெருக்குவது போல தான் கட்டி கொள்கிறார்கள்.
ஒரே வித்யாசம்….சுற்றி இருப்பவர்கள் புடவையை மிதிக்காமல் ஜாக்கிரதையாக போக வேண்டும்.
LikeLike
As an after (comment) thought….
இந்த மாமிகள் ஒன்பது கஜம்…பத்து கஜம்…ஆறு கஜத்தையே மடிசார் ….என்று கட்டி கொள்ள படும் கூத்து …உங்கள் வேஷ்டி கட்டும் படலத்தை படித்ததும் நினைவுக்கு வருகிறது.
LikeLike
அதைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். ஆனால் எழுதினால் ரசிக்காது என்பதால்….
LikeLike