The side that is not spoken about, generally.

சமீபத்தில் மருத்துவமனையில் சில நாட்கள் இருந்தேன். ஸ்டிறைட் டைம்ஸ், தமிழ் முரசு, கிண்டில் புத்தகங்கள், மலாய் மொழி தினசரியின் படங்கள் என்று அனைத்தையும் பார்த்து முடித்த பின் வேறு வழி இல்லாமல் டி.வி. பார்த்தேன். சேனல் ந்யூஸ் ஏஷ்யாவில் எப்படித்தான் ஒரே செய்தியை நாள் முழுவதும் போடுகிறார்களோ? செய்தியாளருக்கே போர் அடிக்கவில்லையா என்று நினைத்துக் கொண்டிருக்கையில் வசந்தம் ஒளிவழியில் ‘மதயானைக் கூட்டம்’ என்று ஒரு திரைப்படம் துவங்கியது.

தயக்கத்துடன் பார்க்கத் துவங்கினேன். ஒரு இழவுடன் துவங்கியது படம். ஆரம்பமே பிரமாதம் என்று மலாய் சேனல் சூர்யாவை நாடினேன். இரண்டு பேர் ஏதோ கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். திரும்பவும் சி.என்.ஏ. திரும்பவும் அதே செய்திகள். தூக்கமும் வரவில்லை. மீண்டும் வசந்தம். ஒரு இழவு முடிந்து இன்னொன்று துவங்கியிருந்தது போல் இருந்தது. இல்லையாம். அந்த ஒன்றே நீண்ண்ண்ண்டு கொண்டிருந்தது.

இறந்த ஒருவரின் ப்ளாஷ்பேக், மீண்டும் இழவு, மீண்டும் ப்ளாஷ்பாக், கத்திக் குத்து, இல்லை, அரிவாள் வெட்டு, ஒரு மலையாளப் பெண் முகம் காட்டுகிறாள், மீண்டும் சாவு, மீண்டும் ஒப்பாரி..

இப்படியாகப் பல ஒப்பாரிகளையும், இழவுகளையும் காட்டி, ஒவ்வொன்றின் நுண் காரியங்களையும் விளக்கி, மீண்டும் கொலை செய்து, மீண்டும் … முடியல சாமி.

யார் யாரை வெட்டுகிறார்கள் என்பது போய், அடுத்த முறை யாருடைய இழவு வரும் என்று எதிர்பார்க்கும்படி இருந்தது படம். கடைசியில் படத்தில் யாராவது மிஞ்சுவர்களா இல்லை எல்லாருவடைய காரியத்தையும் காட்டுவார்களா என்று யோசிக்கத் துவங்கினேன்.

ஒரு வழியாகப் படம் முடிந்தது. ஒரு பிளிரல் ஒப்பாரியுடன் தான்.

சாதியை ஒழிப்போம் என்கிறார்கள். கள்ளப்பய என்று பெருமிதம் தொனிக்கும் வசனங்கள். தேவர் பெருமை வேறு.

க்ளேனெகல்ஸ் ஆஸ்பத்திரிக்கு ஒரு வேண்டுகோள்: தயவு செய்து அனிமல் ப்ளானெட் சேனல் வையுங்கள். மிருகங்கள் அனாவசியமாகக் கொல்வதில்லை.

4 responses

  1. nparamasivam1951 Avatar
    nparamasivam1951

    அனிமல் பிளானட் போல் டிஸ்கவரி சானலும் வைக்க சொல்லலாம். படம் எப்படிப் பட்டது என அரைமணி படம் பார்த்தவுடன் நிறுத்தி இருக்க வேண்டும். அது இருக்கட்டும், பூரண குணம் அடைந்து விட்டீர்கள் அல்லவா.

    Like

    1. Amaruvi Devanathan Avatar

      மருந்து உட்கொள்கிறேன் சார்

      Like

      1. nparamasivam1951 Avatar
        nparamasivam1951

        அரங்கன் துணையுடன் துரித குணம் அடைவீர்கள்.

        Like

      2. Amaruvi Devanathan Avatar

        நன்றி ஐயா

        Like

Leave a comment