நெய்வேலியில் ஸத் சங்கத்துக்கு எதிரில் ஸ்டோர் ரோடு ஜங்ஷனில் மேடையில் நாலு பேரும், கீழே மூன்று பேரும், மொத்தமாக எட்டு பேர் (வாக்கிங் ஸ்டிக்குடன் நிற்கும் சிலையையும் சேர்த்து) கன்னா பின்னாவென்று வசை பாடிக்கொண்டிருந்தால் பிள்ளையார் சதுர்த்தி வந்துவிட்டது என்று அர்த்தம். சைக்கிளை சற்று வேகமாக மிதித்து வீடு வந்து சேர்ந்தால் பாட்டியாத்து கொழுக்கட்டை காத்திருக்கும்.
‘பாட்டி’ என்பது இரண்டு வீடுகள் தள்ளி இருந்த பிரகாஷின் பாட்டி, சுப்பிரமணியம் மாமாவின் மகன். பாட்டி எங்களுக்கும் பாட்டி தான். அவ்வளவு அன்பு. ‘பாட்டி ஆமருவிக்கும் கண்ணனுக்கும் குடுக்கச் சொன்னா’ என்று பிரகாஷ் கொண்டுவந்து கொடுத்திருப்பான்.
எங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்து கொண்டாடுவதில்லை என்பதால் பசங்களுக்கு என்று பாட்டி கொடுத்தனுப்புவாள். அதை வெளிப்பாத்திரம் என்று சொல்லி தனியாக வைத்திருப்பார்கள். வெளியோ, உள்ளோ – எனக்கு அதனுள்ளிருக்கும் கொழுக்கட்டை தேவாம்ருதமாக இருக்கும்.
அதெப்படித்தான் ஐயர்கள் வெல்லம் வைத்து கொழுக்கட்டை செய்கிறார்களோ என்று வியந்ததுண்டு. எல்லா ஐயர் வீடுகளிலும் ஒரே சுவையுடன் பிள்ளையார் கொழுக்கட்டை இருப்பது ஆராயும் சீர்மைத்தே.ஒருமுறை எங்கள் பிடுங்கல் தாங்காமல் வீட்டில் அதே போல் கொழுக்கட்டை செய்கிறேன் பேர்விழி என்று வெல்லம் போட்ட உப்புமா கீண்டப்பட்டதை நெய்வேலி கெஜட்டில் போட்டது லோக பிரசித்தம்.
பிறகு புதிய முறையில் ‘காரடையான் நோன்பு கொழுக்கட்டை’ செய்கிறேன் என்று துவங்கி, அதில் வெல்லம், உப்பு என்று இரண்டு வகை செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரம் எங்களுக்கு கிரிக்கெட் விளையாட பந்துக்குப் பஞ்சமில்லாமல் ஆனது. Reduce, Reuse, Recycle என்று சிங்கப்பூரில் இப்போது சொல்கிறார்கள். நாங்கல்லாம் அப்பவே அப்புடி என்று சிங்கப்பூர் அரசுக்குச் சொல்லலாம்.
ஐயங்கார்கள் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுவதை சாமர்த்தியமாகச் செய்வார்கள். மண் பிள்ளையாரை வாங்கி அவருக்குத் திருமண் இட்டு, ‘தும்பிக்கையாழ்வார்’ என்று நாமகரணம் பண்ணி, அவருக்குப் பக்கத்தில் பெருமாள் படத்தையும் ஏள்ளப்பண்ணிவிடுவது சில ஐயங்கார்களின் வழக்கம். யாராவது வைதீகர்கள் வந்துவிட்டால் ‘பசங்களுக்காக, கொஞ்சமா, நம்ம சம்பிரதாயப்படி..’ என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு மழுப்பாமல் ‘கொழுக்கட்டை சாப்பிட ஆசையாக இருந்தது’ என்று சொல்லியிருக்கலாம்.எங்கள் வீட்டில் இந்த வழக்கம் இல்லை. பிரகாஷின் பாட்டி இருந்தாரோ பசங்கள் நாங்கள் பிழைத்தோம்.
இப்படியாக இருந்த எங்கள் கொழுக்கட்டைத் தொடர்பு ஒரு நாள் நின்றுபோகும் போல் ஆனது. பிரகாஷ் பாட்டி காலமானார். பாட்டி போனது துக்கம் தான் என்றாலும் ‘இனி கொழுக்கட்டை கிடைக்குமோ கிடைக்காதோ’ என்கிற தவிப்பு இருந்தது வாஸ்தவம்.
அடுத்த வருஷம் பிள்ளையார் சதுர்த்தி அன்று வாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்து கொண்டிருந்தேன். நேரம் ஆகிக்கொண்டிருந்தது. பிரகாஷையோ, அவன் தம்பி ஶ்ரீதரையோ காணவில்லை. ‘சரி நமக்கு அதிர்ஷ்டம் அவ்வளவுதான்’ என்று எண்ணி நொந்து போய் பாடம் படிக்க உட்கார்ந்தேன்.
பிரகாஷ் வேகமாக வந்தவன், ‘அம்மா குடுக்கச் சொன்னா’ என்றான்.
பிள்ளையார் கைவிடவில்லை.
Leave a comment