தனி நாடு அமைத்தே தீருவோம்.
தேரழுந்தூரைத் தலை நகராகக் கொண்ட கம்ப நாட்டை அமைத்தே தீருவோம். கம்பருக்குத் தீங்கிழைத்த, தஞ்சையைத் தலை நகராகக் கொண்ட சோழ நாட்டின் மீது படை எடுப்போம். இதற்காகத் தேரழுந்தூரின் வடக்குவீதி அரசின் பிரதமர் ஆதரவையும், தேரழுந்தூர் சர்வமான்ய அக்ரஹார அரசின் ஜனாதிபதியின் ஆதரவையும் பெறத் தயங்க மாட்டோம்.
இவ்வளவு ஏன்? கும்பகோண அரசின் முதல் மந்திரியுடன் பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. இனி கும்பகோணத்தின் படைகளுடன் சேர்ந்துகொண்டு, தஞ்சையை நோக்கித் தேரழுந்தூர்ப் படைகள் எந்நேரமும் முன்னேறும்.
கம்பன் என்றால் அவ்வளவு இளக்காரமா? கம்ப ராமாயணத்தை அரங்கேற்ற ஶ்ரீரங்கத்தில் எவ்வளவு எதிர்ப்பு? மறக்க மாட்டோம் அநீதியை. ஆழ்வார் பாசுரங்களைப் பாடலாமாம், கம்பன் எழுத்தைப் பாடக் கூடாதா? கம்பனும் இராமனைப் பற்றித்தானே பாடியுள்ளான்?
கம்பன் மீதுள்ள காழ்ப்பால் அவனது மகன் அம்பிகாபதியைச் சோழன் எவ்வளவு கொடுமை படுத்தியுள்ளான்? இதற்கெல்லாம் தீர்வு கம்ப நாடென்னும் தனி நாடு தான்.
என்ன கேட்டோம்? கம்பனின் பாடலை அங்கீகரிக்கச் சொன்னோம். தேரழுந்தூர் என்றால் இளக்காரமா? எங்களைக் கண்டால் தஞ்சை சோழப் பேரரசுக்கு அவ்வளவு இளக்காரமா?
இன்னும் என்ன கேட்டோம்? திருமங்கையாழ்வார் பாடலுக்கு நம்மாழ்வார் பாடலுக்கு உள்ள ஏற்றத்தைத் தாருங்கள் என்றோம். கொடுத்தார்களா சோழ அரச வஞ்சகர்கள்? பாண்டிய நாட்டின் நம்மாழ்வாருக்கும், பெரியாழ்வாருக்கும் உள்ள அந்தஸ்தை திருமங்கை ஆழ்வாருக்குக் கொடுக்க மனம் இல்லையே உங்களுக்கு?
‘நாயக-நாயகி பாவ’த்தில் திருமங்கை ஆழ்வாரும் தான் பாடியிருக்கிறார். அதென்ன பாண்டிய நாட்டு ‘நாயக-நாயகி பாவ’ பாசுரங்களுக்கு மட்டும் ஏற்றம்? பராங்குச நாயகி என்றால் இங்கே பரகால நாயகி. வண்டு முதற்கொண்டு தூது விட்டுப் பாடியுள்ளார் திருமங்கை. ‘தேமருவு பொழிலிடத்து மலர்ந்த போதை’ பாசுரத்துக்கு ஈடாகுமா உங்கள் பாண்டியப் பாசுரங்கள்?
என்னதான் காரணம்?
ஏனென்றால், திருமங்கையாழ்வார் தேரழுந்தூர்ப்பக்கம். நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள திருக்குறையலூர். என்ன இருந்தாலும் உங்களுக்கு வேற்று நாட்டுக் காரரின் பாசுரங்கள் தான் உசத்தி. அதனால் தானே பாண்டிய நாட்டுப் பெரியாழ்வாரையும், நம்மாழ்வாரையும் கொண்டாடுகிறீர்கள் ?
இதற்கு ஒரே தீர்வு தனி நாடு தான். கம்ப நாடு. இது கம்பனுக்கும், திருமங்கை ஆழ்வாருக்கும் குரல் கொடுக்கும் ஒரே தேசம்.
வெற்றி வேல், வீர வேல். படை எழுக, திரை விலக, கம்பன் புகழ் ஓங்க. போர், போர், தனி நாட்டுக்கான போர்.
‘பரத் ராம். அப்பா தூக்கத்துல ஏதோ உளர்றார பார். ஏஸி போடணுமா கேளூ. தமிழ் நாட்டுல கண்ட அசடுகளும் பேசறதெல்லாம் படிக்காதீங்கோன்னா கேட்டாதானே’
நல்ல போர் வெறி! என்னவோ சோழர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்! என்னவாக இருக்கும்? நாளை தூக்கத்தில் தெரியலாம்.
LikeLike