கோலம்

‘உள்ள போக முடியாது பாட்டியம்மா’ காக்கி உடை ஊழியனின் குரல் கோலப்பாட்டிக்குப் புரியவில்லை. 91 வயதில் புரிய வேண்டிய அவசியமில்லை.

‘ஏண்டாப்பா, நன்னாருக்கியா? ஒம்புள்ள என்ன பண்றான், படிக்கறானா?’

‘ஐயோ பாட்டி, அது எங்கப்பா. நான் தான் அந்தப் பையன். நல்லாருக்கேன். நீ வெளில போ, கூட்டம் சாஸ்தியா இருக்கு’ குமார் தள்ளாத குறையாகச் சொன்னான். ‘செவிட்டுப் பாட்டிக்கி எப்பிடி சொல்றது?’

‘செத்த நாழி ஆகும்கறயா? பரவால்ல, நான் நின்னு சேவிச்சுட்டுப் போறேன். பெருமாள் எனக்காக காத்திண்டிருப்பார். ‘

‘பாட்டீ… உள்ள போக முடியாது. வரிசைல நிக்கணும். 3 மணி நேரம் ஆவும். நீ போயி பொறவு வா’ மென்று முழுங்கினாலும் குரல் கணீரேன்று சொன்னான் குமார்.

‘என்ன குமார், பாட்டிய மட்டும் உள்ள விடேன். பாவம் வயசாச்சு, கூட்டத்துல நிக்க முடியாது,’ 65 வயதுக் கல்யாணி பாட்டிக்காக்க் கெஞ்சிப் பார்த்தாள். மாமியார் பிடிவாதம் அவள் அறிந்ததே.

‘மாமி, நீங்க சாதா நாள்ல வாங்க. வரிசைல நிக்க வாணாம். பாட்டிய சைடு வழியா அனுப்பறேன். ஆனா, இன்னிக்கி ஒரு டிக்கட்டு 200 ரூவா. ஸபெஷல் தரிசனம்.’ கீழே குனிந்துகொண்டு சொன்னாலும் குமாருக்கு ஏனோ மனது உறுத்தியது. ஆனலும் அற நிலைய ஆணையர் சும்மா விட மாட்டார் என்பதால் கறாராகவே நடந்து கொண்டான்.

கல்யாணி பொறுமை இழந்தாள். ‘ஏண்டா குமார், உனக்கு பாட்டியத் தெரியாது? நன்னா இருக்கறச்சே கோவில் முழுக்க கோலம் போடுவாளோல்லியோ. ரொம்ப சொல்லி, இப்பல்லாம் கோலம் போட முடியாது, வெறும சேவிக்க மட்டும் உள்ள விடுவான்னு பேசி, சமாதானம் பண்ணி அழைச்சுண்டு வந்திருக்கேன். நான் வெளிலயே நிக்கறேன். பாட்டிய மட்டும் ஸ்பெஷல் என்ட்ரன்ஸ் வழியா விடேன். கார்தால்லேர்ந்து சாரதியப் பாக்காம ஒண்ணும் சாப்பிடமாட்டேன்னு அடம் புடிச்சு வந்திருக்கா..’ கல்யாணி விடுவதாக இல்லை.

‘அது சரி மாமி. என்னிக்கோ கோவில்ல கோலம் போட்டாங்கன்னு இன்னிக்கி ஸ்பெஷலா தரிசனம் பண்ண விட முடியுமா? பணம் கட்டினவங்க கோபிக்க மாட்டாங்களா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க,’ என்று தர்க்கத்தில் இறங்கினான் குமார்.

‘என்னடா சொன்ன?’ கல்யாணியின் குரல் உயர்ந்தது. ‘எப்பவோ கோலம் போட்டாளா? தெரியுமாடா உனக்கு? உங்கப்பா இங்க வேலைக்கு சேர்ச்சே பாட்டி கோலம் போட ஆரம்பிச்சு நாப்பது வருஷமாச்சு. போன வருஷம் வரைக்கும் போட்டிண்டிருந்தா. கூன் விழுந்ததால போட முடியலயேன்னு நாங்கள்ளாம் வேண்டாம்னு சொல்லிட்டோம்.  80 வருஷமா போட்டுண்டிருக்கா. அதோ பார், கருடாழ்வார் சன்னிதிக்குக் கீழ சிமெண்ட்ல கோலம் பதிச்சிருக்காளே அது பாட்டி போட்ட கோலத்தோட டிசைன்..’ என்று கருடன் சன்னிதியைப் பார்த்தவள் ‘பாட்டீஈஈஈ..’ என்று கத்தியவாறே ஓடினாள்.

கருடனுக்கு முன், கையில் கோலப் பொடியுடன் நின்றிருந்த பாட்டி,’ ஏண்டி கல்யாணி, எங்கடீ போயிட்ட? என்னமா பெருமாள் சேவை ஆச்சு தெரியுமா? கண்ணுலயே நிக்கறது?’ என்று கருடனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

‘பெருமாள் சேவையா? தளிகை அம்சே பண்றாளேன்னு பெருமாளுக்குத் திரை போட்டிருக்கான்னா. நீங்க எங்க பெருமாள் சேவை பார்த்தேள்?’ என்றாள் கல்யாணி சைகையில்.

21390427_10156552525697802_1788266588_o

‘நன்னாருக்கு. நீ அங்க யாரோடயோ பேசிண்டிருந்தயோன்னோ? நான் மளமளன்னு இங்க கோலம் போட ஆரம்பிச்சேன். கை கடுக்கம், கோலம் சரியா வரல்ல. இப்பிடி பண்றயே பெருமாளேன்னு கருடனப் பார்க்கறேன், சாட்சாத் பக்ஷிராஜன், அவனுக்கு மேல சங்கும் சக்கரமுமா மீசை வெச்சுண்டு உக்காண்டிருக்கான் சாரதி, பார்த்த சாரதி. அடீ வாடீ கல்யாணின்னு சொல்றதுக்குள்ள நீயே வந்துட்ட. பாரு எப்பிடி ஏள்ளியிருக்கார் பார் பெருமாள்..’ என்றாள் கோலப்பாட்டி, அமைதியாய் நின்றிருந்த கருடனைப் பார்த்தவாறு.

‘சேவை ஆயிடுத்து, வா ஆத்துக்குப் போகலாம்’ என்ற பாட்டியின் கையில் இருந்த கோலமாவுப் பொட்டலத்தை வாங்கிய கல்யாணி, கண்கள் கலங்கியபடி அதைப் பிரித்தாள். கசங்கிய பேப்பரில் பாசுரம் :

“தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே,

தமருகந்த தெப்பேர்மற் றப்பேர் – தமருகந்து

எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே,

அவ்வண்ணம் அழியா னாம்.”

15 thoughts on “கோலம்

  1. ஆம். முக்கிய நாட்களில், உண்மை பக்தர்கள் மனதால் தான் வழிபட முடியும். டிக்கெட் பணத்தை, அந்த கோவில் முன்னேற்றத்திற்கு “மட்டும்” செலவழித்தால் போதும் என்கின்றனர் பக்தர்கள்.

    Like

  2. அருமை ஆமருவி சார்! காலை ஆறு மணிக்குள் அகத்தியர் கோயிலின் எல்லா சன்னதிகளுக்கும் கோலம் போடும் என் அம்மா நினைவில் வந்தாள்!

    Like

  3. Very Nice. அப்படியே அந்த பாசுரத்திற்கும் விளக்கம் தந்திடுங்க ஆமருவி.

    Like

    1. நீங்கள் பார்க்கும் உருவில் இறைவன் வருகிறான். நீங்கள் கூப்பிடும் பெயரைக் கொள்கிறான்.

      Like

Leave a comment