அப்ப மெட்ரிக், மாநிலப் பாடங்கள் படிக்கும் மாணவர்கள் மடையர்களா?
இல்லை. ஏதுமறியா மாணவர்கள் மடையர்களாக ஆக்கப்படுகிறார்கள். யோசிக்கும் திறன் படிப்படியாகக் குறைக்கப்படும் வகையில் அரசுத் தேர்வுக் கேள்விகள் உள்ளன. பாடப்புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே ஒப்பிக்க வேண்டிய நிலையில் மாணவர்கள் வேறு என்னவாக ஆக முடியும்? சிந்தித்து எழுதவேண்டிய தேவையே இல்லை என்னும் அளவில் மாநிலப் பள்ளியிறுதித் தேர்வுகள் உள்ளன. திறமைக்கு மதிப்பில்லாமல், மனப்பாடம் செய்வது மட்டுமே படிப்பு என்கிற அளவில் அப்பாவி மாணவர்கள் நிறூத்தப்படுகிறார்கள். அகில இந்தியப் போட்டித் தேர்வுகளிலும், வெளி நாட்டுப் பல்கலைகளின் போட்டித் தேர்வுகளிலும் அவர்களால் அதிக அளவில் வெற்றி பெற முடிவதில்லை.
உதாரணம் சொல்ல முடியுமா?
சிங்கப்பூரில் உள்ள இந்திய சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளில் அவ்வப்போது தமிழக மாநிலக் கல்வியில் படித்த மாணவர்கள் வந்து சேர்வதுண்டு ( அவரகளின் பெற்றோருக்கு மாற்றல், புதிய வேலை என்று பல காரணங்கள்). அவர்கள் சென்னை, கோவை முதலிய நகரங்களில் நல்ல பள்ளிகளில் படித்திருந்தால் மட்டுமே சிங்கப்பூரில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். நான் அறிந்து, பல மாணவர்கள் சேர்ந்த சில மாதங்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொள்கிறார்கள். ஆக, பிரச்சினை மாணவர்களிடத்தில் இல்லை. கல்வித் திட்டம், ஆசிரியர்கள், பள்ளிகள், அரசு – இவற்றில் தான் பிரச்சினை.
சிங்கப்பூரில் படிக்கும் சி.பி.எஸ்.ஈ. மாணவர்கள் என்ன செய்கிறார்கள்?
பொதுவாக, சி.பி.எஸ்.ஈயுடன் ஐ.பி. என்னும் கடும் பாடத் திட்டத்திலும் மாணவர்கள் பயில்கிறார்கள். +2 முடித்தவுடன் பட்டப்படிப்பிற்கு என்று அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்காக ஸாட் (SAT- Scholastic Aptitude Test) என்னும் தேர்வுகளுக்கும் படித்துவருகிறார்கள். +1, +2 மிக முக்கியமான ஆண்டுகளாகப் பாவிக்கப்பட்டு, முழுக்கவனமும் படிப்பில் செல்கிறது. இது இந்திய சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் பற்றியது.
தசா ( DASA – Direct Admission for Students Abroad) என்னும் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களுக்கான நேரடித் தேர்வுக்காக ஸாட், ஜெ.ஈ.ஈ. என்று இந்த மாணவர்கள் கடுமையான பயிற்சிக்கு ஆளாகிறார்கள். தேர்வுகளில் வெற்றியும் பெற்று, இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள், அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் என்று சென்று சேர்கிறார்கள்.
சிங்கப்பூர்க் கல்விக் கழகத்தில் பயிலும் மாணவர்கள் இன்னமும் கடுமையான தேர்வுகளுக்கும், பயிற்சிகளுக்கும் ஆளாகிறார்கள். ஆறாம் வகுப்பிலேயே பொதுத்தேர்வு உண்டு. பிள்ளைகளும், பெற்றோர்களும் பெரும் முயற்சி செய்து அந்தத் தேர்வை எதிர்கொள்கிறார்கள். இதுபற்றி நிறைய நூல்களே வந்துவிட்டன. அதைப் பற்றித் தனியாகவே எழுதவேண்டி உள்ளது.
சி.பி.எஸ்.ஈ. தேர்வுக்கும் இதற்கும் உள்ள ஒரே ஒற்றுமை – இடைவிடாத கடும் உழைப்பு. அவ்வளவுதான்.
சிங்கப்பூரின் சிறந்த பல்கலைகளில் இந்தியாவில் எந்த மாநிலத்தின் பாடத்திட்ட மாணவர்களையும் அவர்களின் பள்ளியிறுதி மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு சேர்த்துக்கொள்வதில்லை. SAT தேவைப்படுகிறது. ஆனால், சி.பி.எஸ்.ஈ. மாணவர்களுக்கு தேசியப் பல்கலைக்கழகத்தில் ( NUS- National University of Singapore) சேர SAT தேவையில்லை. சி.பி.எஸ்.ஈ. +2 பள்ளியிறுதி மதிப்பெண் மட்டும் போதுமானது. இது சொல்லும் செய்தியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் எந்தப் படிப்பில் சேர்வது மிகக்கடினம்?
சட்டம். நாட்டிலேயே கல்வியில் மிக உயரிய நிலையில் உள்ள மாணவர்களுக்கே சட்டம் பயில வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அடுத்த நிலையில் மருத்துவம். பொறியியல் படிப்புக்குள் நுழைவது சற்று எளிதானது.
சட்டப் படிப்பு – நுழைவு ஏன் இத்தனைக் கடினம்?
சட்டம் நாட்டின் முதுகெலும்பு. நீதியின் ஆட்சி நடக்கவேண்டுமெனில், சட்டம் பயில்வோர் ஆக அதிகத் தரத்தினர்களாக இருத்தல் வேண்டும் என்று சிங்கப்பூர் நம்புகிறது. அது உண்மையும் கூட. அமெரிக்காவிலும் அதன் மிக உயரிய பல்கலையான ஹார்வார்ட் பல்கலையில் சட்டம் பயில நுழைவது அவ்வளவு எளிதானதல்ல.
நம் நாட்டிற்கு வருவோம். மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் என்னதான் செய்ய வேண்டும்?
மாநில அரசு நல்லது செய்யாது. அதன் அமைப்பு அப்படிப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளில் புற்றுநோய் போல் ஊழல் நுழைந்து, மாநிலத்தின் முதுகெலும்பை அரித்துவிட்டது. ஆக, அரசிடம் மாணவர்கள் எதிர்பார்க்கக்கூடியது ஒன்றும் இல்லை.
ஆனால், மாணவர்கள் செய்யக் கூடியது ஒன்று உள்ளது. மாநிலப் பாடத்துடன், சி.பி.எஸ்.ஈ. மாணவர்களின் பாடப் புத்தகங்களையும் ஓய்வு நேரங்களில் படித்து வாருங்கள். உதா: அணு மின்சாரம் பற்றிய பாடம் என்றால், மாநிலப் பாடத்திட்ட நூலில் உள்ள தரவுகள் தவிர, சி.பி.எஸ்.ஈ. புத்தகத்தில் உள்ளதையும் சேர்த்துப் படியுங்கள். உங்களுக்கே வேறுபாடு தெரியும். மேலதிக விவரங்கள் இருப்பதையும், புரிந்துகொள்வதற்கான வழிமுறைகள் இருப்பதையும் உணர்வீர்கள். சி.பி.எஸ்.ஈ. நூல்களில் உள்ள அணு மின்சாரம் தொடர்பான கணக்குகளைப் போட்டுப் பாருங்கள். அது உங்களுக்கு நல்ல பயிற்சியை அளிக்கும்.
சி.பி.எஸ்.ஈ. மாணவர்களைக் குறிவைத்து இணையத்தில் யூ டியூபில் பல காணொளிகள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் காணொளி உள்ளது. சற்று தேடிப் பார்த்தால் தென்படும். சிறந்த பயனளிக்கும் காணொளிகள் இவை.
தினமும் தரமான ஆங்கில நாளேடு ஒன்றைப் படிப்பது என்றும் வைத்துக்கொள்ளுங்கள். ஹிந்து நாளேடு இருப்பதில் தரமானது. அதன் கொள்கைகள் குறித்து அதிகக் கவனம் கொள்ள வேண்டாம், அதன் ஆங்கிலப் பயன்பாடு, பல்வேறு அறிவியல் தலைப்புக்களில் வெளிவரும் கட்டுரைகள் என்று பலதும் உங்களுடைய உலக அறிவையும் ஆங்கிலத்தின் தரத்தையும் வளப்படுத்தும்.
40 ஆண்டுகளாக ஹிந்துவில் ‘Know your English’ என்னும் பகுதி வருகிறது. இது தற்போது புத்தக வடிவிலும் வந்துள்ளது. அமேஜானில் கிடைக்கிறது. படித்துப் பயன்பெறுங்கள்.
தமிழ் நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயில நல்ல பள்ளிகளே இல்லையா? நல்ல ஆசிரியர்களே இல்லையா?
இருக்கின்றன. பெரும்பாலும் பணம் ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொள்ளாத தனியார் பள்ளிகள் சில அப்படி நல்ல கல்வியைப் போதிக்கின்றன. சில அரசுப் பள்ளிகள், நெய்வேலி ஜவஹர் பள்ளி, தாம்பரம் முடிச்சூர் நடேசன் வித்யாலயா, மயிலாடுதுறை தேசியப் பள்ளி, விவேகானந்தா குழுமப் பள்ளிகள் என்பவை எனக்குத் தெரிந்தவை. மற்ற பள்ளிகளும் இருக்கலாம். அவ்வப்போது அவை பற்றித் தெரியும் போது எழுதுகிறேன்.
மேலும் பேசுவோம்.
முந்தைய பதிவு இங்கே.