‘ஆமருவி, இங்க வாயேன், என் கையப் பாரு. எப்பிடி பெருமாள் தெரியறார் பார்,’ நான் நெய்வேலியில் இருந்து உற்சவத்திற்காகத் தேரழுந்தூர் வந்ததும் வராததுமாக எதிர்த்த வீட்டு அலமேலுப் பாட்டி அழைத்தாள்.
கைல பெருமாள் தெரியறாரா? ஊருக்கு வந்தவுடனே கிரகம் பிடிச்சு ஆட்டறதே என்று நினைத்தபடியே, பாட்டியின் கையைப் பார்த்தேன். பாட்டியின் உலர்ந்த கையில், ரேகைகளின் ஊடே காலையில் நீராடும் போது தேய்த்துக்கொண்ட மஞ்சள் தெரிந்தது. ‘ பார், பார் என்னமா சிரிக்கறார் பார்’, என்றாள் பாட்டி.
கலவரத்துடன் அவளது மகன் ரங்கன் மாமாவைப் பார்த்தேன். ‘தெரியறதுன்னு சொல்லு. இல்லேன்னா விடமாட்டா,’ என்றார். கொஞ்ச நேரம் இப்படியும் அப்படியும் பார்த்துசிட்டு, ‘இப்ப தெரியல்ல. நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன். ஒருவேளை அப்ப எனக்குத் தெரிவாரோ என்னவோ’ என்று ஓடி வந்தேன்.
இருந்த சில நாட்களில் வருவோர் போவோரிடம் எல்லாம் கையைக் காட்டிக் கொண்டிருந்தாள் அலமேலுப் பாட்டி. அவளது கணவர் ஶ்ரீவத்சையங்காருக்குக் கண் அவ்வளாவாகத் தெரிவதில்லை என்பதால் அவரை மட்டும் விட்டுவிட்டாள்.
முப்பது வருஷங்கள் கழித்து, சென்ற ஆண்டு மீண்டும் தேரழுந்தூர் உற்சவத்திற்குச் சென்றேன். பாட்டியின் பழைய வீட்டை இடித்துவிட்டுப் புதியதாகக் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். இடிப்பதற்கு முன் ஒருமுறை பார்த்துவரலாம் என்று முன்னர் பாட்டி உட்கர்ந்திருந்த இடத்தைத் தாண்டி மெள்ள உள்ளே சென்றேன்.
‘வாடா ஆமருவி. வந்து பாரேன். பெருமாள் உற்சவம் எப்படி நடக்கறது பார். நன்னா தெளிவா தெரியறது பாரேன்,’ என்று உள்ளிருந்து குரல் வந்தது. கையை நீட்டிக்கொண்டிருந்தார் தற்போது தொண்டு கிழமான ரங்கன் மாமா. கலவரத்துடன் உள்ளே கையைப் பார்த்தேன்.
அவர் கையில் ஐ-போன் 4ல் ஆமருவியப்பனின் கருடசேவைக் காட்சிகள்.
Leave a reply to Subbu Cancel reply