கோவில்களில் பட்டாச்சாரியார்கள் / சிவாச்சாரியார்கள் அட்டூழியம் செய்கிறார்கள்; வைதீக கார்யங்களுக்கு என்று வருபவர்கள் நிறைய பணம் கேட்கிறார்கள்; திவசம் பண்ணி வைக்க வரும் உபாத்யாயர் அடிப்பது பகல் கொள்ளை; ஒரு சீமந்தம் பண்ணி வைக்க ஐம்பதாயிரம் வாங்கலாமா; கணபதி ஹோமத்துக்குப் பத்தாயிரம் வாங்கலாமா;சுதர்ஸன ஹோமத்துக்கு இவ்வளவு வங்கலாமா;வைதீகர்கள் டூ-வீலர்களில் போகலாமா;..இப்படி பல ‘லாமா’க்கள். இப்படிக் கேட்டால் நடுநிலைவாதிகள் என்று பெயர் வேண்டுமானால் கிடைக்கலாம்.
உபாத்யாயர்களுக்கு சி.பி.எப். கிடையாது; அனேகம் பேருக்கு இன்சூரன்ஸ் கிடையாது; நிலையான ஊதியம் கிடையாது; அவர்கள் குடும்பமும் பிழைக்க வேண்டாமா என்ன? அவர்கள் வீட்டிற்கு மட்டும் ஆவின் பால் குறைந்த விலையில் போடுகிறார்களா என்ன? இல்லை மின்சாரம் தான் இலவசமாகத் தருகிறார்களா? எல்லரும் கட்டும் அதே பணம் தான் அவர்களுக்கும்.
இந்தக் காலத்திலும் வைதிக தர்மத்தை விடாமல், சிகை வைத்துக் கொண்டு, அந்தந்த சம்பிரதாயத்துக்கு ஏற்றாற் போல் வைதிக உடை தரித்துக் கொண்டு ‘ஆறில் ஒன்று பழுதில்லை’ என்பதாக அவர்கள் வேத தர்மத்தை ஓரளவிற்கு நிலை நிறுத்துகிறார்கள். பெரும்பாலோர் செய்ய வேண்டியதை, செய்ய முடியாததை, செய்ய வெட்கப்படுவதை, அவர்கள் விடாமல் செய்து வருகிறார்கள். அதற்காக அவர்களுக்கு வெகுமதிகள் கொடுக்க வேண்டாம் ஐயா, அவர்கள் கேட்கும் சம்பாவனையில் யோசிக்கலாமா?
ஒரு கல்யாணம் என்றால் மண்டபத்துக்கு என்று சில லட்சங்களைச் சிரித்துக்கொண்டே அழலாமாம், பண்ணி வைக்க வரும் வாத்யாருக்கு என்று வரும் போது நூறூக்கும் பத்துக்கும் கறார் பேரம்.
ஒரு ஐ-போன் ஐம்பொன்னை விட விலை அதிகம் விற்கிறது. ஆனால் விடாமல் வாங்குகிறோம். ஆப்பிள் வாட்ச் என்று கடிகாரத்தில் பொம்மை காட்டுவதற்கு நாற்பதாயிரம் ரூபாய் சொல்கிறார்கள். வாங்குகிறோம். ஒன்றுமில்லை, ஒரு காலணி ஆயிரம் ரூபாய் சொல்கிறார்கள். அங்கெல்லாம் பேரமா பேசுகிறோம்? பேசினால் தான் படிகிறதா? அங்கெல்லாம் கேட்ட விலையைக் கொடுக்கவில்லை?
ஒன்றுமில்லாத உஞ்சவிருத்திப் பார்ப்பானிடம் நாம் எகனாமிக்ஸ் பேசுகிறோம்; டூ-வீலரில் போவதை விமர்சிக்கிறோம். கோவிலில் தட்டில் பணம் போட்டால் தான் என்ன? திவ்யதேசங்களில் அர்ச்சகர்களுக்கு சம்பளம் மாதம் 200 ரூபாய்கள். இரண்டு லிட்டர் பால் வாங்க முடியுமா இதில்? கோவில் உண்டியலில் போடும் பணத்தைச் சுருட்டிப் பெருமாளுக்கே சாதம் போட மனமில்லை அறம் நிலையாத் துறைக்கு. ஆண்டாளையே பட்டினி போடுகிறார்கள் ஶ்ரீவில்லிபுத்தூரில். அர்ச்சகர் தட்டில் கொஞ்சம் தாராளமாய்ப் போட்டால் தான் என்ன?
சில கோவில்களில் சன்னிதிக்குச் சன்னிதி அர்ச்சகர்கள் கப்பம் போல் வசூலிக்கிறார்களே என்று கேட்கலாம். அவை பெரும்பாலும் பரம்பரைக் கோவில்களாக இருக்கும். அறம் நிலையாத் துறைக் கோவில்களில் இப்படித்தான் உள்ளதா? கோவிலுக்குள் நுழையவே அரசு பணம் கேட்கிறதே? அது நியாயமா?
எத்தனையோ ஊர்களில் ஒரே அர்ச்சகர் பல கோவில்களுக்கும் விளக்காவது ஏற்ற வேண்டுமே என்று தர்மத்தை விடாமல் செய்து வருகிறார். எனக்குத் தெரிந்தே அப்படிப் பலர் உள்ளனர். இந்த ‘அதர்மத்தை’ அனுஷ்டித்தே ஆக வேண்டும் என்று ஏதாவது சர்வாதிகாரி சட்டம் போட்டானா என்ன? ‘போங்கடா நீங்களும் உங்க கோவிலும்’ என்று அவரும் சாப்ட்வேர் எழுத அமெரிக்கா போயிருந்தால் இன்று எரியும் சில தீபங்களும் எரியாது.
ஹோமத்துக்கு வரும் எல்லா வைதீகர்களும் முழுமையாக அத்யயனம் பண்ணியவர்கள் இல்லை தான். ஓரிருவருக்கு மந்திரங்கள் தெரிவதில்லை தான். லவுகிக வாழ்வில் அனைவரும் சிரத்தையுடன் தான் பணியாற்றுகிறோமா என்ன? தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்கள் சட்ட மன்றத்துக்கு வருவது இருக்கட்டும்; அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லையே. கேட்டோமா?
ஏழை பிராம்மணன் சம்பாவனை கேட்டால் பேரம்; கூடையில் கறிகாய் விற்பவளிடம் பேரம்; ஐ-போன் கொள்ளைக்காரன் எவ்வளவு விலை வைத்தாலும் ப்ரீ-புக்கிங் (Pre-Booking).
மனச்சாட்சி வேண்டும் சார். அவ்வளவுதான்.
Leave a reply to Amaruvi Devanathan Cancel reply