விரதம் இருப்பவர்கள் என்ன செய்யக் கூடாது என்பதை உணர்த்துவதாக வருகிறது #திருப்பாவையின் இரண்டாவது பாசுரம். நெய், பால் உண்ண மாட்டோம், மை தீட்டிக்கொள்ள மாட்டோம், பூச்சூடி அலங்கரித்துக் கொள்ள மாட்டோம் என்னும் இப்பாசுரத்தில் மறைந்திருந்து வரும் ஒரு சொல் ‘ஒருங்கிணைப்பு’ என்பது.
ஆயர்பாடியில் உள்ள மக்கள் அனைவரையும் நோக்கி ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று பாடுகிறாள் #ஆண்டாள். இன்னின்னாருக்குத்தான் செய்தி சொல்கிறேன் என்றில்லாமல், உலகத்து மாந்தர் அனைவருக்குமான செய்தியாக ஆண்டாள் சொல்வது இப்பாசுரம்.
சம்பிரதாயம் என்பது அனைவருக்குமானது. சமூகத்தில் ‘Outliers ‘ எனப்படுபவர்களையும் உள்ளிழுத்துக் கொள்வதே ஒரு முன்னேறிய சமூகத்தின் அடையாளம்.
தற்போது ‘Inclusive’ என்கிறார்கள். 8ம் நூற்றாண்டிலேயே அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒரு முரசாகச் செயல்பட்டுள்ளாள் ஆண்டாள். இராமானுசர் அனைவருக்கும் செய்த உபதேசம் பின்னால் 11ம் நூற்றாண்டில் வருவது.
இவை தவிர, ‘ஐயம்’, ‘பிச்சை’ இரண்டையும் செய்வதாகச் சொல்கிறாள் ஆண்டாள். ஐயம் – தானாக தானம் செய்வது. பிச்சை – பிறர் கேட்டு அதன்பின் வழங்குவது. இவை இரண்டையும் விரதத்தின் ஒரு பகுதியாகவே காட்டியுள்ளது புதுமையானது. தாங்கள் உண்ணவில்லை, மலர் சூடவில்லை. ஆனால் தான தருமங்கள் செய்கிறார்கள். அதையும் பலராகச் சேர்ந்து செய்கிறார்கள்.
‘வஸுதா ஏவம் குடும்பகம்’ என்னும் பாரதப் பண்பாட்டின் அடிநாதத்தைத் தொட்டுக் காட்டும் தமிழ் அறைகூவல் ‘வையத்து வாழ்வீர்காள்’.
பி.கு.: ‘ஏ பாவிகளே’ என்று மக்களை அழைக்கும் கூட்டத்திடம் ‘வையத்து வாழ்வீர்காள்’ பாசுரத்தைப் படிக்கக் கொடுக்கலாம்.