‘மாயனை மன்னு வட மதுரை’ பாசுரத்தில் மூன்று என்னும் எண் முக்கியமானது. ஆழ்ந்த பொருளுடையது. பாசுரத்தின் அடி நாதம் போல் விளங்குவது.
‘திரிகரண சுத்தி’ என்னும் சொல் மூன்று வகையான சுத்திகளைக் குறிப்பது. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பது. ஆண்டாளும் இதையே ‘தூயோமாய் வந்தோம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க’ என்கிறாள்.
‘தூயோமாய் வந்தோம்’ என்னுமிடத்தில் ‘குளித்து நீராடிப் புறத்தூய்மையுடன் வந்தோம்’ என்பதும், ‘வாயினால் பாடி’ என்பதால் ‘வேறு எண்ணமோ பேச்சோ இல்லாமல் கண்ணனின் நாமத்தையே சொல்லி வந்தோம்’ என்பதும், ‘மனத்தினால் சிந்திக்க’ என்பதால் மனமும் கண்ணன் பற்றிய சிந்தனையுடனேயே இருப்பதாகவும் சொல்கிறாள் ஆண்டாள். ‘தூமலர் தூவித் தொழுது’ என்பதால் ‘அர்ச்சையில் பெருமாளுக்குப் புஷ்ப கைங்கர்கயம் உயர்வானது’ என்பதும் புலப்படுகிறது. பக்தி யோகத்தில் இருந்ததால் ஆண்டாள் மலர் தூவி வழிபடுகிறாள்.
‘நீராடினால் தூய்மை கிடைத்துவிடுமா?’ எனலாம். இதற்கு வள்ளுவரிடம் செல்வோம். ‘புறத்தூய்மை நீரான் அமையும்’ என்கிறார் அவர். சரி. அகத்தூய்மை? ‘வாய்மையால் காணப்படும்’ என்பது வள்ளுவர் வாக்கு.
‘ஆனால் ஆண்டாள் வாய்மை பேசியதாக எங்கும் வரவில்லையே ?’ எனலாம். ‘வையத்து வாழ்வீர்காள்’ பாசுரத்தில்,’ செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம்’ என்கிறாளே. புறங்கூற மாட்டோம், பொய் பேச மாட்டோம் என்று விரதகால அனுஷ்டானத்தைச் சொல்கிறாள் அவள். ஆக, ஆண்டாள் அகத்திலும் தூய்மையாகத்தான் இருக்கிறாள். உள்ளத்தளவில் தூய்மையோடிருத்தலே பேரறம் என்கிறார் வள்ளுவர் ( மனத்துக்கண் மாசிலன் ஆதல்..)
இவை தவிர ‘மூன்று’ என்பது சைவம், வைணவம் இரண்டிற்கும் முக்கியமானது. ஆணவம், கண்மம், மாயை ஆகிய ’மும்மலங்களின் நீக்கம்’ , அத்துடன் ‘பசு, பதி, பாசம்’ என்கிற மூன்று பிரிவுகளில் இறை நிலையை அடைவது பற்றி சைவம் பேசுகிறது.
வைணவத்தின் ‘மூன்று’ – விசிஷ்டாத்வைத் சித்தாந்தத்தின் ஆணி வேர். ‘ஜீவாத்மா, பரமாத்மா, ஜடப்பொருள்’ என்று மூன்றும் உண்மையே என்பது விசிஷ்டாத்வைதத்தின் அடி நாதம். வைஷ்ணவ ஆச்சாரியர்கள் (சந்யாசிகள்) மூன்று கழிகளை ஒன்றாகச் சேர்த்து ‘த்ரிதண்டம்’ என்கிற முக்கோல் ஏந்தி மூன்று உண்மைகளைப் பறைசாற்றி வருகின்றனர். மற்றொரு விதத்தில் வைணவத்தின் ‘மூன்று’ – திருமந்திரம், த்வயம், சரம ஸ்லோகம் எனப்படும் மூன்று ரஹஸ்யங்கள். (ரஹஸ்ய-த்ரயம்).
ஆக, ‘மாயனை மன்னு’ என்றவுடன் நமக்கு நினைவிற்கு வர வேண்டியது – எண் மூன்று.