‘புள்ளும் சிலம்பின காண்’ பாசுரத்தின் முதல் சொல்லே சற்று சிந்திக்க வைப்பது. முதல் சொல்லிலேயே ‘உம்’ விகுதி வரவேண்டிய தேவை என்ன?
பொழுது புலர்ந்து விடிந்துவிட்டது என்பதைச் சொல்ல, ‘பறவைகள் சிலம்புகின்றன’ என்கிறாள் #ஆண்டாள். ஆனால் பறவைகளைச் சொல்லும் முன் வேறு ஏதாவது சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? இப்பாடலில் இல்லை, முதல் ஐந்து பாடல்களிலும் பொழுது விடிந்ததற்கான செய்திகள் இல்லை. ஆக, ‘உம்’ விகுதி கொஞ்சம் இடறுகிறதுதானே?
முதல் வரியை இப்படிப் பாருங்கள்:
‘புள்ளரையன் கோயில் வெள்ளை விழி சங்கின் பேரரவம் கேட்டு, புள்ளும் சிலம்பின, (நீ) கேட்டிலையோ?’
பறவைகளின் தலைவன் கருடனின் கோவிலில் இருந்து வெள்ளைச் சங்கின் பேரொலி கேட்டுப் பறவைகள் கூட துயில் எழுந்து சிலம்புகின்றனவே! நீ இன்னும் கேட்டு எழவில்லையா?’ என்பதாக வாசித்தால் ‘உம்’ விகுதி பொருள் தரும்.
தவிரவும், இப்பாடலில் ‘பேரரவம்’ என்னும் சொல் இருமுறை வந்து ‘பேரொலி’ என்னும் பொருள் தருகிறது. அப்பேரரவத்தை ‘ரஹஸ்ய-த்ரயத்தின்’ திருமந்திரத்தின் ஒலியாகவும், ஓங்காரத்தின் ஒலியாகவும் வகைப்படுத்த்துவது ஸ்ரீவைஷ்ணவ காலக்ஷேபர்களின் பாணி. அதற்கு அவர்கள் நம்மாழ்வார் துவங்கி, உபநிஷத்துக்கள் வழியாக, வேதாந்த தேசிகனின் விளக்கங்கள் கொண்டு செய்யும் காலக்ஷேபம் மிகச் சுவையானது. இந்த ஒரு சொல்லிற்கு சுமார் அரை மணி நேரம் ஆகும் விளக்கம் சொல்ல. வைணவர்கள் அவசியம் இவற்றைக் கேட்க வேண்டும்.
விடியற்காலையில் கோவிலில் சங்கு ஊதுவார்களா? என்கிற கேள்வி எழலாம். சங்கம் மட்டும் இல்லை, இன்னும் பல வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
“ஏதமில் தண்ணுமை எக்கம்மத் தளி
யாழ்குழல் முழவயோடு இசைதிசை யெழுப்பி
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்’ .
இப்பாடலிழும் கருடன் ( புள்+அரையன் ) வருவது ஒரு ஒற்றுமை.
இது தவிரவும் #திருப்பாவையில், ‘முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து அரியென்ற பேரரவம்..’ என்னும் வரி உற்று நோக்கத்தக்கது. எதற்காக ‘மெல்ல எழ வேண்டும்?’ என்றால், அவர்கள் ஸ்ரீமன் நாராயணனை சாளக்கிராம வடிவில் எப்போது தங்களுடன் வைத்திருப்பவர்களாம். எனவே திடீரென்று எழுந்தால் பெருமாளுக்கு அசௌக்யம் ஏற்படும் என்பதால் மெல்ல எழுகிறார்கள் என்கிறது ஒரு வியாக்கியானம்.
முனிவர்களின் உள்ளங்களில் எப்போதும் இறைவன் குடியிருப்பதால் மெதுவாக எழுகிறார்கள் என்றும் கொள்ளலாம்.
பி.கு.: தற்காலத்தில் ‘சாளக்கிராமம்’ என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பது நமது துர்பாக்கியம்.
விளக்கம் சுவையாக உள்ளது
LikeLike