‘கீசு கீசென்றென்னெங்கும்’ # திருப்பாவைப் பாசுரத்தில் ஒலிக்குறிப்புகள் பல இடம் பெறுகின்றன. ஆனைச்சாத்தான் / வலியான் / கரிக்குருவி / பரத்வாஜ பக்ஷி என்று பல பெயர்களால் அறியப்படும் காலையில் ஓசையெழுப்பும் பறவையொன்று பற்றியும், அது ‘கீசு கீசு’ என்றும் ஒலியெழுப்பும் என்றும் தெரிந்துகொள்கிறோம். (ட்வீட்டருக்குத் தமிழில் கீச்சு என்கிறார்கள்)
சென்ற பாசுரத்தில் ‘புள்ளும் சிலம்பின’ என்று பறவைகளுக்கான பொதுப்பெயரைக் குறிப்பிடும் #ஆண்டாள், இப்பாடலில் ஆனைச்சாத்தன் என்கிற குறிப்பிட்ட பறவை பற்றிச்சொல்கிறாள். சிட்டுக்குருவிகள் அருகி வரும் இக்காலத்தில், சூழியல் பற்றி நமக்கு உணர்த்தும் பாசுரம் இது.
பறவைகளின் ஒலியுடன் தயிரைக் கடையும் ஒலியும் சேர்ந்துகொள்கிறது. அத்துடன், தயிர் கடையும் இடைச்சியரின் காசுத்தாலி + பிறப்புத் தாலி ((அச்சுத்தாலி + ஆமைத்தாலி என்பாரும் உளர்). முதலியவற்றின் ஒலியும் சேர்ந்துகொள்கிறது. இவற்றுடன், சென்ற பாடலின் கருடன் கோவில் சங்கொலி, தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ‘கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்’ – இவர்களால் ஏற்பட்ட பேரொலி, முனிவர்களும் யோகிகளும் இசைத்த அரியென்ற பேரரவம் – ‘இத்தனை ஒலிகளையும் கேட்ட பின்னரும் நீ உறக்கம் களையவில்லையா?’ என்று கேட்கிறாள் ஆண்டாள். இது ஏதொ நமக்கே சொல்வது போல் உள்ளது.
முதலில் ‘பேய்ப்பெண்ணே’ என்று வசை போல் தெரியும் சொல்லால் விளிக்கும் ஆண்டாள், பின்னர், எழுப்பப்படுபவளைச் சாந்தப்படுத்த எண்ணி ‘நாயகப் பெண் பிள்ளாய்’, ‘தேசம் உடையாய்’ என்று appease செய்வது போல் அழைக்கிறாள். ( தேசம் = தேஜஸ் என்னும் வடமொழிச் சொல்லின் தேய்வு)
பி.கு.: தமிழர் வாழ்வியலில் தாலி இல்லை என்ற ‘முற்போக்கு’கள் வரிசையில் நிற்கவும்.