‘நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்’ #பாசுரத்தில் கர்ம வினை பேசப்படுகிறது. முற்பிறவியில் செய்த நற்செயல்களினால் இப்போது நல்வாழ்வு வாழ்கிறாய் என்கிறாள் ஆண்டாள். தமிழ்த்தேசத்தவரின் பண்டைய நம்பிக்கையான ஊழ்வினை கோடிகாட்டப்படுகிறது. திருவள்ளுவரும் ஊழ்வினையை ஆதரித்தவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
‘நோன்பு நோற்றதால் கிட்டும் நற்பதவி, சுகம்’ என்றும் பொருள் கூறுவதுண்டு.
இராமாயண நிகழ்வான கும்பகருணன் வதை ‘பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?’ என்பதன் மூலம் சுட்டப்படுகிறது.
‘தோற்றும் உனக்கே’ என்னும் பிரயோகத்தில் ‘உம்’ விகுதி உற்று நோக்கத்தக்கது. போரில் தோற்றபின்னும், இறந்துபட்ட போதும் தனது உறக்கத்தைத் தானமாகக் கொடுத்தான் என்பதால் கும்பகருணனின் வள்ளற்றன்மை உணர்த்தப்படுகிறது என்று பார்ப்பது ஒரு சுவை.
இரு சிற்பிகளுக்கிடையே நடைபெறும் சிற்பக்கலைப்போட்டியில் தோற்கும் சிற்பி ‘இனி சிற்பம் செதுக்க மாட்டேன். வெற்றி பெற்றவனுக்கே என் திறமையைக் காணிக்கை ஆக்குகிறேன்’ என்று சொல்வது போல், உறங்குதல் போட்டியில் கும்பகர்ணன் பாவை நோன்பிருக்கும் அப்பெண்ணிடம் தோற்றதால் அவன் தனது உறக்கத்தை அவளிடம் தந்து சென்றான் என்று சொல்வது #திருப்பாவைக் காலட்சேபங்களில் வரும் சுவையான இன்னொரு பார்வை.
#திருப்பாவை #ஆண்டாள்