‘கனைத்திளங் கற்றெருமை’ பாசுரம் #திருப்பாவையின் திராட்சைப் பழம் கலந்த அக்கார அடிசில் போன்றது. அவ்வளவு சுவைகள்.
தனது கன்றை நினைத்தவுடன் எருமை மாட்டிற்குப் பால் தானாகச் சுரந்து வழிந்து, வீடு முழுவதும் பரவி, அதனால் சேறு நிறைந்த வீடாகக் காட்சியளிக்கிறதாம். ‘அத்தகைய செல்வம் பொருந்தியவனின் (நற் செல்வன்) தங்கையே’ என்று நோன்பிருக்கும் பெண்ணை விளிக்கிறாள் ஆண்டாள்.
அந்த நற்செல்வன் யார் என்று ஆராய்வதில் ஒரு சுவை உண்டு.
திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு ‘நூறு தடா வெண்ணையும் நூறு தடா அக்கார அடிசிலும் கண்டருளப் பண்ண வேண்டும்’ என்று ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்.
‘நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்..’
ஆனால், அவளது பூவுலக வாழ்நாளில் அவளது விருப்பம் நிறைவேறவில்லை.
ஆண்டாளுக்குப் பின்னர் பிறந்த ஶ்ரீமத் இராமானுசர் அவளது உள்ளக்கிடக்கையை அறிந்து அவ்வாறு நூறு தடா கண்டருளப்பண்ணுகிறார். பின்னர் ஶ்ரீவில்லிபுத்தூர் செல்லும் இராமானுசரை ‘எம் அண்ணரே’ என்று ஆண்டாள் அழைக்கிறாள். 200 ஆண்டுகள் பிற்பட்ட இராமானுசரை ஆண்டாள் ‘அண்ணா’ என்று அழைத்ததால் அவள் உடையவருக்குத் தங்கையாகிறாள். ஆக, இவ்விடத்தில் ‘நற்செல்வன்’ என்று ஆண்டாள் குறிப்பிடுவது பின்னர் தோன்றப்போகும் உடையவரையே என்கிற நோக்கில் பார்த்தால் இப்பாசுரம் அக்கார அடிசில் என்பதில் சந்தேகம் என்ன?
சுவை அவ்வளவு தானா? மேலும் பாருங்கள்.
இராமபிரானைச் ‘சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்’ என்கிறாள் ஆண்டாள். ‘சினம்’, ‘தோற்கடித்தவன்/ வென்றவன்’ என்கிற சற்று கடுமையான அடைமொழிகளால் சொல்கிறாள் அவள். அப்படிச் சொன்னபின் மனம் கேட்காமல் ‘மனத்துக் கினியான்’ என்று சொல்லி ஒருவாறு சமன் செய்கிறாள்.
இலங்கை வேந்தனைக் கொன்றான் என்பது சரி. ஆனால், மனத்துக்கினியான் ?
இராவணனைக் கொன்றது உண்மை என்றாலும், அதற்கு முன் மனம் இறங்கி, அவன் உயிர் பிழைக்க வாய்ப்பளித்தான் அல்லவா ?
ஆள் ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை இன்று போய் போர்க்கு
நாளை வா என நல்கினன் நாகு இளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்
என்று கம்பன் சொல்வது இதைத்தானே? போர் செய்வதாக இருந்தால் நாளை வா, இல்லையேல் இன்றே சரண் புகு, உனக்கு மோட்சம் அளிக்கிறேன் (மாம் ஏகம் சரணம் வ்ரஜ) என்றல்லவா சொல்கிறான் இராமன்?
ஆக மனத்துக்கினியான் என்பது சரிதானே.
அக்கார அடிசிலில் திராட்சைப் பழம் என்பது இது தான்.
Leave a reply to Amaruvi Devanathan Cancel reply