‘புள்ளின் வாய்க் கீண்டானை’ என்னும் திருப்பாவைப் பாசுரத்தில் தமிழின் அழகும் வலிமையும் தெரிகின்றன. அழகிய, வலிமை வாய்ந்த சொற்கள் ஆண்டாளின் கைகளில் விளையாடுவதை இப்பாசுரத்தில் காணலாம்.
திருப்பாவை முழுவதும் ‘புள்’ என்று பறவையினத்தை அதன் பொதுப்பெயரால் குறிப்பிடும் #ஆண்டாள், இப்பாசுரத்தில் ‘புள்ளின் வாய்க்கீண்டானை’ என்னுமிடத்தில் கொக்கு உருவில் கண்ணனைக் கொல்ல வந்த பகாசுரன் வதையை உணர்த்துகிறாள். மூன்றே சொற்களின் மூலம் ஒரு பெரிய நிகழ்வைச் சொல்லி முடிக்கிறாள் ஆண்டாள்.
‘பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை’ என்னுமிடத்தில் இராவணன் என்னும் அரக்கனது கதை முடிந்த நிகழ்வு உணர்த்தப்படுகிறது. மிகப்பெரிய யுத்தத்தின் மூலம் முடிவுற்ற இராவணனின் கொடிய வாழ்வு, ‘கிள்ளிக் களைந்தானை’ என்னும் எளிய சொல்லாடலால் உணர்த்தப்படுகிறது. கீரையை ஆயும் போது, அதனுடன் இருக்கும் பூச்சி பட்ட கீரை இலைகளை எளிதாகக் கிள்ளிக் களைவது போல இராவணனது முடிவு சொல்லப்படுகிறது. படிப்போரின் உள்ளத்தில் எந்த வித எதிர்மறை எண்ணமும் தோன்றாத வகையில் தமிழ் விளையாடுகிறது.
இந்த இரு நிகழ்வுகளிலும் ‘கொல்லுதல்’ என்னும் சொல் பயன்படுத்தப் படவில்லை என்பது ஒரு சுவை. சென்ற பாடலில் ‘மனத்துக்கினியான்’ என்று இராமனை அழைத்துவிட்டு இப்பாடலிலும் அது போலவே மென்மையாகக் கையாண்டுள்ளாள் ஆண்டாள்.
‘போதரிக் கண்ணினாய்’ என்னும் பிரயோகம் ‘போது + அரி + கண்ணினாய்’ என்று பிரிந்து பல பொருள் தெரியும் படி வருகிறது. ‘அரி’ என்னும் சொல் பல பொருள் உடையது.
- அங்கும் இங்கும் அலைவதால், மான் போன்ற கண் உடையவளே
- எதிரி என்னும் பொருளில், மானின் கண்ணிற்கு எதிரி போல் அழகிய கண்ணை உடையவளே
- வண்டு என்னும் பொருளில், பூவில் பொதிந்த வண்டு போன்ற கண் உடையவளே
வைஷ்ணவ காலட்சேபங்களில் இப்படிச் சொல்வார்கள்:
‘காலையிலேயே பாவை நோன்பு நோற்கப் பெண்கள் பாவைக் களத்திற்குச் சென்று விட்டனர். உடனே எழுந்திரு.’
‘அவர்கள் சின்னப் பெண்கள். விபரம் அறியாதவர்கள். இன்னும் பொழுது விடியவில்லை. பிறகு செல்லலாம்.’
‘இல்லை. பொழுது புலர்ந்து விட்டது. எனவே எழுந்திரு.’
‘காலையின் அறிகுறிகள் வேறு ஏதாவது உண்டா?’
‘பறவைகள் கத்துகின்றன. அது ஒன்று போதுமே.’
‘ஒப்புக்கொள்ள இயலாது. வேறு ஏதாகிலும் பொழுது புலர்ந்ததற்கான அறிகுறிகள் உள்ளனவா? வெள்ளி (சுக்கிரன்) உதித்து விட்டதா? வியாழன் (குரு) அஸ்தமித்து விட்டதா?’
‘ஆமாம், வெள்ளி எழுந்து, வியாழன் உறங்கி விட்டது. அத்துடன் நாங்களும் வந்திருக்கிறோம். எனவே பொழுது புலர்ந்துவிட்டது.’
‘நம்பும்படி இல்லை. கிருஷ்ண அனுபவம் பெறுவதற்காக, இரவே நீங்கள் வந்து விட்டீர்கள், இராமனைக் காட்டிற்கு அனுப்பிய பரதன், விடியற்காலையில் நீராடச் சென்றால் ‘தன் அண்ணனைக் கானகத்துக்குத் துரத்திய பாதகன் செல்கிறான்’ என்று ஊரார் வசைச் சொல் உரைப்பர் என்பதால், நள்ளிரவே நீராடச் செல்வதைப் போல, நீங்களும் பொழுது விடியும் முன்னே வந்துவிட்டீர்கள்.’
‘மான் போன்ற அழகிய கண்களை உடையவளே, நீ மட்டும் தனியாகக் கிருஷ்ணானுபவம் பெற வேண்டி, அதானால் நாங்கள் எழுப்பியும் எழுந்து வராமல் படுத்துக் கிடக்கிறாயா? இந்தக் கள்ளத்தனத்தை விடுத்து எழுந்து வா’
இராமாயண நிகழ்வும், கிருஷ்ணாவதார நிகழ்வும் முதலிரண்டு வரிகளில் வந்துவிடுவது இப்பாசுரத்தின் சிறப்பு.
இப்படி ஆண்டாளின் அழகு தமிழ்ச் சொற்களையும், இதிகாச நிகழ்வுகளையும் கற்பனையை விரித்துச் சொல்லப்படும் வைஷ்ணவ காலட்சேபங்களினால் 1200 ஆண்டுகளாக ஆண்டாளின் திருப்பாவை மக்களின் வாழ்வோடு இணைந்த பெருங் கவிதையாகத் திகழ்ந்து வருகிறது என்பதில் சந்தேகமென்ன?