‘எல்லே இளங்கிளியே’ என்னும் பாசுரத்தில் தமிழின் தொன்மை தெரிகிறது.
‘எலுவை’ என்பது பெண்ணை அழைக்கும் சொல். ‘எலுவன்’ என்பது ‘தோழன்’ என்னும் பொருளில் வருகிறது என்று தமிழ் அகராதி கூறுகிறது. ஆக, எலுவன் என்பது மருவி தற்போது ‘எலேய்’ என்றும், ‘எலுவை’ என்பது ‘எல்லே’ என்றும் வருகிறது. எலுவை, எல்லே என்பவை சங்க காலச் சொற்கள்.
ஆக, ‘எல்லே’ என்னும் ஆண்டாளின் சொல் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டு பழையது.
இப்பாடலில் வைஷ்ணவ லக்ஷணம் சொல்லப்படுகிறது.
‘எழுப்பாதீர்கள். உங்கள் சொற்கள் குளிர்ந்த நீரைக் காதில் விடுவது போல் என் தூக்கத்தைக் கெடுக்கின்றன. ‘சற்றுப் பொறுங்கள். நான் எழுந்தது வருகிறேன்’
‘நீ வாய்ச்சொல்லில் வீராங்கனை. நாங்கள் நீ உரைப்பனவற்றை நம்பப்போவதில்லை.’
‘ஆமாம், நீங்கள் நல்லவர்கள். நான் வாய்ச்சொல் வீராங்கனை தான். அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்.’
அழைக்கும் பெண்கள் குற்றம் சுமத்தியவுடன், அதனைத் தன் குற்றமாகவே கொள்கிறாள் உறங்குபவள். பாகவதர்கள் நம் மீது குற்றம் சொன்னால், நாம் அக்குற்றத்தைச் செய்யாவிடினும் பாகவதர்கள் சொல்வதால் அதனை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது வைஷ்ணவ லக்ஷணம் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அவ்விலக்கணப்படி, உறங்குபவள் வைஷ்ணவ லக்ஷணத்திற்கு ஒரு உதாரணம் போல் உள்ளாள்.
‘மாற்றாரை மாற்றழிக்க வல்லானை’ என்பதில் ஒரு நயம் உண்டு. இது இராமனுக்கும் கண்ணனுக்கும் உள்ள வேறுபாடு. இராமன் ‘மனத்துக்கினியான்’ எனவே ‘இன்று போய் போர்க்கு நாளை வா’ என்று கருணையினால் கூறினான். ஆனால், கண்ணன் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்கிற பைனரி முறையில் செயல்படுபவன். எனவே எதிரிகளின் மீது இராமனைப் போல் கருணை காட்டாமல் உடனுக்குடன் அவர்கள் கதையை முடித்துவிடுவான் என்கிற பொருளில் ‘மாற்றாரை மாற்றழிக்க வல்லானை’ என்கிறாள் ஆண்டாள்.
இக்கருத்தை வலியுறுத்த ‘வல்லானை ( கம்சனின் குவலயாபீடம் என்னும் வலிமையான யானை ) ‘ என்கிறாள் ஆண்டாள்.
இவை தவிர, ‘ஒல்லை’ என்னும் அருந்தமிழ்ச்சொல் காணக்கிடைக்கிறது. ‘உடனே, அப்போதே’ என்பதை உணர்த்த இச்சொல் பயன்படுகிறது.
‘ஒல்லை நீ போதாய்’ என்கிறாள் ஆண்டாள். ‘
அவளது தந்தையான பெரியாழ்வாரோ
‘ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ’ என்கிறார்.
பாகவதர்கள் குழாத்தில் ஒல்லை (உடனே) சேர்ந்து கொள்ளுங்கள் என்று அப்பாவும் மகளும் ஒன்று போலவே அழைக்கிறார்கள்.
#திருப்பாவை #ஆண்டாள்