‘நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய..’ #பாசுரத்தில் பாவை நோன்பிருக்கும் பெண்கள் வாயிற்காவலனிடம் கெஞ்சுவதும், கண்ணபிரானின் அனுபவத்தைப் பெற மணிகள் பூட்டிய கதவைத் திறக்க வேண்டுவதாகவும் இருப்பது பொதுப்பார்வை.
பாசுரத்தின் முதலில் காணப்பெறும் ‘நாயகனாய் நின்ற’ என்கிற அடைமொழி யாரைக் குறிக்கிறது என்கிற கேள்வி சுவையானது.
- ‘நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய, கோவில் காப்பானே’ என்று தொடர்புள்ளியை(Comma) ‘நந்தகோபனுக்குப் பின் போட்டு வாசித்தால், ‘நாயகனாய் நின்ற’ என்பது நந்தகோபனைக் குறிப்பதாகத் தோன்றும்.
- தொடர் புள்ளியை ‘நின்ற’விற்குப் பிறகு போட்டால் ‘நாயகனாய் நின்ற, நந்தகோபனுடைய கோவில் காப்பானே’ என்றால், ‘நாயகனாய் நின்ற’ என்பது கோவில் காப்பவனைக் குறிப்பதாகத் தோன்றும்.
இரு பார்வைகளுமே சுவையானவை தான்.
1. – இதில் கருத்து வேறுபாடு எழ வழியில்லை. இருந்தாலும் ‘நாயகனாய் நின்ற கண்ணனுடைய’ என்றில்லாமல் நந்தகோபனுக்கு ஒரு ஏற்றம் தெரிகிறது. அவ்வளவுதான்.
2.- இதில் கேள்வி எழலாம். ‘வாயில் காப்பவனுக்கு ஏன் இவ்வளவு ஏற்றம்?’ என்னும் கேள்வி எழ வாய்ப்புள்ளது. இவ்விடத்தில் வைஷ்ணவ காலட்சேப உரை சுவையானது. வாயில் காப்பவன் நமக்கெல்லாம் பரம்பொருளைக் காட்டிக் கொடுப்பவன். இக்கரையில் இருந்து அக்கரைக்குச் செல்ல உதவுபவன். எனவே இவ்விடத்தில் ‘வாயில் காப்பவன்’ என்பது ஆச்சார்யனைக் குறிக்கிறது என்பதாகக் கொள்வது சுவையானது.
ஆனால், கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே’ என்று இன்னொரு ‘ஆச்சார்யன்’ உள்ளாரே? என்கிற கேள்வியும் எழலாம். ஆம். இரு ஆச்சார்யர்கள் இருப்பது நியாயமே. ஒருவர் நமது குல / பரம்பரை ஆச்சார்யன் ( நமக்கு சமாஸ்ரயணம் / பாரநியாஸம் செய்தவர்). இன்னொருவர் இவ்வழக்கத்தையெல்லாம் பெருமளவில் நடைமுறைப் படுத்திய எம்பெருமானார் என்னும் யதிராஜர். ஆக, இரு ஆச்சார்யர்கள் கணக்கு சரியாகிவிட்டது என்கிற பார்வை அலாதியானது.
‘ஆனால், எம்பெருமானார் ஆண்டாளுக்குப் பின்னர் தோன்றியவர் ஆயிற்றே ?’ எனலாம். அதனால் தான் ஆண்டாள் ‘எம் அண்ணரே’ என்று யதிராஜரை அழைத்து இவ்வினாவிற்கு விடை அளித்துள்ளாள் என்று கொள்ளலாம்.
இப்பாசுரத்தில் பாவை நோன்பிருக்கும் பெண்டிர் ‘தூயோமாய் வந்தோம்’ என்று மீண்டும் கூறுவது வாயிற்காப்போருக்கு விடை அளிப்பது போல் உள்ளது. வாயிற்காப்பவர்கள் ‘நீங்கள் திரிகரண சுத்தி உடையவர்களா?’ என்று கேட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்க இடமுள்ளது. இது பார-நியாசம் செய்யும் முன் ஆச்சார்யன் ‘நீ பெருமாள் கைங்கர்யத்தை விடாமல் செய்து வருகிறாயா? உனக்கு மோக்ஷம் கேட்டுப் பெருமாளிடம் சிபாரிசு செய்யும் முன், தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று வினவுவதைப் போல் உள்ளது.
#ஆண்டாள் #திருப்பாவை
nparamasivam1951
December 31, 2017 at 8:26 pm
புது புது அர்த்தங்கள்! அருமை
LikeLike
Amaruvi Devanathan
December 31, 2017 at 9:46 pm
thanks sir
LikeLike