‘அம்பரமே தண்ணீரே’ பாசுரத்தில் பலர் எழுப்பப்படுகிறார்கள். நந்தகோபாலன், யசோதை, பலராமன், கண்ணன் என்கிற வரிசைப்படி அனைவரும் எழுப்பப்படுகிறார்கள் என்பது பொதுப்பார்வை.
‘அம்பரமே, தண்ணிரே, சோறே’ என்கிற வரிசை நமக்கு ‘உண்ணும் சோறு பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்கிற வழக்கை நினைவுபடுத்தலாம். அதனினும் இதில் வேறொரு சுவை உண்டு.
அம்பரம் (ஆடை), நீர், சோறு என்று இவற்றை எல்லாம் அளிப்பவனே என்பதுடன் நிற்காமல் இவற்றை எல்லாம் எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல் அறமாகச் செய்யும் நந்தகோபாலனே என்பதாய் ‘அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் நந்த கோபாலா’ என்று அழைக்கிறாள் #ஆண்டாள்.
இப்பாடலில் ‘செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா’ என்று சிறப்பு அடைமொழியுடன் பலராமன் அழைக்கப்படுவது உற்று நோக்கத்தக்கது. இராமாவதாரத்தில் ராமனுக்குப் பின்னர் தோன்றிய ஆதி சேஷனான லக்ஷ்மணன், கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்கு முன் பிறந்து முன் போலவே சேவை செய்தமையால் ‘உம்பியும் நீயும்’ என்று முதலில் பலதேவன் சொல்லப்படுகிறான். கண்ணனின் அண்ணன் என்று சொல்லாமல், பலதேவனின் தம்பி என்று பலராமனுக்குச் சிறப்பு செய்யப்படுகிறது.
பின்வரும் பாசுரமும் அரவணையின் சிறப்பை உணர்த்துவது ஈண்டு நோக்கத்தக்கது.
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம், திருமாற் கரவு
மூன்றாம் பாசுரத்தில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று போற்றப்படும் கண்ணன் இங்கு ‘ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்’ என்று தேவாதிராஜன் என்கிற அர்ச்சாவதார மூர்த்தியை உண்ரத்துவது போல் உள்ளது ஒரு சுவை.
‘அம்பரம்’ என்னும் சொல் இருமுறை வந்துள்ளது. முதலில் ‘ஆடை’ என்னும் பொருளிலும், பின்னர் ‘ஆகாசம் / வானம்’ என்னும் பொருளிலும் வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இரு இடங்களிலும் ஆடை என்றே வருகிறது என்றும் சொல்வர். கண்ணன் ஆகாசத்தையே ஆடையாய் அணிந்துள்ளான் என்கிற பொருளில் இதுவும் ஒரு பார்வையே என்று கொள்வது ஒரு சுவை.
#ஆண்டாள் #திருப்பாவை