‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் பொழுது விடிந்ததற்கான மேலும் பல அறிகுறிகள் சொல்லப்படுகின்றன.
‘கோழி அழைத்தன காண்’ என்று அழைக்கும் பெண் கூறுகிறாள். உரையாசிரியர்கள் இந்தப் பிரயோகத்தை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். ‘கோழி’ என்பது காலையில் கூவும் சேவல் இல்லையாம். இரவில் கூவும் சாமக்கோழியாம். எனவே பொழுது விடியவில்லை என்று உள்ளிருப்பவள் கூறினாளாம்.
பொழுது உண்மையிலேயே விடிந்துவிட்டது என்பதை உணர்த்த வேறு ஏதாகிலும் சாட்சிகளைக் காட்டுமாறு உள்ளிருப்பவள் கேட்டாளாம். அதற்காக ‘மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்’ என்று பதில் அளித்தார்கள் போலும் என்பது உரையாசிரியர்கள் பார்வை.
‘அக்குயிலினங்கள் மாதவிப் பந்தல் மேல் இருந்து கூவின’ என்று கூற வேண்டிய தேவை என்ன? ‘குயிலினங்கள் கூவின’ என்றால் போதாதா? என்றால், இரவு நேரத்தில் குயில்கள் மாதவிப் பந்தல் மேல் உறங்குமாம். எனவே பொழுது விடிந்தவுடன் அவை சிலிர்த்தெழுந்து அப்பந்தல் மேலிருந்தே கூவின என்பதால், ஒருவேளை சாமக்கோழி அழைத்திருந்தாலும், குயில்கள் பொழுது புலர்ந்தமையை மாதவிப் பந்தல் மேலிருந்து உணர்த்திவிட்டன என்பது பெரியோர் பார்வை.
இப்பாடல் தொடர்பான சுவையான செய்தி ஒன்றுண்டு.
திருவரங்கத்தில் எம்பெருமானார் தினமும் காலையில் மாதுகரம் ( பிக்ஷை) பெறுவதற்குச் செல்லும் போது, ஒரு நாள் பெரிய நம்பிகளின் இல்லத்தின் முன் நின்று பிக்ஷை வேண்ட, நம்பிகளின் பெண் அத்துழாய் கதவைத் திறந்தவுடன் அவளைக் கண்ட மாத்திரத்தில் எம்பெருமானர் மூர்ச்சை அடைந்து விட்டார். பயந்து போன அத்துழாய், தன் தந்தையிடம் கூற, அவர் பதற்றமில்லாமல் ‘உந்து மதகளிற்றன்’ என்றார்.
குழப்பத்தில் ஆழ்ந்த அத்துழாயிடம்,’ எம்பெருமானார் எப்போதும் போல் இன்றும் திருப்பாவை சேவித்தவாறே பிக்ஷைக்கு எழுந்தருளியிருப்பார். நம் இல்லத்திற்கு வரும் போது ‘உந்து மதகளிற்றன்’ பாசுரத்தில் இருந்திருப்பார். நீ உன் கை வளைகள் ஒலிக்கக் கதவைத் திறந்தவுடன் ‘செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்பட் வந்து திறவாய்’ என்கிற பாசுர வரியின்படி, உன்னையே ஆண்டாளாய்க் கண்டிருப்பார். உடனே மூர்ச்சை அடைந்திருப்பார்’, என்று சமாதானம் சொன்னதாகக் குருபரம்பரையில் வருகிறது.
ஶ்ரீமத் இராமானுசருக்கு ‘திருப்பாவை ஜீயர்’ என்கிற பெயர் இருப்பது நாம் அறிந்ததே.
#திருப்பாவை #ஆண்டாள்