‘குத்துவிளக்கெரிய’ பாசுரத்தில் பறை வேண்டிப் பாடும் பெண்களிடம் சென்று சேர விடாமல் கண்ணனை இறுகத் தழுவிக்கொண்டிருக்கும் நப்பின்னையிடம் ‘அவனை விட்டுவிடு, எங்களுக்கும் கிருஷ்ணானுபவம் வேண்டும்’ என்று அப்பெண்கள் கெஞ்சுகிறார்கள் என்பது பொதுப்பார்வை.
ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெருமாள் காட்சிக்கு, அணுகுவதற்கு எளியவன். மதுரைக் கூடல் அழகர் பெருமாள் சன்னிதியில் வீற்றிருக்கும் சுந்தர ராஜப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் ‘வா, வந்து மடியில் அமர்ந்துகொள்’ என்று அணுகுதற்கும் அருள் வழங்குதற்கும் எளியனாய்க் காட்சியளிக்கிறான். அடியார்கள் எளிதாகச் சென்று அருள் பெற வழிசெய்பவனாய் அமர்ந்திருக்கிறான். ஆனால் அவன் அப்படி இருந்தும் அவனை எளிதில் அணுக விடாமல் அவனுக்கும் நமக்கும் இடையில் யாராவது இருப்பின் அவரிடம் நாம் வேண்டுவது என்ன? ‘நீங்கள் அனுபவம் பெற்றுவிட்டீர்கள். நாங்களும் பெற வேண்டும். எனவே கண்ணனை விடுவித்து அனுப்புங்கள்’ என்பதாக இருக்கலாம்.
சென்ற பாசுரங்களில் ‘நென்னலே வாய் நேர்ந்தான்’ என்று ‘நேற்றே எங்களுக்குப் பறை தருவதாகச் சொல்லியிருந்தான். அதற்காக நாங்கள் வந்துள்ளோம். நீங்கள் மட்டுமே அனுபவத்தைப் பெற்றுக்கொண்டு எங்களுக்கு மறுக்காதீர்கள். உங்கள் பணிவிடைகளால் கண்ணனைக் கட்டிப் போடாதீர்கள். நாங்களும் பறை பெற வேண்டும்’ என்னும் பொருள் ‘குத்து விளக்கெரிய’ பாடலின் மூலம் காணும் போது கிடைக்கிறது.
இன்னொரு பார்வையும் உண்டு.
திருக்கோஷ்டியூரில் தனக்கு அளிக்கப்பட்ட உய்யும் வழியை அனைவரும் உய்ய வேண்டி, தானே அனைவருக்கும் உகந்தளித்த எம்பெருமானார் நினைவும் இப்பாசுரத்தில் வரலாம். இறை நிலையைச் சில அமைப்புகள் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டிராமல், அனைவர்க்குமானதாக ஆக்கிய யதிராஜரின் அணுகுமுறை இப்பாடலில் மறைபொருளாகத் தெரிகிறது.
நப்பின்னை உறங்கும் பஞ்சசயனம் என்பது அழகு, குளிர்ச்சி, மென்மை, பரிமளம், வெண்மை என்கிற ஐங்குணகளை உடையது என்பது ஒரு பொருள்.
பி.கு: இப்பாசுரத்தினால், கோவில்களில் பெருமாளை நம்மிடமிருந்து பிரிக்கும் அறம் நிலையாத்துறை நினைவிற்கு வந்தால் அடியேன் காரணமில்லை.