‘ஏற்ற கலங்கள்’ பாசுரத்தில் முதல் முறையாகப் பெருமாளைத் துயில் எழுப்புவதாய் அமைந்துள்ளது என்பது பொதுப்பொருள்.
பாசுரத்தில் ஆய்ப்பாடியின் பால் வளம் தெரிகிறது என்கிற பொதுப்பொருளை விட, என்பதை விட ‘மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்’ என்னும் தொடர் வேறுபாடில்லாமல் அனைவர்க்கும் அருள் சுரக்கும் கண்ணனின் பெருங்கருணையை உணர்த்துகிறது.
ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தில் ‘பண்டைக் குலத்தைத் தவிர்ந்து’, ‘கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று’ என்று பெரியாழ்வார் சொல்வது போல், முன்னர் எக்குலமாயிருந்தாலும், சங்கு சக்கரப் பொறி பெற்று அடியார் குழாத்தில் ‘இராமானுஜ தாசர்’களாய் ஆனபின், கண்ணனின் பார்வையில் அனைவரும் ஒருவரே என்கிற சமன்வயப் பார்வை இவ்விடத்தில் பேசப்படுகிறது. பெரிய, சிறிய கலன்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் எல்லாக் கலன்களுக்கும் ஒரே பாவனையில் பால் சொரியும் பசுக்கள் என்பது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமே.
‘ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்’ என்னுமிடத்தில் நந்தகோபனின் மகனே என்று கண்ணனை விளிக்க என்ன காரணம் ? கண்ணனுக்கு நினைவு படுத்துகிறார்களாம். ‘நீ தோற்றமாய் நின்ற சுடர் தான். தனி முதல்வன் தான். ஆனாலும் இம்முறை நந்தகோபனின் மகனாய் இன்று பூவுலகில் அவதரித்துள்ளாய். எனவே வந்த வேலையைச் செய், எங்களுக்குப் பறை வழங்கு’ என்று சூசகமாகச் சொல்கிறார்களாம் ஆய்ச்சியர்.
‘மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண் வந்து அடி பணியுமா போலே போற்றி யாம் வந்தோம்’ என்னும் பிரயோகம் சுவையானது. எதிரிகள் உன் முன்னர் வந்து, தங்கள் வலிமை இழந்து உன்னிடம் சரண் அடைவது போல் நாங்கள் அடைக்கலம் தேடி வந்தோம்’, என்னும் பொருள் போல் தெரிந்தாலும் சொல்ல வந்த பொருள் அது இல்லை. ‘எதிரிகள் தங்கள் வலிமை இழந்து நின்று உன்னிடம் அடைக்கலம் புகுந்தது போல் அல்லாமல், நாங்கள் எப்போதுமே உன்னை எம் தலைவனாகக் கொண்டு செயல்படுகிறோம். எனவே எங்களுக்குச் சரணாகதி அளிப்பாய்’ என்று பொருள் சொல்கிறது ஶ்ரீவைஷ்ணவ உரை.
‘ஓங்கி உலகளந்த’ பாசுரத்தில் வரும் வள்ளல் பெரும் பசுக்கள் குடத்தை வாங்கி வைப்பதற்குள் பால் சொரிந்து நிரப்பிவிடுகின்றன. பின்னர் எருமைகள் தங்கள் கன்றுகளை நினைத்தவுடன் மடிகளில் பால் சுரந்து இல்லத்தைச் சேறாக்குகின்றன என்பது ‘கனைத்திளங் கற்றெருமை’ பாசுரம். இன்றைய ‘ஏற்ற கலங்கள்’ பாசுரத்தில் கொள்ளும் கலத்தின் அளவுக்கேற்ப இல்லாமல் அனைத்து கலங்களுக்கும் ஒருபோலவே பால் சொரியும் பசுக்களைக் குறிக்கிறது. பால் சொரிதலை அருள் புரிதல் என்ற வகையில் பார்த்தால், கண்ணனின் பெருங்கருணை புலப்படும்.
முன் வந்த பாசுரங்களில் பல ஆச்சார்யர்கள் எழுப்பப்பட்டனர். பின்னர் வந்த சில பாசுரங்களால் திருமகள் எழுப்பப்பட்டாள். தற்போது பெருமாளே எழுப்பப்படுகிறார். பின்வரும் பாடல் நமக்கு நினைவூட்டுவதும் இதையே :
‘என்னுயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கு
யான் அடைவே யவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளால் பெரும் பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை யவர்க்கு உரைத்த வுய்யக் கொண்டார்
நாத முனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்று இவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே‘