‘அங்கண் மாஞாலத்து அரசர்’ பாசுரத்தில் நோன்பு நோற்பவர்கள் கண்ணனைச் சென்று சேர்ந்து, ‘எங்களைக் கடாக்ஷித்தருள வேணும்’ என்று வேண்டுகிறார்கள் என்பது பொதுப்பொருள். சரணாகதித் தத்துவம் பேசப்படுகிறது என்பது வெளிப்படை.
இப்பாசுரத்தில் உள்ள சில சொற்கள் ஆழ்ந்த பொருளுடையவை. சிலவற்றைப் பார்ப்போம்.
‘அங்கண்’ என்னும் சொல்லை இருமுறை பயன்படுத்துகிறாள் ஆண்டாள். பெரிய இடத்தை உடைய உலகம் என்னும் பொருளிலும், அழகிய கண்கள் என்னும் பொருளிலும் வந்து ‘அங்கண்’ அழகு சேர்க்கிறது.
‘உலகின் பல இடங்களிலும் அரசாட்சி செய்யும் அரசர்கள் தங்கள் கர்வத்தை விட்டொழித்து உன் வாசலில் வந்து நிற்பது போல் நாங்கள் வந்து நிற்கிறோம்’ என்பது ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் அடி நாதத்தைத் தொடுகிறது. பெருக்காரணை ஸ்வாமி என்னும் வைணவ அடியாரின் திருப்பாவை காலட்சேபத்தில் எட்டு வகையான கர்வங்களை / குற்றங்களைச் சொல்கிறார். ‘இவை அனைத்தையும் விட்டு உன்னிடம் நாங்கள் வந்து சரணாகதி செய்துகொண்டுள்ளோம்’ என்று ஆய்ச்சியர் வடிவிலான அடியார்கள் தெரிவிக்கிறார்கள் என்கிறார்.
எட்டு வகையான குற்றங்கள்:
- உடலும் ஆத்மாவும் ஒன்றே என்ற எண்ணம்
- ஜீவாத்மாக்கள் சுதந்திரமானவர்கள் என்கிற எண்ணம்
- திருமால் தவிர ஏனைய தெய்வங்களால் / தேவதைகளால் மோக்ஷம் அளிக்க முடியும் என்கிற எண்ணம்
- திருமாலைத் தவிர இன்னொருவரிடம் நாம் அடிமைகளாய் இருக்கலாம் என்னும் எண்ணம்
- சரணாகதி தவிர மற்றைய வழிகளிலும் மோக்ஷம் பெறலாம் என்பது
- சிற்றின்பத்தில் ஈடுபாடு
- நமது சுய சக்தியாலேயே நாம் செயல்படுகிறோம் என்கிற எண்ணம்
- திருமால் அடியாருக்கு உரிய மரியாதை தராமல் அவமானப்படுத்துவது
‘நாங்கள் அகந்தை அழிந்து, தூயோமாய், தூமலர் தூவித் தொழுது, நாவினால் பாடி, மனத்தினால் சிந்தித்தபடியே உன் வாசல் வந்து விட்டோம். எனவே அழகிய, சிவந்த உன் கண்களை மெல்லத் திறந்து எங்களைக் காண்பாய் ( ‘செங்கண் சிறுச்சிறுதே எங்கள் மேல் விழியாவோ’)’ என்கின்றனர் ஆய்ச்சியர். பெருமாளின் கண்ணொளி பூரணமாய்த் தங்கள் மேல் பட்டால் அதன் அருள் வெள்ளத்தைத் தாங்க முடியாது என்பதால் சிறிது சிறிதாக எங்களைக் கடாக்ஷித்து அருள வேணும்’ என்று ஆய்ச்சியர் கூறுகிறார்கள் என்பர் உரையாசிரியர்.
பாசுரத்தில் இன்னும் சில சுவைகள் உள்ளன.
‘திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்’ என்னுமிடத்தில், சூரியனும் சந்திரனும் போன்ற உன் இரு கண்களாலும் எங்களை நோக்குக என்று வேண்டுகிறார்கள் என்று கொள்வது ஒரு சுவை. ‘கதிர் மதியம்’ என்று அவனது முகத்தை இன்னொரு பசுரத்தில் சொல்கிறாள் ஆண்டாள்.
‘ஒரே நேரத்தில் சூரியனும், சந்திரனும் எழுந்தால் சிவந்த தாமரை மலர் தனது இதழ்களை முழுவதும் திறவாமலும் அதே நேரம் முழுவதும் மூடாமலும், பாதி திறந்து பாதி மூடிய வகையில் இருக்கும். அதைப் போல்,உன்னுடைய கரியவாகிப் புடை பறந்து மிளிர்ந்து செவ்வரியோடிய நீண்ட அப்பெரியவாய கண்கள் (அமலனாதிபிரான்) பாதி திறந்த நிலையிலும் பாதி மூடிய நிலையிலும் இருக்கும் வகையில் எங்களைக் கண்டு அருள் புரிவாய். ஏனெனில் உன் முழுப் பார்வையையும் நாங்கள் தாங்க மாட்டோம்’ என்பதாகக் கொள்வது இன்னொரு சுவை.
பெரியாழ்வாரும் கண்ணன் தனது மகளைத் (ஆண்டாள்) திருமணம் செய்துகொண்டதைக் குறிக்கும் வகையில் இவ்வாறு ‘செங்கண் மால் கொண்டு போனான்’ என்கிறார்:
‘ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்திருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால் தான் கொண்டு போனான்’
கண்ணனின் பாதி மூடிய கண்கள் அடியார்களின் குற்றங்களைக் காணாத நிலையையும், பாதித் திறந்த கண்கள் அடியாரின் பக்தி / சரணாகதி இவற்றை மட்டும் கண்ணுறும் நிலையிலும் இருக்கின்றன என்று கொள்வது இன்னொரு சுவை. ‘குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்’ என்னும் வள்ளுவர் பார்வையும் ஈண்டு நோக்கத்தக்கது.
கண்ணன் அடியாரை ஏன் நோக்க வேண்டும்? சென்ற பாடலில் திருமகள் வழியாகக் கண்ணனை அடைந்தாகிவிட்டது. மீதம் இருப்பது கண்ணனின் அருள் பெறுதல் மட்டுமே. சரணாகதிக்கான அத்தனை கிரியைகளையும் செய்தாகிவிட்டது. ஆச்சார்யர்கள எழுப்பி. திருமகளையும் வேண்டி இவர்களை முன்னிட்டு ‘பறை’ கேட்டாகிவிட்டது. இனி கண்ணன் அருள் / மோக்ஷம் மட்டுமே கிட்ட வேண்டும். அதற்குக் கண்ணன் துயில் எழ வேண்டும். துயில் எழுவதற்கு அடையாளமாக அவன் கண்களைத் திறக்க வேண்டும். அதே நேரம் கண்களை முழுதுமாகத் திறந்துவிடவும் கூடாது. ‘செங்கண் சிறுச் சிறுதே எம்மேல் விழியாவோ’ என்று சிறிது சிறிதாகத் திறக்க வேண்டும். அதற்கான பாசுரம் இது.
‘பள்ளி’ என்னும் சொல்லும் கவனிக்கத்தக்கது. ஜைனத் துறவியர் உண்டு, உறங்கிக் கல்வி போதித்த இடங்கள் பள்ளி என்று அறியப்பட்டன. உறங்குதல் என்னும் பொருளில் ‘பள்ளிக் கட்டின் கீழே’ என்று ஆண்டாளும் பாடுகிறாள். ( நமது பள்ளிகளில் நாம் உறங்குவதும் இதனால் தானோ?)
பி.கு.: எங்கும் உள்ள கடவுளைக் காணக் கோவிலுக்கு ஏன் போக வேண்டும்? விஸ்வரூப தரிசனம் எதற்கு என்று கேட்பவர்களுக்கு இப்பாடலைக் காட்டலாம். கோவிலுக்குப் போவது நாம் பெருமாளைப் பார்க்க அல்ல, அவன் நம்மைப் பார்க்க. ஆண்டாளுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்குப் ‘பகுத்தறிவு’ தடுக்கிறது. ஹூம்.