‘மாரி மலை முழைஞ்சில்’ பாசுரத்தில் பெருமாள் எழுப்பப்பட்டுக் கண்விழிக்கிறார் என்பது பொதுப்பொருள். எவ்வாறு எழுந்து வருகிறார், அவர் என்ன செய்ய வேண்டும் என்று ஆய்ச்சியர் விரும்புகிறார்கள் என்பது இப்பாசுரத்தில் தெளிகிறது.
விடாது பெய்யும் மழையின் காரணகாகக் குகைக்குள் கிடந்து உறங்கும் ஆண் சிங்கம், மழை நின்றவுடன், சோம்பல் முறித்து, பிடரி மயிர் சிலிர்க்க, கண்களில் தீப்பொறி பறக்க எழுந்து வருவதைப்போல் கண்ணனே நீ எழுந்து வருக. அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரணத்தை ஆராய்ந்து அதற்கேற்றவாறு அருள்வாயாக என்று ஆய்ச்சியர் வேண்டுவதாய் அமைந்துள்ள இப்பாசுரத்தில் திருமாலின் முக்கிய அவதாரமான நரசிம்மாவதாரம் சுட்டப்படுவது ஒரு சுவை.
கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் குழந்தையாய் வளர்ந்து, விளையாடி, வாலிபம் எய்தி, பின்னர் பாரதப் போரில் பெரும் பங்காற்றி நீதியை நிலைநாட்டுகிறான். இராமாவதாரமும் அப்படியே. ஆனால், நரசிம்மாவதாரத்தில் பெருமாள் தோன்றி, உடனே பேருருக்கொண்டு, இரணியனை அழித்து, பிரகலாதனுக்கு அருள் புரிந்து சென்றான். தோற்றத்தின் காரணம் மிகச்சிறிய காலத்திலேயே நிறைவடைகிறது. அதுபோல், நீ இராமனாகவோ, கண்ணனாகவோ எழுந்து வராமல், நரசிம்மனாய் வந்து, உடனே சிம்மாசனத்தில் எழுந்தருளி, எங்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்று. கால தாமதம் வேண்டாம் என்று ஆய்ச்சியர் வேண்டுவது போல் அமைந்துள்ளது பாசுரம்.
இன்னொரு சுவை, கொடிய சீற்றத்துடன் துலங்கும் சிங்கம், தனது குட்டிகளிடம் அன்புடனே இருக்கும். அதுபோல், கொடிய இரணியனை வதம் செய்யும்போது கடுஞ்சினத்துடன் இருந்த நரசிங்கம், பிரகலாதனைப் பார்த்தவுடன் மனம் கனிந்துருகி அவனுக்கு அருள் மாரி பொழிந்து நின்றது. அதுபோல் நீயும் எங்களுக்கு அருள் புரிவாய் என்று ஆய்ச்சியர் வேண்டுகிறார்கள்.
ஆண்டாள் கண்ணனை நரசிம்மமாகவே பார்க்கிறாள் என்பது திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே தெரிகிறது. ‘ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்’ என்று கண்ணனை அழைக்கிறாள்.
‘மாரி மலை’ பாசுரத்தில் ‘மன்னிக் கிடந்து உறங்கும்’ என்னுமிடத்தில் ‘மன்னி’ ( பொருந்தி இருந்து ) என்னும் பயன்பாடு உற்று நோக்கத்தக்கது. பல ஆழ்வார்களுக்கு இந்த ‘மன்னி’யின் பால் ஒரு ஈர்ப்பு உள்ளது.
தேரழுந்தூர்ப் பாசுரத்தில் திருமங்கையாழ்வார் ‘அடியார்க்கு ஆ ஆ என்றிரங்கித் தென் அழுந்தையில் மன்னி நின்ற தேவாதி தேவன்’ என்றும், நம்மாழ்வார் ‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்றும் பாடுகிறார்கள்.
எழுந்து வந்த சிங்கம் நீதி பரிபாலனம் செய்வது போல் அழகிய சிம்மாசனத்தில் அமர்ந்து என்ன செய்ய வேண்டும்? ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ’ என்று ‘எமது சரணாகதி விஷயமான விண்ணப்பத்தைச் சற்று ஆராய்ந்து முடிவெடுப்பீர். பிரகலாதனின் பக்திக்கு இரங்கி அவனுக்கு அருள் புரிந்தது போல், எமக்கும் அருள்வீர்’ என்று ஆய்ச்சியர் வேண்டுகின்றனர்.
என்னதான் ஆசார்யர்கள், திருமகள் என்று இவர்களை முன்னிட்டு சரணாகதி செய்துகொண்டாலும், பெருமாள் தானும் ஆராய்ந்தே முடிவெடுக்கிறான் என்பது போல் அமைந்துள்ள இப்பாசுரம் ஶ்ரீவைஷ்ணவ சரணாகதி தத்துவத்தின் குறியீடு.