‘ஒருத்தி மகனாய்’ பாசுரத்தில் ‘ஒருத்தி’ என்னும் சொல் இருமுறை வந்து, முதல் முறை தேவகியையும், பின்னர் யசோதையையும் குறிப்பதாய் வருகிறது. கண்ணனுடன் ஒரு இரவு மட்டுமே கூட இருந்த தாய்க்கும், இளமைப்பருவம் முழுதும் வளர்த்த தாய்க்கும் ஒரே பெயரிட்டு அழைக்கிறாள். பெற்ற தாயும், வளர்த்த தாயும் ஒரு நிறை சமானமானவர்கள் என்பதை உணர்த்தவே ஒரே சொல்லைப் பயன்படுத்தினாள் ஆண்டாள்.
கண்ணனைக் கண்ட ஆய்ச்சியர் அவனது விருத்தாந்தங்களைச் சொல்லத் துவங்குகிறார்கள். ‘நீ கம்சனின் வயிற்றில் நெருப்பென்ன நின்றாய்’ என்கிறார்கள். இதைச் சொல்ல வேண்டிய தேவை என்ன? ‘நீ யாரென்பதை உணர்ந்துகொள். நீயே ஊழி முதல்வன். ஆனாலும் இவ்வவதாரத்தில் பல செயல்களைச் செய்ய வந்தாய். அவற்றுள் ஒன்று கம்ஸ வதம். செய்துவிட்டாய். ஆனால், நீ வந்த காரியம் இன்னும் முடிவுறவில்லை. எங்களுக்குப் பறை கொடு’ என்று நினைவூட்டுகிறார்களாம்.
‘அருத்தித்து வந்தோம்’ என்று சொல்கிறார்களே ஆனால் ஒரு அர்ச்சனையும் செய்யவில்லையே என்றால், சென்ற பாசுரத்தில், ‘தென் இலங்கைக் கோமானைச் செற்றாய் திறல் போற்றி, சகடம் உதைத்தாய் புகழ் போற்றி, கழல் போற்றி, வேல் போற்றி, குணம் போற்றி’ என்று பல வகையான அர்ச்சனைகள் செய்தார்களே, அதைச் சொல்கிறார்கள். அதையும் நினைவூட்டுகிறார்கள். போற்றிப் பாடலும் முடிந்தது, ஆகவே பறையை நினைவில் கொள்க’ என்று பார்ப்பது ஒரு சுவை.
‘அருத்தித்து வந்தோம், ஆகையால் பறை தா’ என்று கேட்கவில்லை. ‘அவ்வாறு வந்தோம், பறை தருவதாக இருந்தால் கொடு, இல்லையேல் உன் சேவையே ( கைங்கர்யமே) எங்களுக்குப் போக்யம்,’ என்கிற பொருளில் ‘பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி ‘ என்று சொல்கிறார்கள் ஆய்ச்சியர்.
வைஷ்ணவர்களுக்கு மோக்ஷமே பிரதானம். அதையும் விட முக்கியமானது கைங்கர்யம் என்கிற சம்பிரதாய நெறி முன்னிறுத்தப்படுகிறது இப்பாசுரத்தில்.