‘கறவைகள் பின் சென்று’ பாசுரம் ஆய்ச்சியர் தம் அஞ்ஞானத்தைப் பறை சாற்றித் தங்களுக்குச் சரணாகதி அளிக்க வேண்டும் என்று கேட்பதாக அமைகிறது.
வைஷ்ணவ காலட்சேபங்களில் இப்படிச் சுவைகாகச் சொல்வதுண்டு:
‘கூடாரை வெல்லும்’ பாசுரத்தில் அணிகலன்கள் வேண்டும், பாற்சோறு உண்போம், புத்தாடை உடுப்போம் என்று ஆய்ச்சியர் கண்ணனிடம் கூறினர். அதற்குக் கண்ணன் ‘இம்மாதிரியான சரீர வஸ்துக்களுக்காகவா நீங்கள் என்னிடம் வந்தீர்கள்?’ என்று பரிகாசம் செய்தானாம். அதற்கு ஆய்ச்சியர்,’ மன்னிக்க வேணும், நாங்கள் கல்வியறிவில்லாத, அறிவு குறைந்த ஆய்ச்சியர். எனவே தவறாகக் கேட்டுவிட்டோம். எங்களுக்கு வீடுபேறு வேண்டும். ஆனால், உன்னிடமுள்ள அன்பினால் நாங்கள் உன்னைப் பல செல்லப் பெயர்களாலும், ஒருமையிரும் அழைத்துள்ளோம். இதனால் நீ கோபமுறாமல், எங்களைக் காப்பாயாக’ என்று வேண்டினார்களாம்.
‘உந்தன்னோடு நமக்கு இங்கு உறவு ஒழிக்க ஒழியாது’ என்பதால் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்குமான பிரிக்க முடியாத உறவு பேசப்படுகிறது.
ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் நவ-வித சம்பந்தம் என்று சொல்வர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் ஒன்பது வகையிலான உறவு நிலைகள் உள்ளன என்பது கோட்பாடு. அவை பின்வருமாறு:
- ரக்ஷ்ய் – ரக்ஷ்யக (காப்பவன் – காக்கப்படுபவன்)
- பிதா – புத்ர (தந்தை – மகன்)
- சேஷ – சேஷி (ஆண்டான் – அடிமை)
- பர்த்ரு – பார்யா (கணவன் – மனைவி)
- ஞாத்ரு – ஞேய (அறிபவன் – அறியப்படுபவன்)
- ஸ்வ – ஸ்வாமி (உடையவன் – உடைமை)
- சரீர – சரீரி (உடல் – உயிர்)
- ஆதார – ஆதேய (தாங்குபவன் – தாங்கப்படுபவன்)
- போக்த்ரு – போக்ய (அனுபவிப்பவன் – அனுபவிக்கப்படுபவன்)
‘உன்றன்னைப் பிறவி பெறுந்தனை’, ‘உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது’,’அன்பினால் உன்தன்னைச் சிறு பேரழைத்தனவும்’ என்று மூன்று முறை இப்பாசுரத்தில் ஆய்ச்சியர் கண்ணனை முன்னைலையில் குறிப்பிடுகின்றனர் (Second Person Singular). இது நேரடியான பேச்சை உணர்த்துவதாயும், ஜீவாத்மா – பரமாத்மாவிற்கிடையில் உள்ள அணுக்கத் தொடர்பை உணர்த்துவதாயும் உள்ளது.